09/12/2017

நையாண்டி மேளமும் நாட்டுப்புற ஆட்டக் கலைகளும்...


1. நையாண்டி மேளம்..

மேளம் இரு வகைப்படும் ஒன்று கோவில் மேளம். மற்றொன்று நையாண்டி மேளம்.

கோவில் மேளம் திருக்கோவில் வழிபாடு. சுவாமி புறப்பாடு. சுவாமி திரு உலா, தேர்த்திருவிழாவில் வாசிக்கப்படுவது. மங்கல இசை வாசிக்கவும். கோவில் மேளம் பயன்படுத்தப்படுகிறது.

நையாண்டி மேளம் கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கு (Folk Dances) – பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது.

திறந்தவெளி அரங்கில் நையாண்டி மேளக் குழுவினர் வட்டமாக நின்று கொண்டு வாத்தியக் கருவிகளை வாசிக்கின்றார்கள்..

நையாண்டி மேளத்தின் அமைப்பு..

நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி, ஒரு தாளம் கொண்டதாகும்.

கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது. தெற்கு நாட்டுப் பகுதிகளில் இவற்றுடன் உறுமியையும் சேர்த்துக் கொள்கின்றார்கள்.

நையாண்டி மேளத்தில் தொடக்கத்தில் நாதசுரக் கலைஞர்கள் பிள்ளையார் துதி வாசிக்கின்றனர். பின்னர் தனது குருநாதரை நினைத்து வாசிக்கின்றனர். கரகாட்டத்திற்கு ஏற்ற வகையில் நையாண்டி மேளத்தை வாசிக்கின்றனர். ஆட்டமும், வாசிப்பும் ஒத்துப் போகுமாறு பார்த்துக் கொள்கின்றனர். கரகாட்டப் பாடலை இவர்கள் நாதசுரத்தில் வாசிக்கின்றனர். பின்னர் தெம்மாங்கு வாசிக்கின்றனர். காவடியாட்டம் ஆடும் போது காவடிச் சிந்து, வாசிக்கின்றனர். நையாண்டி மேளத்தின் முடிவில் திருப்புகழ் வாசிக்கின்றனர்.

நாட்டுப்புற மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டக்கூடிய வகையில் நையாண்டி மேள இசை அமைகின்றது. சில இசைக் கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை யாழ் நூல் ஆமந்திரிகை என்று கூறுகின்றது. பழந்தமிழர் இதனைப் பல்லியம் என்று குறிப்பிட்டனர்; இசைக்கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை இன்று வாத்திய விருந்து என்று அழைக்கின்றனர்.

2. கிராமீய நடனங்கள்...

நாட்டுப்புற ஆட்டங்கள் நாட்டுப்புற மக்களால் உருவாக்கப்பட்டவை. நாட்டுப்புற மக்கள் உழைப்பின் களைப்பிலிருந்து விடுபட நாட்டுப்புற ஆட்டங்களை ஆடி வருகின்றனர்.

கரகாட்டம்...

சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்ற குடக்கூத்திலிருந்தே இன்றைய கரகம் தோன்றியிருக்க வேண்டும்.

கிருஷ்ண பகவான் ஒருமுறை மண்ணாலும்; உலோகத்தாலும் செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு நடனமாடியதாகப் புராணக் கதைகள் எடுத்துரைக்கின்றது.

கரகம் என்ற ஆட்டத்திற்கு ஈடாக திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மன் கொண்டாடி இன்றும் வழக்கில் உள்ளது.

கிராமப்புறங்களில் காளியம்மன், மாரியம்மன் முதலிய நாட்டுப்புற தெய்வவிழாக்களின் போது ஆற்றங்கரைகளிலிருந்தோ, நதி தீரங்களிலிருந்தோ சக்தி கரகத்தை மலர்களால் அலங்கரித்துக் கொண்டு வருவர். சக்தி கரகம் எடுத்து வருபவர் சாமியாட்டம் ஆடிக்கொண்டு வருவார். தொடக்க காலத்தில் கரகம் வழிபாட்டோடு சடங்கோடு தொடர்புடையதாக இருந்தது. காலப்போக்கில் கரகம் சடங்கு நிலையிலிருந்து விடுபட்டு சமூக நடனமாக தொழில்முறை ஆட்டமாக மாற்றம் பெற்றது எனலாம்.

