21/02/2018

மனிதப் பிறப்பின் இரகசியம்...


நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, நான் ஏன் பிறந்தேன் என்று உங்களைக் கேட்டுக் கொண்டதுண்டா?

கேட்டிருந்தால் பதில் கிடைத்ததா?

கிடைத்த பதில் உண்மையில் முழுமையானதா?

அப்பதில் முழுமை எனில் உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும்..

ஆனால் பெரும்பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத் தான் இருக்கும்.

அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது.

ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால் தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவதில்லை.

பெரும்பான்மை மக்கள் பிறந்து விட்டேன் அதனால் வாழ்கிறேன் என்று தான் வாழ்கிறார்கள்.

அதனால் தான் அவர்கள் வாழ்வை பரிபூரணமாக உணர்வதோ வாழ்வதோ இல்லை.

பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்பதால் தான் வாழ்கையை பற்றி ஒன்றும் புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவதில்லை.

இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால் தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரணமாக்க முடியும்.

இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்ததுண்டா?

ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்புக்கு பின்) புரியவில்லை.

அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும்.

பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம்.

இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது.

நீங்கள் வேறு எதிலாவது ஈடுபட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம்.

உங்களுடைய இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களுக்குப் புரிய வைக்க முடியாது.

அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித் தள்ளத் தான் முடியும்.

இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரிபூரணமாக்கும் அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும்.

சாதரண மனிதனுக்கும் இது சாத்தியமே.. தேவை முயற்சி மட்டுமே..

அதற்கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும்..

சாதாரண வாழ்வுக்கு இது மிகத் தொலைவானது அல்ல. மிக நெருங்கியதே.

அத்தகையதொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த்திச் செல்லும்.

இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, யோகம்.

இந்த யோக நிலையையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பலவாறாகச் சொல்கிறார்கள்.

சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகிவிட்டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன்..

நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத் தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது..

நம்மிடம் என்ன உள்ளது?

உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது.

இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொவொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.

உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம்.

உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம்.

உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம்.

உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.

இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூகத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை.

ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம்.

இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும்.

அதற்குதான், குரு என்பவர் தேவை.

ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால் தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.