31/03/2018

மொரிசியஸ் தீவு தமிழர்கள்...


மொரிசியஸ் தீவில் போஜ்பூரி பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சமுதாயமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

அடிமைகளாக இந்த நாட்டுக்குத் தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

இதன் விளைவாக அவர்கள் தங்கள் மொழியின் மீது கொண்டிருந்த பற்றினைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்கள்.

பிரஞ்சு, கிரியோலி, மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றால் மட்டுமே பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும், தாய் மொழியான தமிழ் மூலம் அது கிடைக்காது என்பதை உணர்ந்த தமிழர்கள் மேற்கண்ட மொழிகளுக்குத் தாவினார்கள்.

மொரிசியஸ் தீவில் தமிழர்கள் குவியலாக ஓர் இடத்தில் வாழவில்லை. தீவு முழுவதும் பரவிக் கிடந்தார்கள். அவர்களுடைய மொழி இழப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

கிராமப்புற பகுதிகளில் குடியேறிய தமிழர்கள் ஓரளவிற்குத் தங்களுடைய மொழி உணர்வைக் காப்பாற்றிக் கொண்டார்கள். நகர்ப்புறங்களில் குடியேறிய தமிழர்கள் அங்கு பெரும்பான்மையோர் பேசிய மொழியிலேயே பேசி வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ்க் குழந்தைகள் தங்கள் தாய் மொழியை அறவே இழந்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். மேலும் மொரிசியஸ் தலைநகரான போர்ட் லூயிஸ் நகரைக் கட்டுவதில் புதுச்சேரி தமிழர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். கிறித்துவ தமிழர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் குடியேறினார்கள்.

மொலாட்டோ இனத்தவரும் கிரியோலி இனத்தவரும் கிறித்துவ தமிழர்களுடன் இரண்டறக் கலந்ததாலும் அவர்கள் தங்கள் மொழியை இழந்தனர். மேலும் ஆரம்பப் பள்ளிகளில் கீழ்த்திசை மொழி அல்லது கிறித்துவ மதப் படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

கிறித்துவத் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் மதப் படிப்பை படிக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். எனவே, தமிழ் அந்த குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படவில்லை. மேலும் தமிழ்ர் பாட நூல்களில் பெரும்பாலும் இந்துக் கடவுள்கள், துறவிகள், கோயில்கள், சிற்பங்கள் ஆகியவை பற்றிய படங்கள் இருந்தன. மதசார்பற்ற தன்மையில் அந்த பாட நூல்கள் அமையவில்லை. கிறித்துவ குழந்தைகள் இதைக் கற்க விரும்பவில்லை. இதன் விளைவாக கிறித்துவ தமிழர்களில் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்துத் தமிழர்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்களாகக் கருதத் தொடங்கினார்கள்.

இதைப் போலவே இந்துத் தமிழர்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை இழந்தார்கள். வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

மொரீசியஸ் தீவில் தமிழர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதம் ஆகும். ஆனால் வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 0.6 சதவீதம் மட்டுமே. 53832 பேர் தமிழ் தங்கள் மூதாதையர்களின் மொழி என்பதை அறிந்தவர்கள். ஆனால் இவர்களில் 6,943 பேர் மட்டுமே தமிழை வீடுகளில் பேசுபவர்கள். இது போன்ற தமிழர்களின் எண்ணிக்கை குறித்து பல விவரங்களை நூல் ஆசிரியர் அளித்துள்ளார்.

தமிழ் மொழி - இலக்கியம் - பண்பாடு ஆகியவற்றின் சிறப்பு குறித்து மொரிசியஸ் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தங்களுடைய தமிழ்ப் பரம்பரை குறித்து அவர்களுக்கு பெருமிதம் உண்டு. மொரிசியசில் அனைத்துலகத் தமிழ் மாநாட்டினை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி உள்ளார்கள். மொரிசியஸ் நாணயங்களில் தமிழ் இடம் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் தமிழ் நிகழ்ச்சிகள் உண்டு.

சுமார் 200 தமிழ் பள்ளிக்கூடங்களும் 200 தமிழ் ஆசிரியர்களும் மொரிசியசில் உள்ளனர். மொரிசியஸ் தமிழர்கள் குறித்த வரலாறு அவர்களின் நாட்டுப்புற இலக்கியம் இவைகளைப் பற்றிய நூல்களும் உண்டு. மொரிசியஸ் தமிழர்களுக்கிடையே எழுத்தாளர்களும் கவிஞர்களும் உண்டு. தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆனால் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கற்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். தமிழர் பண்பாட்டோடு மொழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் ஆசிரியர்களே தங்கள் கருத்துக்களை முழுமையாகத் தமிழில் வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். மிகச் சிலரே பிழை இல்லாமல் தமிழ் எழுதுகின்றனர். இதன் காரணமாக மொழிச் சிதைவு ஏற்பட்டுள்ளது. மொரிசியஸ் தமிழர்களிடையே தாய்மொழி இழப்பு குறித்து அவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலைமை நீடிக்குமானால் பிஜித் தமிழர்களைப் போல இவர்கள் நிலைமை ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை.