ஏனைய கிராமீயக் கலைகளைப் போலவே நாட்டுப்புற மக்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தவும், பொழுது போக்கிற்காகவும் கரகாட்டத்தை ஆடி வருகின்றனர் எனலாம்.

நாட்டுப்புறத் திருவிழாக்களின் போதும், முருகன் கோவில் விழாக்களின் போதும் கரகாட்டம் இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பழனி முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய பெருவிழாக்களின் போது காவடிக் குழுவினர், கண்டு களிப்பதற்காக கரகாட்டத்தை உடன் அழைத்து வருகின்றனர்.

கொங்கு நாட்டு காவடிக் குழுவினர், பழனிக்கு காவடி எடுத்து வரும் போது பெரும் பொருட்செலவில் நையாண்டிமேளக் குழுவினரையும், கரகாட்டக் குழுவினரையும் உடன் அழைத்து வருகின்றனர்.

கரகாட்ட அமைப்பு முறை...

பெரும்பாலான நாட்டுப்புற ஆட்டங்கள் வட்ட வடிவ அமைப்பு முறையிலேயே நிகழ்த்தப் பெறுகின்றன. அதைப் போலவே கரகாட்டமும் வட்ட வடிவு அமைப்பு முறையிலேயே நிகழ்த்தப் பெறுகின்றது. கோவில் வளாகங்களிலும், திறந்த வெளி அரங்குகளிலும் கரகாட்டம் இடம் பெறுகின்றது. பார்வையாளர்கள் வட்டமாகச் சூழ்ந்து கொண்டு கரகாட்டத்தைக் கண்டு களிக்கின்றார்கள்.

கரகாட்டத்தில் நையாண்டி மேளம் முக்கியம் இடம் வகிக்கின்றது. நையாண்டி மேளம் இசையைத் தொலை தூரத்தில் கேட்டாலே அங்கு கரகாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கரகாட்டத்தோடு பல துணை ஆட்டங்களும் சேர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கரகம், குறவன் குறத்தி, பபூன் (கோமாளி) காவடியாட்டம், மயிலாட்டம், மாடாட்டம் என்ற முறையில் கரகாட்டம் கிராமப் புறங்களில் நிகழ்த்தப் பெற்று வருகின்றது.

ஆட்ட உடை..

கரகாட்டம் ஆடத்தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் கரகாட்டக் கலைஞர்கள் ஒப்பனை செய்து கொள்கிறார்கள். வண்ண வண்ண உடைகளை ஆட்டத்தின்போது அணிந்து கொள்கிறார்கள். கரகாட்டம் ஆடுவதற்கென்றே இவர்கள் தனி உடையைத் தைத்து வைத்துக் கொள்கிறார்கள்.

செம்பு அலங்காரம்...

கரகச்செம்பை வண்ண வண்ணக் காகிதங்களால், அலங்கரித்துக் கொள்கின்றார்கள். செம்பின் உச்சியில் கிளி பொம்மையை வைத்து அழகு படுத்துகின்றார்கள்.

சில நேரங்களில் கரகச் செம்பில் வேப்பிலைக் கொத்து வைத்தும் கரகாட்டம் ஆடுகின்றார்கள். தொடக்க காலத்தில் மண் கரகங்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. மண் கரகங்களுக்கு பதிலாக பித்தளைச் செம்பைத் தற்போது கரகமாகப் பயன்படுத்துகின்றனர்.

கரகாட்டக் குழுவினர் ஆடத் தொடங்குவதற்கு முன்னர் நையாண்டி மேளத்தைத் தொட்டுக் கும்பிட்ட பிறகே கரகாட்டம் ஆடத் தொடங்குகின்றனர்.

முதலில் இரு பெண்கள் கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு கரகாட்டம் ஆடுகின்றனர். சுமார் ஒரு மணி நேரம் தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு ஆடுகின்றனர். கரகம் ஆடி முடிந்ததும் குறவன் குறத்தி ஆட்டம் இடம் பெறுகின்றது.

