இது இறுதி எச்சரிக்கை… எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவி சாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள். நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம் இழந்து, உயிர் துறந்து, கடல் கலந்து, நீர் நிறைந்து வரக் கூடிய பேரழிவைக் கண்களால் காணப் போகிறீர்கள்…
18,000 அடி உயர மலை உச்சியில் உட்கார்ந்து அவர் சொல்லுவதை, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார் மொழி பெயர்ப்பாளர்.
அவர் கண்களில் அத்தனை பயம். சொன்னவர், அமைதியாக எழுந்து அங்கு பச்சை பசுமை, காய்ந்த மஞ்சளாக மாறிக் கிடக்கும் செடிகளை தடவியபடி நடக்கிறார்.
ஸ்பெயின் நாட்டின் கடற்கரையொட்டி இருக்கும் சியரா நிவேடா (SIERRA NEVADA) பகுதியின் டே சேந்த மார்டா ( de SANTA MARTA) மலைப் பகுதி. பல ஆயிரம் வருடங்களாக இங்கு வசித்து வரும் பூர்வகுடிகளான “கோகி” (KOGI) மனித சமுதாயத்துக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்கிறார்கள்.
எந்த ஆராய்ச்சியாளர்களும் இதுவரை ஆராய்ச்சி செய்திடாத ஓர் இனம் கோகி. அவர்களை அத்தனை எளிதாக நெருங்விட முடியாது.
அப்படியானவர்கள், 1990-ம் ஆண்டு, பிபிசி நிறுவனத்தின் ஆவணப்பட இயக்குநர், ஆலன் எரெரா ( ALAN ERERA ) என்பவரை அழைக்கிறார்கள். தங்களின் இளைய சகோதரர்களான பிற மனிதர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறார்கள். அந்த செய்தி…
இளைய சகோதரர்களுக்குப் புரியவில்லை. தாய் பூமியை அதிகளவில் காயப்படுத்தி வருகின்றனர். அவளின் இதயம் காயப்படுகிறது. மண்ணைத் தோண்டுவதை, மரங்கள் வெட்டுவதை, கடலை அசுத்தப்படுத்துவதை, இயற்கையை அழித்து நீங்கள் ஏற்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துங்கள். இல்லையென்றால் சூரியன் கோபம் கொள்வான்… வெப்பத்தை கக்குவான். பனிமலைகள் உருகும். நிலங்கள் சரியும். தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்படும். இன்னும், இன்னும் அழிவுகளை இந்த உலகம் சந்திக்கும். ஆகவே, தயவு செய்து நிறுத்திவிடுங்கள்…
உலகின் இதயத்திலிருந்து… (FROM THE HEART OF THE WORLD) என்ற அந்த ஆவணப்படத்தில் அவர்கள் சொன்ன பல விஷயங்கள் நாம் கடந்து வந்த ஆண்டுகளில் நடந்தேறியுள்ளன. பல ஆண்டுகள் கழித்து ஆலனுக்கு அவர்களிடமிருந்து மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. அது “அலுனா” (ALUNA) என்ற ஆவணப்படத்துக்கு வித்திட்டது. அது மனித சமுதாயத்தின் இறுதி எச்சரிக்கைக்கானது.
அது மிக மிக மிக நீண்ட வருடங்களுக்கு முன்பு… அப்போது பூமியில் ஏதுமில்லை. ஏன், சூரிய, சந்திரன் கூட இல்லை. பூமி, முழுக்க முழுக்க நீரால் நிரம்பியிருந்தது. நீருக்கு சில உணர்வுகள், எண்ணங்கள் இருந்தன. எண்ணங்கள் இன்றி, வாழ்வில்லை என்று நம்புகிறார்கள் கோகிகள்.
அப்படியான எண்ணங்களோடு அவர்கள் உரையாடுகிறார்கள். தேங்கி நிற்கும் நீரின் எண்ணங்களோடு அவர்கள் உரையாடும்போது, நீர் சலசலக்கிறது. இதை “மாமோ”க்கள் எனும் குருமார்கள் செய்கிறார்கள்.
