27/11/2017

குஜராத்திகளுக்கு மட்டும் சலுகையா ? ஐஐடி நுழைவுத்தேர்வுகள் குஜராத்தி மொழியில் மட்டும் நடத்தப்படுகின்றன. அத்தேர்வுகளை தமிழில் ஏன் நடத்தப்படுவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்...


மேலும், ஐஐடி உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அனைத்து எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஐஐடி கூட்டு நுழைவுத்தேர்வுகள் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அடுத்த ஆண்டும் குஜராத்தி மொழியில் நடத்தப்படவுள்ளது. தமிழ் மொழியிலும் அத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வரும் நிலையில் அதை ஏற்க மத்திய இடைநிலை கல்வி வாரியம் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி), தேசியக் கல்வி நிறுவனங்கள்(என்ஐடி), இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐஐடி), இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வுகள் (IIT - JEE) நடத்தப்படுகின்றன. ஐஐடி தவிர்த்த மற்ற கல்வி நிறுவனங்களில் முதன்மைத் தேர்வின் அடிப்படையிலும், ஐஐடி மற்றும் அதற்கு இணையான கல்வி நிறுவனங்களில் இறுதி நிலைத் தேர்வான அட்வான்ஸ்டு தேர்வின் அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இத்தேர்வுகள் தொடக்கம் முதலே ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.

2013-ம் ஆண்டில் குஜராத்தியிலும் இத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை விடுத்ததை ஏற்று அதற்கு அடுத்த ஆண்டு முதல் அம்மொழியிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஐஐடி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் ஒரே மாநில மொழி குஜராத்தி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.