குறவன் – குறத்தி ஆட்டம் முடிந்ததும் பபூன் அல்லது கோமாளி ஆட்டம் இடம் பெறுகின்றது. பார்வையாளர்களை மகிழ்விக்க கோமாளி ஆட்டம் இடம் பெறுகின்றது.

பின்னர் மயிலாட்டம் 1/2 மணி நேரம் இடம் பெறுகின்றது. ஆண் ஒருவர் மயில்போல வேடம் அணிந்து கொண்டு மயிலாட்டம் ஆடுகின்றார். மயிலாட்டம் ஆடும் போது மயில் பற்றிய பாடல்களை நாதசுரத்தில் வாசிக்கின்றனர்.

மயிலாட்டம் முடிந்த பிறகு அரைமணி நேரம் மாடாட்டம் இடம் பெறுகின்றது. பின்னர் தொடர்ந்து கரகாட்டம் இடம் பெறுகின்றது.

கரகாட்டத்தின் முடிவில் கரகம் ஆடும் கலைஞர்களுடன் குறவன் – குறத்தி, பபூன் முதலிய அனைவரும் சேர்ந்து கையில் வண்ணக் கைக்குட்டையை வைத்துக்கொண்டு ஒயிலாட்டம் போல ஒரு நடனம் ஆடுகின்றனர்.

கரகாட்டத்தில் பல துணை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அ. வாழைக்காய் வெட்டுதல்..

கராகட்டம் ஆடிக் கொண்டிருக்கும் போது ஒருவரைப் படுக்க வைத்து அவரது நெஞ்சில் வாழைக்காயை வைத்து விடுகின்றனர். கராகட்டம் ஆடுபவர் கண்ணைக் கட்டிக் கொண்டு, கரக ஆட்டம் ஆடிக்கொண்டு, கரகம் கீழே விழாமல், கத்தியால் வாழைக்காய் வெட்டுகின்றனர். இதனைப் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களிக்கின்றனர்.

ஆ. பல்லால் ஊசி எடுத்தல்...

தரையில் ஊசி வைக்கப்பட்டு இருக்கும். கரகாட்டம் ஆடுபவர், ஆட்டம் ஆடிக்கொண்டே தலையில் இருக்கும் கரகம் கீழே விழாமல், பல்லால் கடித்து ஊசியை எடுப்பார். இதன் போது பார்வையாளர்கள் உற்சாகமடைந்து தை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள்.

இ. தீப்பந்த விளையாட்டு...

கரகாட்டக்காரர்கள் வட்டமான தீப்பந்தத்திற்குள் நுழைந்து வெளியே வருகின்றனர். இது ஆபத்தான விளையாட்டாகும், கரகாட்டக்காரர்கள் சிறு ஏணி மீது தீப்பந்த விளையாட்டு செய்து காட்டுவதும் உண்டு.

ஈ. பித்தளைத் தட்டு ஆட்டம்...

கரகாட்டம் ஆடுபவர் அகன்ற பித்தளைத் தட்டு மீது இருகால்களையும் வைத்து தட்டை நகர்த்திக் கொண்டே கரகாட்டம் ஆடுகின்றார்கள்.

உ. சைக்கிள் ஓட்டுவது...

மதுரையைச் சேர்ந்த கரகாட்டக் கலைஞர் லட்சுமி சைக்கிள் பெடல் மீது நின்று கொண்டு ஓட்டிக் கொண்டே கரகாட்டம் ஆடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இவ்வாறு கரகாட்டக் கலைஞர்கள் கரகாட்டத்தில் பல சாகசச்செயல்களை நிகழ்த்திக் காட்டி கரகம் ஆடி வருகின்றார்கள்.

கரகாட்டம் ஆடும்போது மாரியம்மன் மீது பாட்டுப்பாடி கரகாட்டம் ஆடுவது தவறுவதில்லை.

ஒண்ணாங் கரகமடி எங்கு முத்துமாரி
ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி

ரெண்டாங் கரகமடி எங்க முத்துமாரி
ரெத்தினக் கரகமடி எங்க முத்துமாரி

என்ற பாடல் எல்லோருக்கும் நன்கு தெரிந்த கரகாட்டப் பாடலாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.