10/03/2018

தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி பெருஞ்சித்திரனார் பிறந்த நாள் 10.3.1933...


விடுதலை வேண்டும் முதல் வேலை
 எந்த வேலையும் செய்யலாம் நாளை - மேற்படி பாடலில் பெருஞ்சித்திரனார் வேண்டிப் பாடிய விடுதலை என்பது தமிழ்நாடு விடுதலையை குறிப்பதாகும். 1956ஆம் ஆண்டு மொழிவழித் தமிழகம் அமைந்த பிறகும் தனிக் கழகம் கண்ட அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிடத் தயாரில்லை.   இந்நிலையில் 1959ஆம் ஆண்டு தமிழ்மொழி முன்னேற்றம், இன முன்னேற்றம், தமிழ்நாடு விடுதலை ஆகிய மூன்று கொள்கையை முன் வைத்து தென்மொழி இதழை பெருஞ்சித்திரனார் தொடங்கினார்.

தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகள் வழியில் தேவநேயப் பாவாணர் தென்மொழி இதழில் சிறப்பாசிரியராக செயல்பட்டார். 1963ஆம் ஆண்டு பிரிவினை தடைச் சட்டம் வந்த போது அண்ணா பயங்கொண்டு திராவிட நாடு கோரிக்கைக்கு முழுக்கு போட்டார். இவரோ ஆட்சியாளருக்கு அடங்கிட மறுத்தார். தனது தென்மொழி ஏட்டிலே, "இந்திய நாட்டின் ஒற்றுமை உணர்வை விடப் பன்னூறாயிரம் மடங்கு உயர்ந்து வலிந்தாகும் தமிழக விடுதலையுணர்வு. அதைச் சட்டத்தால் அடக்குதல் சீறும் புயலை மீன் வலை கொண்டும் மடக்கும் செயல்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரை தமிழ்நாடு விடுதலையோடு இணைத்து பெருஞ்சித்திரனார் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். முதலமைச்சர் பக்தவத்சலத்தை கண்டித்து எழுதியதால் நான்கு மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். 17.11.1966 அன்று வேலூர் சிறையிலடைக்கப்பட்டு பின்னர் 11.1.1966இல் விடுவிக்கப்பட்டார். பெருஞ்சித்திரனார் மொழிப் போரில் ஈடுபட்டதை காரணம் காட்டி தில்லி அரசு பனிரெண்டு ஆண்டு காலமாக பணியாற்றி வந்த அஞ்சல்துறைப் பணியிலிருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தது. அப்போது அவர் சிறிதும் கண் கலங்கவில்லை.

ஈ.வெ.ரா.பெரியாரை ஆரிய எதிர்ப்பின் அடையாளமாக போற்றி வந்தவர் பெருஞ்சித்திரனார்.  1965ஆம் ஆண்டு மொழிப்போரின் போது பெரியார் மீது கடும் சினம் கொண்டார்.  காமராசர் அவர்கள் நல்லவர் என்று கூறி, பேராயக்கட்சிக்கு சார்பாக பேசியதோடு, தி.மு.க. இந்தியை எதிர்க்கிறது என்பதற்காக இந்தியைப் படிப்பதில் தவறில்லை என்று பெரியார் பேசியதைக் கண்டித்து "பெரியார் செய்த பெரும்பிழை" என்று தென்மொழியில் எழுதினார்.

பெரியாரின் தமிழ் மொழி எதிர்ப்பை கடுமையாகச் சாடி "பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி" (*) என்று தலைப்பிட்டு அதே தென்மொழியில் விரிவான கட்டுரை தீட்டினார். அதில், "மொழித்துறையில் இவர் வெறும் இராமசாமி தான்" என்று சாடினார். பெரியாரோ தன்னை திருத்திக் கொள்ள வில்லை. மீண்டும் மீண்டும்  "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" என்று பெரியார் எழுதிய போது வெகுண்டெழுந்து  'தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழியே' என்று 16 பக்கம் பெரியாரை கடிந்து எழுதவும் துணிந்தார்.

பிறகு என் அலுவல் போனால் போகட்டுமென்று எதற்கும் அஞ்சிடாமல் தமிழக விடுதலை இயக்கம் ஒன்றை தொடங்கப் போவதாக அறிவிப்பொன்றை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக தமிழக விடுதலைப்படை அமைப்பதற்கு தமிழ் மறவர்கள் தங்கள் உறுதிப்பாட்டை பெயர், முழு முகவரியோடு பதிவு செய்திடுமாறு வேண்டுகோள் விடுத்தார். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பெருஞ்சித்தினார் மூன்று தமிழக விடுதலை மாநாட்டை நடத்தியதால் கடும் நெருக்கடிக்கு உள்ளானார். 1972ஆம் ஆண்டு சூன் மாதம் 10,11 ஆகிய இருநாட்கள் திருச்சியில் தமிழக விடுதலை மாநாட்டை நடத்தினார்.

