18/03/2018

தமிழக அரசியலில் அமமுக மாற்றத்தை ஏற்படுத்தும்: டி.டி.வி.தினகரன்...


தமிழக அரசியலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அந்த அமைப்பின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது...

சரக்கு மற்றும் சேவை வரியால் தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.

ஜிஎஸ்டி மூலமாக தமிழகத்துக்கு ரூ.682 கோடி வரவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், அதைப் பற்றிய விவரங்கள் இல்லை.

அதேபோல, ஆளுநர் உரையின் போது மத்திய அரசிடம் இருந்து ரூ.6 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபற்றியும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் செயல்படுத்தப்பட வில்லை.

வடசென்னையில் தொடர்ந்து 3 நாள்கள் மழை பெய்தால் வெள்ளம் சூழக்கூடிய நிலை தான் இப்போதும் உள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களைக் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்படும் என அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் வேலையாக இருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கையைப் பொருத்தவரை குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஏதோ சம்பிரதாயத்துக்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதுவே அவர்களுக்கு கடைசி நிதிநிலை அறிக்கையாக இருக்கும். தமிழக அரசின் அடுத்த நிதிநிலை அறிக்கையை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிதி அமைச்சர் தாக்கல் செய்வது உறுதி.

நீட் தேர்வுக்கு விலக்குப் பெறுவதற்கும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கும் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசு விரைவில் வீட்டுக்குச் செல்வது உறுதி.

கடந்த 1967-இல் அண்ணா, 1972-இல் எம்ஜிஆர், 1991-இல் ஜெயலலிதா எப்படி தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினார்களோ அதேபோன்ற மாற்றத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏற்படுத்தும். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது இதைத் தான் கூறினேன்.

பத்திரிகையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இதை நம்பவில்லை. இப்போதும் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கூறுகிறேன். பேரவைத் தேர்தலில் அது நிகழ்வது உறுதி.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி, அதிமுக கொடியைப் போல இருப்பதாகக் கூறி நீதிமன்றம் சென்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்யக் கூடிய இத்தகைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு சாதகமாக மாறிக் கொண்டிருக்கிறது.

அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கும்போது கொடி எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு துணை விதியை அமைத்திருக்கிறார்.

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கிறேன் என்று சொல்பவர்கள், அந்த துணை விதிகளில் சொல்லப்பட்ட விஷயங்களைத் தெரியாமல், எங்களது கொடியையும் பார்க்காமல் நீதிமன்றத்துக்குச் செல்வது வேடிக்கையாக இருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடைக்கால ஏற்பாடு தான். நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பது நீதிமன்றத் தீர்ப்பில் தெரியவரும்.

எங்களது அமைப்பின் பெயரில் திராவிடம் இல்லை என்கிறார்கள். அம்மா (ஜெயலலிதா) என்பதே திராவிடம் தான் என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.