16/12/2017

அதிமுக எடப்பாடி முகம் இறுகியது: பிடி பிடி என பிடித்த குமரி மாவட்ட பிஷப்...


ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்துக்கு நேற்று சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு மீனவ கிராமத்துக்கு கூட செல்லாமல் ஜூட் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு புறப்பட்டு சென்று விட்டார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கோட்டறு மறைமாவட்ட ஆயர் நஸ்ரேன் சூசை பேசிய போது முதல்வரின் முகம் இறுகியது.

மீனவர்களின் குரலாக இருந்தது அவரது பேச்சு அங்கு.

ஆயர் நஸ்ரேன் சூசை பேசியது...

மீனவர் மரணம் என்பது ஆண்டுதோறும் நடந்து கொண்டிருக்கிறது.

இயற்கைச் சீற்றம், இலங்கை கடற்படை தாக்குதல் என்று ஒவ்வோர் ஆண்டும் மீனவர்களை இழப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது 400, 500 மீனவர்கள் காணோம் என்ற இன்றைய நிலைமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஒரு பெரிய வல்லரசான நாட்டில் 30-ஆம் தேதி நடந்த இயற்கை சீற்றத்துக்குப் பிறகு 13 நாள்கள் கழித்தும் 465 மீனவர்களைக் காணவில்லை என்று அரசாங்கமே சொல்கிறது என்று சொன்னால் அது கேவலமாக இருக்கிறது.

அதற்கு இன்னொரு வார்த்தை எனக்குத் தெரியவில்லை என கூறினார். அப்போது முதல்வர் எடப்பாடியின் முகம் இறுகியது.

அதோடு விடாமல் தனது பேச்சை தொடர்ந்தார் அவர்...

உள்ளார்ந்த ஈடுபாட்டோடு மத்திய அரசு இந்த மீட்புப் பணிகளில் ஈடுபடவில்லை என்பதை நாங்கள் எல்லாருமே உணர்கிறோம்.

அன்றைக்கே துரிதமாகத் தேட ஆரம்பித்திருந்தால் இன்று காணாமல்போன மீனவர்களின் எண்ணிக்கையை 30, 20 என்று குறைத்திருக்கலாம். 20 மீனவர்கள் காணோம் என்ற எண்ணிக்கையைக்கூட எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.

இருந்தாலும் 460-க்கும் 20-க்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்று யாருக்கும் கணக்குப் பாடம் நடத்த வேண்டிய தேவை இல்லை.

இறந்த மீனவர்களுக்குத் தமிழக அரசு பத்து லட்சம் ரூபாய் அறிவித்திருக்கிறது. ஆனால், நடந்து போகும் தூரத்தில் இருக்கும் கேரள அரசு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. அதேபோல தமிழக அரசும் வழங்க வேண்டும் எனது எங்கள் கோரிக்கை.

அரசாங்கத்துக்கு சிக்கல்கள் இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களின் மனத்தில் என்ன ஏக்கம் இருக்கிறது என்பதை உணர அரசாங்கம் முயல வேண்டும்.

மாண்டுபோன உயிர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது. மனித வாழ்க்கையில் இறந்து போனவர்களைத் திரும்பக் கொண்டுவர முடியாது. தங்கள் கணவன் கடலோடு போய்விட்டானே என்று துடித்துக்கொண்டிருக்கும் மீனவக் குடும்பங்களுக்கு அரசு ஆறுதலாக இருக்க வேண்டும்.

காணாமல் போனால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் உயிரிழந்தார் என்று கருதி உதவித் தொகை கொடுக்கிறீர்கள். அந்த கால அளவைக் குறைக்க வேண்டும் என பிஷப் அதிரடியாக பேசி முடித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.