பிரதமர் நரேந்திர மோடிக்கு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
‘ஒகி’ புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகளும் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது...
ஒகி புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 2-ந்தேதி பார்வையிட்டேன். புயலினால் ஏராளமான மீனவர்கள் நடுக்கடலில் இறந்துள்ளனர். ஆனால், இந்த புயலில் மரணமடைந்த மற்றும் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நடுக்கடலில் இறந்த மீனவர்களின் உடல் 30 நாட்களுக்கு மேலாக கடலில் மிதந்ததால், அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதனால், இறந்த மீனவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, புயலினால் பாதிக்கப்பட்டவர்களால் உரிய நிவாரணத்தை பெற முடியவில்லை. அந்த மக்களுக்கு உரிய நிதி உதவியை அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்கவேண்டும். புயலினால் படகுகள் பல சேதமடைந்துள்ளது. அதனால், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகளை வழங்க வேண்டும்.
புயல், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்து கடலுக்குள் இருக்கும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க போதுமான தகவல் தொழில் நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இல்லை.
பாகிஸ்தான், இலங்கை போன்ற அண்டை நாடுகளில் இந்த தகவல் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. அதனால், அரசுடன் எளிதில் மீனவர்கள் தொடர்புக் கொள்ளும் விதமாக, அவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகள் செய்துகொடுக்க வேண்டும். மீனவர்களின் படகுகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தவேண்டும்.
இயற்கை பேரிடர் குறித்து நடுக்கடலில் இருக்கும் மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை இயற்கை சீற்றத்தில் இருந்து காப்பாற்ற, செயற்கைகோள் மூலம் மீனவர்களை தொடர்பு கொள்ளும் வசதிகளை செய்து தரவேண்டும்.
இதுமட்டுமல்லாமல் புயல் வீசிய போது நடந்த மீட்பு நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்துள்ளது. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் ‘ஹெலிகாப்டர்’ மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த புயலினால் மீனவர்கள் மட்டும் அல்லாமல், ஏராளமான விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு மிகவும் குறைவான தொகையே நிவாரணமாக வழங்கப்படுகிறது. ஒரு வாழை மரத்துக்கு ரூ.20 என்றும் ஒரு ரப்பர் மரத்துக்கு ரூ.200 முதல் ரூ.300-ம் வழங்கப்படுகிறது. இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை. இதுதவிர ‘ஒகி’ புயலினால் குடியிருப்பு பகுதிகளும் சேதமடைந்துள்ளன. எனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க தகுந்த நட வடிக்கை எடுக்கவேண்டும். இந்த புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, அனைத்து உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.