31/01/2018

இனி கோவையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம்...



மாநகராட்சி நிர்வாகம் அடுத்த அதிரடி அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளது.

அதாவது, நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொது வாகன போக்குவரத்தை காட்டிலும் தங்களது பைக், கார் போன்ற தங்களது சொந்த வாகனங்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

நகரில் பொது இடங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் செலுத்தும் வாகன நிறுத்தம், இலவச வாகன நிறுத்தம் ஆகியவை உள்ளது.

நகரின் முக்கிய பகுதிகளில் கட்டண வாகனங்கள் நிறுத்தும் இடம் தேர்வு செய்யப்பட்டு குத்தகைதாரர்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது.

இங்கு வாகனங்கள் நிறுத்த குறிப்பிட்ட மணி நேரத்திற்கு தொகை பைக், கார் போன்ற வாகனங்களுக்கு ஏற்ப நிர்ணயித்ததை விட அதிகம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், நகரின் பல்வேறு இடங்களில் சாலையோரம் வாகனங்களை நிறுத்த இலவச பார்க்கிங் வசதி உள்ளது.

பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் நிறுத்தி வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

சாலையோரம் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளனர்.

மாநகராட்சியின் இந்த முடிவு சமூகஆர்வலர்கள், பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தி வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதாலேயே, சாலையோரம் இலவச வாகனங்கள் நிறுத்தும் இடத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், இதற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கடைவீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய 28 இடங்களில் குறிப்பிட்ட மீட்டர் தூரத்திற்கு சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தனி அடையாளம் ஏற்படுத்தப்பட உள்ளது.

இங்கு நியமிக்கப்படும் ஊழியர்கள் மூலம் வாகனம் நிறுத்த குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட உள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் ‘‘ஆன் ரோடு பார்க்கிங்’’ என்ற கட்டணம் செலுத்தும் சாலையோர வாகனம் நிறுத்தும்திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகத்தினர் கைவிட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.