05/01/2018

சங்க காலத்தில் தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த மன்னர்கள் வேளிர் குலத்தைச் சேர்ந்தவர்கள்...


‘வேந்தரும் வேளிரும்’ என்று சங்க இலக்கியத்தில்  மூவேந்தர்களுக்கு இணையாக பல முறை இம் மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

சங்க காலப் போர்கள் பலவற்றில் வேளிர் இடம்பெற்றிருந்தனர் என்பதை சங்கப் பாடல்கள் சொல்லுகின்றன.

வேளிர்கள் தமிழ் நாட்டில் இருந்தவர்களா அல்லது வேறெங்கிலும் இருந்து குடியேறியவர்களா என்பது ஒரு ஆராய்ச்சிக்குரிய விஷயமாகவே இருந்தது.

இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தொல்காப்பியத்திலேயே நமக்கு கிடைக்கின்றன.

அகத்திய முனிவர் தமிழகம் வந்தபோது துவரையிலிருந்து பதினெண்குடி வேளிரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

இங்கு துவரை என்று குறிப்பிடப்படுவது துவாரகை நகராகும்.

மேலும் “நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் ” என்று துவாரகையை ஆண்ட  கண்ணனின் (திருமால்)  வழிவந்த அரசர்கள் இவர்கள் என்றும் தொல்காப்பியம் உரைக்கிறது.

கண்ணன் யாதவ குலத்தில் தோன்றியவன் எனவே  வேளிரும் யாதவ குலத்தவர் என்பது பல வரலாற்றாசிரியர்களின் கருத்து.

கரிகால் வளவன் வென்ற இருங்கோவேளைப் பற்றி கபிலர் என்ற புலவர்

“நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணொடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே” (புறநானுறு  201)

‘வடதேசத்து முனிவர் ஒருவரது யாகத்திற்றோன்றி, செம்பால் அழகாகச் செய்யப்பட்ட மிகப்பெரிய கோட்டையுடைய, வெறுப்பில்லாத பொன்மயமாகிய துவாரகையை ஆண்டு, நாற்பத்தொன்பது தலைமுறையாகவந்த வேளிர்க்குள்ளே சிறந்த வேளாய் உள்ளனை‘ என்பது இதன் பொருள்.

வடநாட்டுப் புராணங்களும் யாதவர்கள் மகாபாரதப் போர் முடிந்ததும் கடல் வழியாக தென்னாட்டில் குடியேறினர் என்று கூறுகின்றன.

ஆக வேளிர் கண்ணபிரான் வழிவந்த யாதவர்கள் என்பது தெளிவு. 

கடையேழு வள்ளல்களான பாரியும் ஆய்வேளும் வேளிர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது   ஒரு உபரிச்  செய்தி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.