14/01/2018

மூன்றே மாதங்களில் மக்கிவிடும்; நீரில் கரையும்.. கோவையில் அறிமுகமான கேரிபேக்குகள்...


தமிழகத்திலேயே முதன்முறையாக 3 மாதங்களில் மக்கிவிடும் கேரிபேக்குகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

மண்வளத்தைக் கெடுப்பதுடன் மழை நீர் வடிகால்களை அடைத்துக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பைகள் இன்றைய நகர்ப்புறங்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண உலக நாடுகள் பலவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. பிளாஸ்டிக் பைகளின் தீமைகள்குறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது, துணிகளாலான பைகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பது மற்றும் பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்துவருகின்றன.

அந்த வகையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மக்கும் பைகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தவகை பைகள் அறிமுகப்படுத்தப்படுவது தமிழகத்தில் இதுவே முதன்முறை.

அதேபோல், தென்னிந்தியாவில் பெங்களூக்குப் பிறகு இந்தவகைப் பைகளை அறிமுகப்படுத்தும் முதல் நகரம் என்ற பெருமையை கோவை பெறுகிறது.

பெங்களூரைச் சேர்ந்த ரீஜனோ வென்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அந்த நிறுவன அதிபர் சிபி செல்வன், ‘மக்கும் தன்மையிலான இந்தப் பைகள் 3 மாதத்தில் மக்கிவிடும். எளிதாகத் தண்ணீரில் கரைந்துவிடும் தன்மை கொண்டவை. அந்தத் தண்ணீரை நாம் தவறுதலாக அருந்தினாலும், அதனால் உடல்நலன் பாதிக்கப்படாது. தீப்பற்றி எரியும்போது பிளாஸ்டிக் பைகள் உருகுவது போலல்லாமல், இந்தப் பைகள் சாம்பலாகிவிடும். அந்தப் பைகளை விலங்குகள் உண்டாலும் அவற்றுக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது என்றார்.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இந்தப் பைகள் சொல்லப்பட்டாலும், இந்த மக்கும் பைகளின் விலை சற்று அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பைகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கோவையில் இன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சிறப்பு அதிகாரி விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விஜயகார்த்திகேயன், ‘மக்களிடம் வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் மாநகராட்சியின் இந்தத் திட்டம் வெற்றியடையும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல மார்க்கெட்டில் இதேபோன்ற போலி பைகள் விற்கப்படலாம் என்றும், அவற்றைக் கண்டறிய கோவை ஸ்மார்ட் சிட்டி லோகோவுடன் கூடிய பைகளை பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாவரங்களிலிருந்து பெறப்படும் மூலப்பொருள்களைக் கொண்டு இரண்டு வகையாக இந்த பைகள் தயாரிக்கப்படுகின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.