தென் ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏராளமான இந்துக் கோயில்கள், மத அமைப்புகள், தமிழ் மொழி அமைப்புகள் உள்ளன.
இவை இருந்தும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் தங்கள் தாய் மொழியை வேகமாக இழந்து விட்டார்கள்.
தமிழைக் கற்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் மூத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் ஓரளவிற்கு தமிழில் பேசுகிறார்கள். நல்ல தமிழில் பேச ஆர்வம் காட்டுகிறார்கள்.
தாய்மொழியை இழந்துவிட்டாலும் மத சம்பந்தமான சடங்குகளையும் கலாச்சார நடவடிக்கைகளையும் போற்றிப் பாதுகாத்தல் மட்டுமே தங்களுடைய இன அடையாளத்தைப் பாதுகாக்க முடியும் என அவர்கள் கருதுகிறார்கள்.
தென்ஆப்பிரிக்காவில் 200 பள்ளிக் கூடங்களில் 189 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 5 பேர் மட்டுமே தமிழ் கற்பிக்கத் தகுதி படைத்தவர்கள்.
தமிழ் இளங்கலை வகுப்புகள் டர்பன் பல்கலைக் கழகத்திலும் வெஸ்ட் வில்லோ பல்கலைக்கழகத்திலும் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் போதுமான மாணவர்கள் சேராத காரணத்தினால் 1984ஆம் ஆண்டு இவைகள் மூடப்பட்டன.
தமிழர்கள் ஆப்ரிக்காவிலுள்ள பல்வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்த போது தங்களுடைய பொருளாதார உயர்வுக்காகவும் சமூகத் தகுதிக்காகவும் தாய் மொழியினால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து ஆங்கிலம், பிரஞ்சு, கிரியோலி மொழிகளைக் கற்கத் தொடங்கினார்கள்.
தென்ஆப்பிரிக்காவில் ஆங்கிலம் பொருளாதார உயர்வுக்கு வழி வகுக்கும் என கருதப்பட்டது.
தென்ஆப்பிரிக்காவில் சாதிக் கலப்புத் திருமணம் - இனக் கலப்புத் திருமணம் சர்வசாதாரணம். இத்திருமணங்களின் விளைவாக குடும்பங்களில் ஆங்கிலமே வீட்டு மொழியாகி விட்டது.
தென்ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளையர்கள் அங்குள்ள தமிழர்களைக் கூலிகள் என்றும் அவர்கள் பேசும் மொழியை கூலி மொழி என்றும் இழிவு படுத்தியதால் தமிழர்கள் தங்கள் மொழியிலேயே பேசுவதற்கு வெட்கப்பட்டார்கள்.
இந்த நிலைமை தொடருமானால் தென்ஆப்பிரிக்காவில் அடுத்த இரு தலைமுறைகளுக்குள் தமிழ் முற்றிலுமாக மறைந்து போய் ஆங்கிலமே தமிழர்களின் மொழியாக மாறும்.
தென்னாப்பிரிக்காவிற்கான தமிழர்களின் புலம்பெயர்வு 1860-1911- களில் தொடங்கியது. குவாலு நத்தால் (Kwazulu-Natal) என்ற பகுதியே தமிழர்களின் குழுமங்கள் உருவாக்கப்பட்ட இடமாக இருந்தது.
இன்று டர்பன் (Durban) போன்ற இடங்கள் தமிழர்களின் வாழ்வுத் தளமாக உருவாகியுள்ளது. இன்று தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் வாழ்வியல் மொழியாகியுள்ளவை ஆப்பிரிக்கமொழியும் ஆங்கிலமொழியுமாகும்.
இங்கு வழங்கப்படும் ஆப்ரிகன்ஸ் (Afrikans), பிர்வா (Birwa), கம்தோ (Camtho), ஃபராகோலா (Faragola), எகாய்ல் (Gail), எக்கோரறா (Korara), எக்சூ (Kxoe), நுலூ (Nulu), நாம்மா (Nama), நெடிபி (Ndebee), ஊர்லாம்ஸ் (Oorlams), ரொங்கா (Ronga), சோத்தோ (Sotha), சவாலி (Swahili), சுவாதி (Swahiti) ஆகிய மொழிகள் பல்வேறு குழுக்களால் பேசப்படுகின்றன.
இவற்றில் ஒவ்வொரு தமிழரும் குறைந்தளவிற்கு ஒரு மொழியினையாவது பேசும் ஆற்றலினைப் பெற்றிருக்கின்றனர்.
இம் மொழிகளைப் பேசுவதற்கான முனைப்பும் முயற்சியும் இவர்களிடம் உண்டு. இம் மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கும் கையாள்வதற்குமான ஆளுமையும் ஆற்றலும் இவர்களிடம் உண்டு..
மொத்த மக்கள்தொகை - 2,50,000...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.