பொதுவாக கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கென்று சில கிறுக்குத்தனமான புத்தி உண்டு. சமயங்களில் அவர்களின் கிறுக்கல்கள் அப்படியே பலித்துவிடுவதும் உண்டு.
இந்த பதிவில் இருப்பவையும் அப்படி பலிக்கலாம்..
இந்தியாவில் இருக்கும் பிற எந்த மாநிலத்தை விடவும் தமிழகம் எப்போதும் தனித்துவமானது. அந்த வகையில் ஜெயாவின் மர்ம மரணமும்..
அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கருணாநிதியின் மர்ம மவுனம் என தமிழகம் தற்போது மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது.
ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஒரு புதிய மாற்றம் வரும். அப்படிதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தி திராவிட இயக்க அரசியலும் ஓட்டரசியலும் எழுச்சியுடன் கிளம்பியது.
ஓபனீங் எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா பினிசிங் சரியில்லயேப்பா.. என்ற வடிவேலுவின் தத்துவத்தின் படி, திராவிடம் பேசிய கொள்கைகளுக்கு நேர் எதிராக பயணித்ததன் விளைவு தற்போது மரணத்துக்கு முந்தைய மூச்சிழுப்பில் இருக்கிறது திராவிட ஓட்டரசியல் .
திருவாளர் திருக்குவளை முத்துவேலரின் மகன் கருணாநிதி 2009ல் ஊழலில் திளைத்ததற்கு பதில் உபகாரமாக ஈழத்தில் தமிழினத்தை பலி கொடுக்க துணை நின்று திராவிட ஓட்டரசியலுக்கு முடிவு எழுதிவிட்டு மவுனமாகிவிட்டார்.
இந்துத்துவ அரசியலுக்கு பிற எந்த மாநிலத்தையும் விட தமிழகத்தை கைப்பற்ற வேண்டியது முக்கியமான செயல்திட்டம்.
ஜெயாவின் மரணத்திற்குப்பின் அதற்கான வேலைகளை மிக தீவிரமாக தங்களுடைய அதிகாரத்தை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக அடிமைகளை பழையபடி தரையில் புரண்டு கும்பிடு போட வைக்கும் அதிகாரத்துடன் இருந்தவர் சசி. ஜெயாவின் மரணம் முடிந்த சில நாட்களில் நீதிமன்ற தீர்ப்பு வந்தது. உள்ளே தள்ளினார்கள். அது எப்படி ஜெயா இருக்கும் வரைக்கும் அந்த தீர்ப்பு வரவில்லை என்றெல்லாம் என்று நாம் கேட்கவில்லை.
அடுத்து தினகரன்..
பொதுவாக லஞ்சம் கொடுக்கும் போது தான் பரஸ்பரம் இருவரையும் கைது செய்வார்கள். ஆனால் இங்கு யாருடனோ பேசினார்.. முயற்சி செய்தார் என்று சொல்லி கதையை முடித்து விட்டார்கள்.
மோடியின் அரசியல் ஒரு சர்வாதிகாரத்தன்மை கொண்டது. அங்கு ஜனநாயகத்தன்மை என்பதற்கெல்லாம் பேச்சு இல்லை. வேண்டுமானால் கண்ணீர் விட்டு கதறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுப்பாருங்கள்.
இப்படியான சூழலில் தமிழகத்தை தங்களுடைய கைப்பிடியில் வைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. தற்போதைய அரசியல் களேபர சூழலில், ஒருவேளை தேர்தல் வந்தால், நடக்கும் நிகழ்வுகளால் (கவனிக்க நடக்கும் நிகழ்வுகளால்..)
திமுக பிசாசே பரவாயில்லை என்று மக்கள் தேர்வு செய்துவிடுவதற்கான வாய்ப்பும் உண்டு என்பதால் அப்படியான ஒரு சூழல் வருவதை பாஜக விரும்பவில்லை. அதே சமயம் 2009க்குப்பின் உருவான தமிழர் அடையாள அரசியலும் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.
ஆக மன்னார்குடி கும்பலின் முக்கிய தலைகளை உள்ளே தள்ளிவிட்டால் மற்ற செம்மறி ஆடுகளை வருமானவரித்துறை, சிபிஐ என மஸ்தான் பொம்மைகளை வச்சு வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்பது திட்டம்.
பன்னீர் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுக் கொடுப்பது அல்லது ஓபிஎஸ் இபிஎஸ் அணியை மிரட்டி ஒன்றாக்கி கைக்குள் வைத்துக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது ஒரு திட்டம்.
இரு குரூப்பையும் மோதவிட்டு விளையாடுவதுபோல், கூடவே திமுக கூடாரத்திலும் அழகிரி ஸ்டாலின் கனிமொழி என இருக்கும் குழுக்களையும் மோதவிட்டு தமிழக குட்டையை குழப்பி மீன் பிடிப்பது மற்றொரு திட்டம்.
அடுத்த முக்கியமான திட்டங்களில் ஒன்று ரஜினி..
ஜெயா கருணா என்று இரண்டு முக்கியமான தலைமைகள் இருந்ததாலும் அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை அறிந்து வைத்திருந்ததால், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை தள்ளி வைத்திருந்த ரஜினியை கட்சியில் இழுத்து அவரை முதல்வராக்குவதன் மூலம் மீண்டும் தமிழர்களை சினிமா அரசியலுக்குள் வைத்திருப்பது பெரும் திட்டம்.
அதற்கு ஏற்ப ரஜினியும் தனது பழைய சங்கத்து ஆட்களை தயார் படுத்தும் வேலைகளை செய்து வருகிறார் என்கிறார்கள்..
ஆக கடைசிவரைக்கும் ஸ்டாலின் முதல்வர் நாற்காலியை வேடிக்கைதான் பார்க்க வேண்டுமா என்றெல்லாம் கேட்டு எரியுற வயிற்றில் பெட்ரோலை ஊற்றாதீர்கள்.
ஆனால் ஒன்று இனிவரும் காலம் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் அவ்வளவு இனிப்பானது அல்ல என்பது மட்டும் நன்கு தெரிகிறது..
– கார்ட்டூனிஸ்ட் பாலா...
5-5-17 அன்று எழுதப்பட்ட கட்டுரை இது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.