08/11/2017

நாஸ்கா கோடுகள் - Nazca Lines...


அறிவியலின் அதீத வளர்ச்சியினால் மனிதன் பல புதிய விஷயங்களை கண்டுபிடிக்கிறான். செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என கண்டறிய முயற்சி செய்கிறான். அப்படிப் பட்ட அறிவியல் வளர்ச்சியால் கூட ஒரு சில மர்மங்களுக்கு விடை காண இயலவில்லை.  அதில் ஒன்று தான் நாஸ்கா கோடுகள்.

பெரு நாட்டின் தெற்கில் அமைந்திருக்கும் நாஸ்கா பாலைவனத்திலிருந்து, லிமா, பல்பா, பம்பாஸ் சமவெளிகளுக்கிடையே 400 கி.மீ., சுமார் தெற்கு கடற்கரை அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான கோடுகள் அவை. சாதாரணமாக நிலத்தின் மீது நின்று பார்த்தால் இவைகள் நீண்ட ஒற்றையடி பாதைகள் போலவும், வாய்க்கால்கள் போலவும் தெரியும். ஆனால் விமானத்தில் இருந்து பார்த்தால் இந்த கோடுகள் விமானங்கள் தரையிறங்கும் ஓடுதளம் போலவும், குரங்கு, நாய், மனிதன், பறவை போன்ற உருவங்கள் போல காணப்படும்.

1920 ல் இந்த வழியாக விமானத்தில் பறந்து சென்ற சுற்றுலா பயணிகளால் எதேச்சையாக கவனிக்கப்பட்டு கண்டறியப்பட்டவை இவை . அதுவரை இவைகள் சிறிய சாலைகள் போலவும், வாய்க்கால்கள் போலவும் பார்க்கப்பட்டு வந்தன.

இவை கி. மு. 600 முதல் கி. பி. 200 க்குள் வரையப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையானது என வல்லுனர்கள் கூறுகின்றனர். இதில் அதிசயம் என்னவென்றால் அன்றைய தொழில் நுட்பத்தில் இப்படிப்பட்ட சீரான நீண்ட, முறையான கோடுகளும் சித்திரங்களும் எவ்வாறு வரைய முடிந்தது என்பதுதான். அதனால் இந்த கோடுகளை பற்றி நிறைய கருத்துக்கள் நிலவுகின்றன.

இங்குள்ள நிலத்தில் கருப்பு நிற கற்கள் உள்ளன. 1998 ல் வந்த ஒரு வெள்ளத்தில் இந்த பகுதியின் தார் சாலைகள் பாதிக்கப்பட்டதாம். இருந்தும் ஆச்சர்யமாக இந்த கோடுகள் சிதையவில்லை. இதில் விமானம் ஓடுதளம் போன்ற ஒரு பட்டை 2 கி. மீ. நீளம் கொண்டது. இந்த பட்டை மிக சீராக நேரே செல்கிறது. இவ்வளவு தூரத்திற்கு இதை எப்படிதான் நிலத்தில் வரைந்தார்கள் என்று அதிசயிக்க வைக்கிறது.

இதைவிட ஆச்சர்யதக்க வகையில் மலைகளின் மீது பல கைகளை கொண்ட ஒரு உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அறிவியலாளர் ஜானி இஸ்லா கருத்துப்படி இந்த கோடுகள் கி. மு. 500 இல் பரகாஸ்  (Paracas) சமூகத்தினரால் உருவாக்கப்பட்டு கி. மு. 50 இல் நாஸ்க்கா சமூகத்தினரால் மேம்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது. டொர்பியோ மெஜ்ஜியா என்பவர்தான் இந்த கோடுகளைப் பற்றி 1927 இல் முதலில் ஆராய்ந்தார். அவர் இந்த கோடுகளை இன்கா சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளம் என்றார்.

அறிவியலாளர் மைக்கல் கேயே கூற்றுப்படி அன்றைய சமூகத்தினரால் இவைகள் தங்கள் மூதாதையருடன் தொடர்புபடுத்தும் பாதைகள் எனவும், தங்கள் விளை நிலத்திற்கு நீர் கொடுக்கும் பாதைகள் எனவும் நம்பப்பட்டதாம். மாரியா ரிச்சே எனும் கணிதவியலாளர் இக் கோடுகள் வானவியல் நாட்காட்டி என்கிறார். இந்த பட்டைகள் முக்கிய​ நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் இடத்தை குறிக்கின்றது என்கிறார். ஒரு சிலர் இந்த கோடுகள் வேற்று கிரக வாசிகளால் உருவாக்கப்பட்டவை என்று கூறுகின்றனர். வேறு சிலர் இவை வேற்று கிரக வாசிகளை தொடர்பு கொள்ள வரையப் பட்டதாக கூறுகின்றனர். இருப்பினும் இவை உருவாக்கப் பட்டதற்கான காரணங்களை கண்டறிய முடியவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.