14/11/2017

நோபல் பரிசு உருவான கதை - ஆல்ஃப்ரெட் நோபல்...


ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும்.

ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும்.

நோபல் பரிசு ஒன்று தான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டு தோறும் கவுரவுக்கிறது.

நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலை பெற்றிருக்கிறது.

இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்து போன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப் போகும் களங்கத்தை துடைத்துக் கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு.

அந்த அழிவு சக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து..

அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல். 1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ் பெற்ற பொறியாளராகவும் கண்டு பிடிப்பாளராகவும் இருந்தவர்.

கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர்.

ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப் போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக் கொண்டார்.

தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதான போது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும்.

நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல் படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார். பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டு பிடித்திருந்தார்.

அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார்.

ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.

கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப் போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர்.

ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார்.

ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது.

அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல்.

ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது. மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார்.

கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டு பிடித்தார்.

அந்த தனது கண்டு பிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.

டைனமைட் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டு பிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.

ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட் தான் பேருதவி புரிந்தது.

அவரது கண்டு பிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத் தொடங்கியது.

ஆனால் ஆக்க சக்தியாக தான் உருவாக்கியதை அழிவு சக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல்.

1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால் நோபல் தான் இறந்து விட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவு சக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன.

அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்கு பின் உலகம் தன்னை பழிக்கப் போகிறது என்று கலங்கினார்.

அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவது தான் என்று முடிவு செய்தார்.

உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற் சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தை கொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார்.

1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார்.

அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார்.

இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.

ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின.

ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக் கொண்டது.

இன்று வரை 770 பேருக்கு மேல் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர்.

தன்னை அழிவு சக்தியை கண்டு பிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல்.

அவரது எண்ணம் வீண்போகவில்லை ஆண்டு தோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது.

உண்மையில் அவர் அழிவு சக்தியை கண்டு பிடிக்கவில்லை. ஆக்க சக்தியாக நோபல் கண்டு பிடித்ததை உலகம் தான் அழிவு சக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது.

இருப்பினும் டைனமைட்டை கண்டு பிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன.

அதனால் தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.