அதில் தமிழ்நாடு இந்திய அரசிடமிருந்து பிரிய வேண்டும், அப்படி பிரியாமல் போகுமானால் பத்து கேடான விளைவுகள் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் என்றார். அது வருமாறு: 1. தமிழ்மொழி உயர்வடைய வழியில்லை. 2. இந்தியை விலக்கவே முடியாது. 3. குல. சமயப்புரட்டுகள் என்றைக்கும் அகலா. 4. ஆரியப் பார்ப்பன நச்சுத்தன்மை இருந்து கொண்ட இருக்கும். 5. தமிழ்ப்பண்புகள் படிப்படியாகக் கெடும் 6. தமிழ்மொழியின் இலக்கணம், இலக்கியம் அழியும் 7. சமசுக்கிருதம் தலையெடுக்கும். 8. தமிழினம் மேலும் சிதறுண்டு போகும் 9. பொதுவுடைமை அரசைமப்புக்கு வழி ஏற்படாது 10. அரசியல் அதிகாரங்கள் தன்னிறைவு பெறா.

 மாநாட்டிற்கு முன் நடைபெற்ற 12 கல் தொலைவு பேரணியில் தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் எழுப்பப்பட்டது. அப்போது காவல்துறை முழக்கத் தட்டிகளை பிடுங்கிச் சென்றது.

 9.6.1973 இல் இரண்டாவது தமிழ்நாடு விடுதலை மாநாடு மதுரையில் நடைபெற்றது. அப்போது தடையை மீறிப் பேரணி நடத்தப்பட்டதால் 92 பேர் கைது செய்யப்பட்டனர். 13.7.1975ல் மூன்றாவது தமிழக விடுதலை மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. அப்போது பெருஞ்சித்திரனார், அடியார் உள்பட 22 பேர் 49 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழின இரண்டகர் கருணாநிதி தென்மொழி ஏட்டை தடை செய்த போது பெருஞ்சித்திரனார் தமிழ்சிட்டு ஏட்டை தொடங்கி கொள்கை முழக்கம் செய்தார்.

1976இல் ஆரியப்பித்து கொண்ட பெண் இந்திரா காந்தியால் மிசா சட்டத்தில் ஓராண்டு தளைப்படுத்தப்பட்டார். 1983ஆம் ஆண்டு ஈழ விடுதலைப் போர் தீவிரமடைந்த போது அதற்குத் துணை நின்றார். 1991இல் இராசீவ் காந்தியை கொன்ற வீரத்தமிழ்பெண் தணுவை பாராட்டி "ஆகுமோ உலகு அவள் அழிவிலாப் புகழ்க்கே" எனும்  பாடலை தென்மொழியில் எழுதினார். மேலும் பல நிகழ்வுகளில் தணுவைப் பாராட்டிப் பேசியதால் 15 நாட்களுக்கு மேல் சிறை ஏகினார். 27.1.1993இல் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதால் ஆரிய செயலலிதா அரசு கொடிய தடா சட்டத்தில் கைது செய்தது.  நான்குமாதம் சிறைவாசம் கழித்த பின்னரே வெளியே வந்தார்.

1994இல் 'திராவிடர்' என்று சொல்வது தவறு என்றும், 'தமிழர்' என்றே குறிப்பிட வேண்டுமென்றும் தனது 'தமிழ் நிலம்' ஏட்டில் அறிக்கை விடுத்தார். தாழ்த்தப்பட்டோரை 'பழந்தமிழர்' என்றே குறிப்பிட வேண்டும். ஆதிதிராவிடர் என்றோ, ஹரிஜன் என்றோ, தலித் என்றோ அழைக்கக் கூடாது என்பதையும் தெளிவாகக் கூறி விளக்கமளித்தார்.

கடும் காய்ச்சல் கண்டு துன்ப நிலையில் இருந்த போதும் 24.4.95இல் நடந்த தமிழே பயிற்றுமொழி, ஆட்சிமொழி என்று கூறி தலைநகர் தமிழ்க்கழகம் நடத்திய பேரணியில் கலந்து கொண்டு குடும்பத்தோடு தளைப்படுத்தப்பட்டார். அதுவே பெருஞ்சித்திரனார் இறுதியாகப் பங்கேற்றப் போராட்டமாகும்.

சளித்தொல்லை மிகுந்து, சிறுநீரகம் செயலிழப்புக்குள்ளான நிலையில் 11.6.1995 இல் இத்தமிழ்ப் பேருலகத்தை கண்ணீர் கடலில் மிதக்க விட்டு மறைந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.