1840- களில் மொரிசியசு நாட்டு கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழ்மக்களின் எண்ணிக்கை இன்று பன்மடங்காகப் பெருக்கம் கண்டுள்ளது. இந் நாட்டில் தமிழிய மரபுவழியானவர் 22,000 (1993 Johnstone) பேர் வாழ்கின்றனர். இற்றைநாளில் மொரிசியசின் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் தமிழர்களே. இவர்களின் பேச்சுமொழியாக இருப்பது கிரியோல்மொழியும் (Creal Morisyen), ஆங்கிலமொழியுமாகும். பெயரளவில் தமிழாய்ந்த பெயரினை வைத்துக்கொண்டு தமிழர் என்ற சூழலுக்குள் தம்மை இருத்திக்கொண்டு வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வு, கறுத்த முகத்திற்கு வெளுத்த உடல் இணைத்தாற்போல் உள்ளது.

மொறிசியஸ் தீவில் உள்ள பதினொரு இலட்சம் குடிமக்களில் 75.000 பேர் தமிழ் மக்கள். இவர்களில் 52 சதவீதம் இந்து மதத்தவர்கள் உள்ள அந்த நாட்டில் முஸ்லிம்கள் சீன-மொறிசியர்கள் நாட்டின் பூர்வீக குடிகள் என எல்லோரும் இன- மத- மொழி வேறுபாட்டால் பிளவுபடாமல் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

1730களில் இத்தீவை ஆண்ட பிரெஞ்சுக்காரர்,இந்தியாவில் தமது ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரியிலிருந்து தமிழர்களை கட்டடக் கைத்தொழில் - நுண்கலைத் தொழிலாளராக அழைத்து வந்தனர். 1810 இல் சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்ட பெருந்தொகையான தமிழ்ப் போராளிகளின் உதவியுடன் பிரித்தானியர் இத்தீவை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தது கைப்பற்றினர். மொறிசியசில் இன்று ஏறத்தாள 100 சைவ ஆலயங்கள் உள்ளன. அங்கே சைவப் பண்டிகைகளும் கோவில் அனுட்டானங்களும் செவ்வனே நடைபெற்று வருகின்றன. அங்கே சைவம் தழைத்து நிற்கிறது.

195 ஆரம்ப பாடசாலைகளிலும் 12 உயர்தரப் பாடசாலைகளிலும் தமிழ் ஆசிரியர்களால் தமிழ் மொழிக் கல்வி போதிக்கப்படுகிறது. எல்லாமாக 215 தமிழ் ஆசிரியர்கள் மொரிசியசில் உள்ளனர். ஆனால் அங்கே கட்டாய தமிழ் மொழிக்கல்வி கிடையாது. தமிழ்ப் பாடத்தில் அடையும் சித்திகள் உயர்கல்விக்கோ அல்லது தொழில் வாய்ப்பிற்கோ உதவுவதில்லை. பெரும்பாலான தமிழ்ப் பிள்ளைகள் வீட்டிலே தமிழ் பேசுவதில்லை. கிறியோல் மொழிதான் பேசுகிறார்கள். மேலும் அரசமொழிகளான ஆங்கிலத்தையும் பிரெஞ்சு மொழியையும் அனைவரும் நன்கு பேசுகின்றனர். மொரிசியஸ் தமிழர்களுக்கு சுமாராக தமிழ் வாசிக்கத் முடியும். எழுதவும் வரும். ஆனால் தமிழ் பேசவராது.

தமிழிலிருந்து உக்கிரத் திரிபு அடைந்த பெயர்களை இங்குள்ளவர்கள் வைத்துள்ளனர். பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதற்கு பிறந்த நட்சத்திரம் பார்த்து, தமிழ்ப் பெயர் அடி எடுத்துக் கொடுப்பது கோவில் குருக்கள். மொரிசியசில் சைவ சமயமே வாழ்க்கையின் அடிப்படைக் கலாச்சாரத்தைப் பேணுகின்றது. சமய,விரத நாட்களை மக்கள் அறியும் வண்ணம் ஆண்டு தோறும் பஞ்சாங்கம் ஒன்று பிரெஞ்சு மொழியில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. தமிழர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள். அழுவதா சிரிப்பதா என தெரியாத இன்னொரு விடயமும் உண்டு. பிறப்புச்சாட்சிப் பத்திரம் திருமணப்பதிவுப்பத்திரம், குடிசனமதிப்புப் பத்திரம் போன்ற அரச ரீதியான பதிவேடுகளிலெல்லாம் மொரிசியசின் தமிழ் மக்கள் தமது மதத்தை - தமிழ் என்று பதிந்து வருவது வழக்கம்! இங்கே சைவமும் தமிழும் ஒரு பொருட் கிழவிகள் போல் பாவனையில் இருந்து வருகின்றன. ' மெல்லத் தமிழ் இனிச்சாகும் " என்று பாரதியார் எச்சரித்தது இதைத்தானோ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.