பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு செலவு ‘கையை கடிப்பதால்’ ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் உயர்கிறது.
பண மதிப்பு நீக்கத்தால் இயந்திரத்தை மாற்றியமைக்க செலவு அதிகரிப்பு.
ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன. வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மில் மாதம் 5 முறையும், பிற வங்கிகளில் 3 முறையும் இலவசமாக பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படும். பிற வங்கி ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தால், அந்த வங்கிக்கு வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கி, பரிவர்த்தனை கட்டணத்தை வழங்க வேண்டி வரும்.
தேசிய பண பரிவர்த்தனை கழகம் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சில தனியார் வங்கிகள் இந்த பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன. குறைந்த எண்ணிக்கையில் ஏடிஎம் வைத்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள், வேறு வழியின்றி பிற ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றனர். இந்த வங்கிகள்தான் பரிவர்த்தனை கட்டண முறையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. தற்போதைய கோரிக்கைப்படி கட்டணத்தை உயர்த்தினால், வங்கிகளின் மீதுதான் இந்த சுமை கூடும். அல்லது இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையை குறைக்க வேண்டிவரும்.
இதுகுறித்து தனியார் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுத்துறை வங்கிகளை விட, அவற்றுக்கு முன்னதாகவே அதிக ஏடிஎம்களை நாங்கள் நிறுவியுள்ளோம். இவற்றை பராமரிக்க அதிகம் செலவாகிறது. குறிப்பாக பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு புதிய அளவிலான ரூபாய் நோட்டுக்காக இயந்திரங்களை மாற்றி அமைக்க கூடுதல் செலவாகியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாலும் ஏடிஎம் பயன்பாடு குறைந்து, இதன்மூலமான வருவாயும் சரிந்து விட்டது. எனவே வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது, என்றார்.
ஆனால், வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த இது வழி வகுக்கும். வங்கிகளுக்கும் நிதிச்சுமை கூடும். ஏற்கெனவே பாதுகாப்புக்காக ஏடிஎம் காவலாளிக்கு சம்பளம், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கான செலவு அதிகரித்து விட்டது என பொதுத்துறை வங்கிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும் நிதிச்சுமையை குறைக்க வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனை கட்டணம் அதிகரித்தால், இவற்றை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதை தவிர வேறு வழியில்லை எனவும், ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் அதிகரிக்கும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.