நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களில் பெண் வேடமணிந்த நபர்கள் லிப்ட் கேட்பதுபோல் மடக்கி, வழிப்பறி செய்யும் சம்பவம் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு இருந்துவந்தது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநரை பெண் வேடமணிந்த ஆண், லிப்ட் கேட்பதுபோல் மடக்கி, கட்டிப்போட்டு கத்தி முனையில் ரூபாய் 37ஆயிரம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி, சென்னையிலிருந்து பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள அட்டை தயாரிக்கும் ஆலைக்கு புறப்பட்டது. லாரியை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த விலாம்பட்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் ஓட்டி வந்தார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே இருக்கும் கத்திகாரன்பட்டி பிரிவை கடந்து சித்தாநத்தம் ஆற்றுப் பாலத்துக்கு வரும்போது, சாலையின் ஓரத்தில் பெண் வேடமணிந்த ஒருவர், வண்டியை ஓட்டி வந்த சுந்தரலிங்கத்திடம் லிப்ட் கேட்டார். அதையடுத்து, லாரியை நிறுத்திய சுந்தரலிங்கத்தை, பெண் வேடம் அணிந்த நபர் நின்ற கொஞ்ச தூரத்தில் மறைந்து நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்கள் ஓடிவந்து கத்தி முனையில் மிரட்டி கை, கால்களை கட்டிப்போட்டு லாரியில் இருந்த ரூபாய் 37ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.
இதையடுத்து, மணப்பாறை காவல்நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் பேரில், திருச்சி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில். பெண் வேடம் அணிந்து வழிப்பறியில் ஈடுபட்டது, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதி அம்மாபேட்டையைச் சேர்ந்த ஏகாந்தம் மகன்கள் அறிவழகன், மகேஷ் (எ) மகேந்திரன் மற்றும் கண்டியூர் காந்திநகரைச் சேர்ந்த முனியாண்டி மகன் அருணாசலம் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணையில் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைத்து இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், இதுபோன்று பலரிடம் வழிப்பறி செய்துள்ளதாகவும் மூன்றுபேரும் ஒப்புக்கொண்டனர். அதையடுத்து, குற்றப்பிரிவு போலீஸார், சம்மந்தப்பட்ட மூன்று பேரையும் மணப்பாறை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
சாலைகளில் வாகன ஓட்டும் நபர்களைக் குறிவைத்து பெண் வேடமணிந்து லிப்ட் கேட்கும் பாணியில் கொள்ளையடித்த வழிப்பறி கும்பல் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.