பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அஷ்டலட்சுமி பிளாட் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி மல்லிகா (வயது 40). இவர் நேற்று இரவு காட்டுப்பாக்கம் மெயின் ரோடு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா கூச்சலிட்டார். உடனே அங்கு பொதுமக்கள் திரண்டனர்.
அப்போது அந்த வழியாக குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வந்து கொண்டிருந்தார். கூட்டத்தை பார்த்ததும் அவர் என்னவென்று விசாரித்தார். உடனே மல்லிகா நடந்தவற்றை கூறினார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் கொள்ளையனை விரட்டி சென்றார். அப்போது கொள்ளையர்கள் குமணன் சாவடி சந்திப்பு குதியில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தான். இன்ஸ்பெக்டர் சார்லஸ் விரட்டி வருவதை பார்த்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஆளுக்கொரு திசையில் தப்பி ஓடினார்கள். அப்போது ஒருவனை இன்ஸ்பெக்டர் சார்லஸ் துரத்தி பிடித்தார். அவன் இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றான். இதனால் இருவரும் ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
ஒரு கட்டத்தில் கொள்ளையன் கத்தியை எடுத்து இன்ஸ்பெக்டரை குத்த முயன்றான். இதனால் அவர் துப்பாக்கியை எடுத்து கொள்ளையனை நோக்கி நீட்டினார். இதனால் பயந்து போன கொள்ளையன் கத்தியை கீழே போட்டான். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டரின் டிரைவரும் போலீஸ்காரருமான ஜெயபால், நுண்ணறிவு போலீஸ் டார்வின் ஆகியோர் கொள்ளையனை பிடித்துக் கொண்டனர். அங்கு திரண்ட பொதுமக்கள் கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் கொள்ளையனை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவனது பெயர் இர்பான் (வயது 35) என்றும், சென்னை பட்டாளம் ஷேக் மெய்தீன் தெருவை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது. தப்பி ஓடிய அவனது கூட்டாளி பெயர் தெரியவில்லை.
மல்லிகாவிடம் நகை பறிப்பதற்கு முன்பு அம்பத்தூர் மற்றும் அய்யப்பன் தாங்கல் பகுதியில் வழிப்பறி செய்துள்ளனர்.
கைதான கொள்ளையனிடம் இருந்து 10 பவுன் நகை, மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது. துப்பாக்கி முனையில் கொள்ளையனை மடக்கி பிடித்த இன்ஸ்பெக்டர் சார்லசை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.