26/01/2018

தனது அடையாளங்களை தொலைத்து கொண்டிருக்கும் தமிழன்...


வேகமாக சுழலும் பூமிக்கு ஈடுக்கொடுத்து மனிதனும் வேகமாக ஓடும் காலம் இது.

நாகரிகம், நவ நாகரிக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.

புதிய நாகரிகம் நல்லது தான். அந்த நாகரிகத்தால் நம்முடைய கலாச்சாரம், மொழி, பண்பாடு, நாகரிகம், விருந்தோம்பல் என நம்முன்னோர்கள் காலங்காலமாக கட்டிக்காத்த நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறான் தமிழன்.

இதற்கு உதாரணமாக, நம்முடைய ஒவ்வொரு செயலும் உள்ளது. முதலாவது தமிழன் மாற்ற நினைப்பது மொழியை தான்.

தினம் தினம் புதிதாக முளைக்கின்ற ஆங்கிலவழி பள்ளிகளில் தான் பிள்ளைகளை சேர்க்கின்றான். இதனால், 21-ம் நூற்றாண்டில் எத்தனை மாணவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியும்? என்பதை நினைத்தால் பகீர் என்கிறது.

குழந்தைகளின் மேல் சூரியக் கதிர்கள் படுவது நல்லது என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.

ஆனால், நாமோ நவீன காங்கீரிட் கட்டடங்களுக்குள் காற்றுக் கூட நுழையாதவாறு கட்டிக் கொண்டு வசிக்கிறோம். காற்றே நுழையாத வீட்டிற்குள் சூரிய ஒளி எப்படி வரும்?

அதனால் தான் இன்றைக்கு பிறந்த குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வந்து மனதை நோகடிக்கிறது.

கைகுத்தல் அரிசியில் பலவகை உணவை உண்ட நாம், இன்று மேல்நாட்டு கலாசார உணவுகளான பீட்சா, பர்கர், ஃபிரைட் சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வாயில் பெயர் நுழையாத உணவுகள் இன்று நம் வாயினுள் நுழைகின்றன.

நம் கலாசாரம் இன்று தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, கைத்தறி ஆடைகளை மறந்து, நவ நாகரிக ஆடைகளுக்கு மாறி, என்றைக்காவது ஒருநாள் மட்டும் நம் கலாச்சார ஆடைகளை அணிவது, நம் கலாச்சாரத்தை நாமே குழித்தோண்டி புதைக்கும் செயலாகும்.

நாம் உபயோகப்படுத்தின கைவினைப் பொருட்கள் மாறி, இன்று எல்லாம் பிளாஸ்டிக் மயமாகி விட்டது.

பருகும் பானங்களை கூட விட்டு வைக்கவில்லை. உடலுக்கு ஆரோக்கியம் தரும் நுங்கு, இளநீர், மோர், பதநீர் என இயற்கை பானங்களை தவிர்த்து விட்டு, பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்களையே பருகுகிறோம்.

இயற்கை குடிநீரை கூட கேன்களில் வாங்கி பயன்படுத்தும் சூழல் உருவாகிவிட்டது.

முன்னோர்கள் உருவாக்கிய கலைகளை கூட நாம் பாதுகாப்பது இல்லை.

வீட்டை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடிக்கும் போது பழைய பொருட்கள் என்று புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், மருத்துவ குறிப்புகள் என தெருவிலும், குப்பையிலும் தீயிலுமிட்டு எரிப்பது பழைய பொருட்களை மட்டுமல்ல, நம் முன்னோர்களின் அடையாளங்களையும் தான்.

இயற்கை மருத்துவ முறைகளை கூட மாற்றி நவீன மருத்துவம் என சம்பாத்தியங்களையும் தொலைத்து நிற்கின்றோம்.

இன்று தமிழன் என்ற போர்வையில் வேறொரு வாழ்க்கையைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.

இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.

இதே நிலை நீடிக்குமானால், தொன்மையான நமது நாகரிகத்தையும், மொழியையும், பழக்க வழக்கத்தையும் நாமே அழித்து விடும் நிலைக்கு தள்ளப்படுவோம்.

நம் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும், வருங்கால நம்முடைய சந்ததிகளுக்கும் கற்று தருவோம். நம் அடையாளங்களை தொலைக்காமல் பாதுகாப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.