ஒரு “கோகி”, “மாமோ”வாக மாற வேண்டுமென்றால் 18 ஆண்டுகள் அவர் வெளிச்சத்தைப் பார்க்காமல் இருக்க வேண்டும். எல்லாவற்றுடனும் எண்ணங்களோடு மட்டுமே உரையாட பழக வேண்டும். இந்த எண்ணங்களைத்தான் அவர்கள் தெய்வமாக கருதுகிறார்கள். அது தான் “அலுனா”…
இவர்களின் இந்தக் கூற்றுகள் வெற்று பிதற்றல்கள் கிடையாது. இவர்கள் வசித்து வரும் சாந்தே மார்டா மலைப்பகுதியை அறிவியல் ரீதியாக “பூமியின் பிம்பம்” என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
பனிமலை, பசுமை மாறாக் காடுகள், பாலைவனம் என பலதரப்பட்ட நில அமைப்புகளும் ஒரே இடத்தில் இருக்கின்றன. இங்கு ஏற்படும் மாற்றங்கள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிப்பதாகச் சொல்கிறார்கள். தென் அமெரிக்க கடற்கரையை ஒட்டி இருக்கும் ஆண்டஸ் (ANDES ) மலைத் தொடரின் ஒரு பகுதி தான் சாந்தே மார்டா. ஆனால், அது மட்டும் தனியான டெக்டோனிக் அடுக்குகளைக் ( TECTONIC PLATES) கொண்டுள்ளது பெரும் ஆச்சர்யம்.
வழக்கமாக பூர்வகுடிகளிடம் காணப்படும் கோபம் இவர்களிடம் அதிகமில்லை. இன்றும் கூட பிற மனிதர்களை சகோதர்களாகத் தான் கருதுகிறார்கள். தங்களின் கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் சில திட்டங்களை மிக மென்மையான முறையிலேயே இவர்கள் எதிர்த்தனர். பிபிசியின் முதல் ஆவணப்படம் வெளியானதும், ஸ்பெயின் நாட்டு மன்னர் இவர்களை நேரடியாகச் சென்று சந்தித்தார்.
அது முதல், ஸ்பெயின் நாட்டில் பதவியேற்கும் எந்த பிரதமரும் இவர்களை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கோகிக்களின் மூதாதைய இனம் “டைரோனா” ( TAYRONA ) பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மலையடிவாரத்தில் ஒரு நகரத்தையே அமைத்து இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு விலையுயர்ந்த தங்கம் உட்பட பல புதையல்கள் மண்ணில் இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், அவர்களின் விலைமதிப்பற்ற வரலாற்று சுவடுகளும் அங்கிருக்கின்றன. அதை ஆராய முற்பட்ட ஸ்பெயின் அரசை இவர்கள் எதிர்த்தனர். இருந்தும் அரசாங்க ஆதரவோடு சில கொள்ளைக்கார கும்பல் புதையல் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தங்கள் வரலாறுகளைப் பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர் கோகிகள்.
தங்களின் வரலாற்றைக் காக்க போராடும், சில ஆயிரங்களைக் கொண்ட ஓர் இனம்… தங்கள் வரலாற்றைத் தொலைத்து நிற்கும் ஒரு தேசிய இனம்… கீழடியில் நடக்கும் “வரலாற்றுத் தொலைப்பு” நிகழ்வை இதோடு பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
நாங்கள் இந்த இயற்கையின் விதைகள்… சகோதரர்களே உங்கள் பேராசையின் பொருட்டு, நீங்கள் வாழும் இந்த பூமியை, நீங்களே அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஒரு பேரழிவுக்குத் தயாராகுங்கள்… என்று தீர்க்கமான பார்வையோடு சொல்கிறார் , 102 வயதான கோகி “மாமோ”..
மீண்டும் கண்களை மூடி தண்ணீரோடு உரையாடத் தொடங்குறார். இந்த முறை அதில் அதிகமான அதிர்வலைகள் ஏற்பட்டன… அது அலுனா...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.