பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர்2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.
பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).
1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது.
அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின் வரலாறு. தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ, சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டி எடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையைப் பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.
மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.