ஜெயலலிதாவின் அதிகார நிழலில் நின்றபடி சசிகலா சேர்த்த சொத்துக்களை இப்போது ஏழரை நாட்டு... இல்லையில்லை எழுபதரை நாட்டு சனியே போட்டு ஆட்டமாய் ஆட்டுகிறது.
சசி-தினாவின் சொத்துக்களை கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறை ரெய்டு வெச்சு செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் கோடநாடிலிருக்கும் கொடநாடு எஸ்டேட் மற்றும் கர்சன் எஸ்டேட் இரண்டும் அடக்கம்.
இந்நிலையில் கோடநாடு எஸ்டேட்டை ஜெயலலிதாவுக்கு விற்ற கிரேக் ஜோன்ஸின் மகன், பீட்டர் கிரேக் ஜோன்ஸ் ‘அடிமாட்டு விலையில் எங்களிடமிருந்து வாங்கப்பட்ட கோடநாடு எஸ்டேட்டை மீட்க வழக்கு தொடர்வேன். தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை நாடுவேன்.’ என்று சவால் விட்டுள்ளார்.
அவர் பிரிட்டனை சேர்ந்த நாங்கள் எங்கள் தந்தை கிரேக் ஜோனுடன் கோத்தகிரி வந்தோம். 1975-ல் கோத்தகிரியிலுள்ள கோடநாடு டீ எஸ்டேட்டை வாங்கினோம். வர்த்தக தேவைக்காக சில வங்கிகளில் கடன் வாங்கினோம். கடனை அடைக்க, கோடநாடு எஸ்டேட்டை விற்க முயன்றோம். அப்போது சசிகலா மற்றும் ராமசாமி உடையார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்களை அணுகி விலை கேட்டனர். இது தொடர்பாக 5 முறை பெங்களூருவில் பேச்சு நடந்தது. அதில் இரண்டு முறை நானும் பங்கேற்றேன். பேச்சுவார்த்தையின் போது சசி தரப்பு விதித்த சில நிபந்தனைகளை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் வர்புறுத்தினர். எனவே எஸ்டேட்டை விற்க முடியாது என்றோம். உடனே எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக பெங்களூரு போலீஸில் புகார் அளித்தோம். பின்னர் அதை வாபஸ் பெற்றோம்.
பின் மீண்டும் விற்பனை பேச்சுவார்த்தை அவர்களுடன் ஆரம்பமானது. எஸ்டேட்டின் விலையாக 9.5 கோடி ரூபாய் கூறினேன். ஆனால் அவர்களோ 7.5 கோடி ரூபாய் தருவதாக கூறினர். பின் வங்கியிலிருந்த எங்களின் கடன்களை அடைப்பதாகவும் உறுதி தந்தனர். இதை நம்பி எஸ்டேட்டை விற்க முன்வந்தோம்.
முதலில் இந்த எஸ்டேட்டை உடையார் குடும்பத்தினருக்கு கைமாற்றினர். பின் குறுகிய காலத்தில் மீண்டும் 7.6 கோடி ரூபாய் மதிப்பில் சசிகலா குடும்பத்துக்கு கோடநாடு எஸ்டேட் கைமாறியதாக தெரிய வந்தது. எங்களுக்கு வாக்கு தந்தபடி வங்கி கடனையும் அடைக்கவில்லை.
இந்த எஸ்டேட் நட்டத்தில் விற்கப்பட்டது எங்கள் குடும்பத்தை வாட்டியது, கூடவே கடன் விஷயத்திலும் ஏமாற்றப்பட்டதால் வருந்தினோம். 2008-ல் எங்கள் அப்பா இறந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா இறந்து, சசிகலாவும் சிறையில் இருக்கிறார். இப்போது ஒரு வழக்கில் அரசே இந்த எஸ்டேட்டை பறிமுதல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எங்களிடமிருந்து மிரட்டி வாங்கிய எஸ்டேட்டை மீட்க மத்திய அரசை நாடப்போகிறேன். வழக்கு தொடரும் ஆலோசனையும் நடக்கிறது. என்று தொடை தட்டியுள்ளார்.
ஜூனியர் ஜோன்ஸின் இந்த அறைகூவல் சிறையிலிருக்கும் சசியின் காதுகள் வரை போயிருக்கிறதாம். அவர் சில யோசனைகளை தந்திருக்கிறாரம் தன் டீமிடம். என்னாகுமோ, ஏதாகுமோ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.