செம்மரக்கடத்தல் வழக்கில், குண்டர் சட்டத்தில் கைதான வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவை கடந்த 4 நாள்களாகக் காணவில்லை என்று அவரது மனைவி பிரேமலதா, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க செயலாளர், பாபு. இவர் மனைவி பிரேமலதா. இவர், கடந்த 24-ம் தேதி அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், "எனது கணவர் பாபு, கடந்த 10 ஆண்டுகளாக அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க செயலாளராக இருந்து வருகிறார். அணைக்கட்டு - ஒடுக்கத்தூர் செல்லும் சாலையில், ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். எங்கள் மகள், நாமக்கல்லில் பிளஸ் டூ படிப்பதால், அவருடன் நான் தங்கியிருக்கிறேன். மகனும், பாபுவும் காட்பாடியில் தங்கியுள்ளனர். கடந்த 22-ம் தேதி இரவு, பாபுவுடன் போனில் பேசினேன். அன்றைய தினம் அவர் வீட்டுக்குச் செல்லவில்லை என்று என் மகன் என்னிடம் கூறினார். இதனால், 23-ம் தேதி அவருடைய செல்போனில் தொடர்புகொண்டேன். ரயிலில் வீட்டுக்குச் செல்வதாக மட்டும் கூறினார். அதன்பிறகு, அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால், என்னுடைய கணவரை யாராவது கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, வேலூர் மாவட்ட எஸ்.பி., பகலவன் உத்தரவின்பேரில், இரண்டு தனிப்படை அமைத்து, மாயமான பாபுவைத் தேடிவருகின்றனர். பாபுவின் மனைவி பிரேமலதாவிடம் போலீஸார் விசாரித்தபோது, அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டபோது, தெலுங்கில் தகவல் சொல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், பாபுவின் செல்போன் ஆந்திராவில் இருக்கலாம் என்று கருதிய வேலூர் போலீஸார், அந்த மாநில போலீஸாரிடம் விசாரித்துள்ளனர்.
யார் இந்த பாபு?
அணைக்கட்டு ஒன்றியத்தின் தி.மு.க செயலாளரான பாபு மீது செம்மரக்கடத்தல் வழக்கு உள்ளது. மேலும், வேலூர் மாவட்டத்தில் செம்மரக்கடத்தல் வழக்கில் சிக்கிய நடனக்கலைஞர் மோகனாம்பாளுக்கும் பாபுவுக்கும் செம்மரக்கடத்தல்ரீதியான பழக்கம் இருந்துவந்ததது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாபுவைக் கைதுசெய்த போலீஸார், 2014-ம் ஆண்டு அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியில் வந்ததும், மீண்டும் ஒன்றியச் செயலாளர் பதவி பாபுவிடமே ஒப்படைக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டுத் தொகுதியில் போட்டியிட பாபுவும் கட்சித் தலைமையிடம் விருப்பமனு கொடுத்தார். ஆனால், மாவட்டச் செயலாளரான நந்தகுமாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், நந்தகுமாரின் அலுவலகம் அடித்து உடைக்கப்பட்டது. அதில், பாபு மீது சந்தேகம் எழுந்தது. இருப்பினும் உள்கட்சி விவகாரம் பெரிதுப்படுத்தப்படவில்லை. இருப்பினும் நந்தகுமார், தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ., ஆனார்.
இதையடுத்து, அணைக்கட்டுப் பகுதியிலிருந்து காட்பாடிக்கு பாபு இடம்பெயர்ந்தார். குழந்தைகளின் கல்விக்காக இடம்பெயர்ந்ததாக பாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய பாபுவை விசாரணைக்காக ஆந்திர மாநில போலீஸார் அணைக்கட்டில் உள்ள அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்ததால், குடிபெயர்ந்ததாகத் தகவல் வெளியாகின. பாபுவைப் பொறுத்தவரை அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்வதுண்டு. இரண்டு நாளுக்குப் பிறகு, அவர் வீட்டுக்கு வந்துவிடுவார். ஆனால், இந்த முறை நான்கு நாள்களாகியும் பாபு வீட்டுக்கு வரவில்லை. அதனால்தான், அவரது மனைவி பிரேமலதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஆந்திராவில் செல்போன் சிக்னல்
பாபு மாயமான தகவல், வேலூர் மாவட்ட தி.மு.க-வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்மரக்கடத்தல் வழக்குத் தொடர்பாக, பாபுவை ஆந்திர மாநில போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால், அதை ஆந்திர மாநில போலீஸார் உறுதிப்படுத்தவில்லை. வேலூர் மாவட்ட போலீஸாருக்கும் பாபுகுறித்த முழுவிவரம் தெரியவில்லை. மாயமான பாபுவை தொழில்போட்டி காரணமாக யாராவது கடத்தினார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். பாபுவின் செல்போன் சிக்னல், அவரது செல்போனுக்கு கடைசியாக வந்த அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், வேலூர் மாவட்ட போலீஸார் விசாரித்துவருகின்றனர். பாபுவின் மனைவி கூறியதன் அடிப்படையில், அவரது செல்போன் சிக்னல் ஆந்திராவில் காட்டியதா என்றும் போலீஸார் விசாரித்துள்ளனர்.
பாபுவின் பின்புலம்...
பாபுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கடந்த 92-ம் ஆண்டில், சந்தனமரக்கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அதுதொடர்பாக வனத்துறையினர் பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு, செம்மரக்கடத்தலில் கால் பதித்துள்ளார். அதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் பாபுவிடம் புரளத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அணைக்கட்டுப் பகுதியிலிருந்து காட்பாடிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு, லட்சக்கணக்கான மதிப்பில் பங்களா வீட்டைக் கட்டியுள்ளார். அணைக்கட்டுப் பகுதியிலும் பாபுவுக்கு சகல வசதிகளுடன்கூடிய வீடு உள்ளது. நடனக் கலைஞர் மோகனாம்பாளின் உறவினர் சரவணனுடன் பாவுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் இருவரும் செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், செம்மரங்களைப் பதுக்கிவைக்க குடோனை பாபுவின் கூட்டாளிகள் வைத்துள்ளனர்" என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.