15/03/2018

ஆறு கால் ஆச்சரியம் எறும்பு...


நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதோ அல்லது நாம் கவனிக்காமலோ ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம்.

இது எப்படி நடக்கிறது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?

எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது. ஆனால் மோப்ப உணர்வு அதிகம்.

இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள உணர்ச்சிக் கொம்பு (Antenna) போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச் செல்லும் போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன.

எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.

எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக் கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்து விட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது. இதை நீங்கள் நேரில் பார்க்கும் போது கவனித்திருக்கலாம்.

உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்து வைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும் போது சில நேரம் ஆண்டெனாவை, மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

உணவுப் பாதை போடுவது போலவே, ஆபத்து ஏற்படுவதையும் வேறொரு வேதிப்பொருளை வெளியிட்டு சிப்பாய் எறும்புகள் எறும்புக் காலனிக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகின்றன. இதை அறிந்து மற்ற எறும்புகள் தப்பிச் செல்லும். அதேபோல ஆண் எறும்பை இனப்பெருக்கம் செய்ய ஈர்க்கவும் ராணி எறும்புகள் ஒரு வகை ஃபெரமோனை வெளியிடுகின்றன.

இப்படியாக வழிகாட்ட, ஆண் எறும்பை ஈர்க்க, எச்சரிக்கை செய்ய என பல்வேறு செயல்பாடுகளுக்காக எறும்பு வெளியிடும் எல்லா வேதிப்பொருளும் ஃபெரமோன்தான். ஆனால், ஒவ்வொரு செயல்பாட்டுக்கான ஃபெரமோனின் வகையும் வேறுபட்டிருக்கும். இந்த வேறுபாட்டை வைத்தே, மற்ற எறும்புகள் விஷயத்தை புரிந்துகொள்கின்றன. இப்படியாக எறும்புகளின் வாழ்க்கையில் வேதியியல் மிகப்பெரிய பங்காற்றுகின்றது.

இந்தியாவில் 1903இல் பணிபுரிந்த ராணுவ அதிகாரியான கர்னல் பிங்காம் எழுதிய புத்தகம்தான் இந்தியாவில் எறும்புகளைப் பற்றிப் பேசிய முதல் புத்தகம். அதற்குப் பிறகு ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகியும்கூட, எறும்புகள் பற்றிய விரிவான நூல்கள் அதிகமாக வரவில்லை.

தமிழகத்தில் நமக்குத் தெரிந்தவை சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்றுப் பெரியதாக இருக்கும். கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் வெளிர் சிவப்பு நிற சூவை எறும்பு, சிறிய பிள்ளையார் எறும்பு ஆகிய நான்கு வகைகள்தான். கட்டெறும்பு பெரும்பாலும் மாமரங்களில் அதிகம் இருக்கும்.

சுள்ளெறும்பு என்று அழைக்கப்படும் சிவப்பு எறும்புகளும், கட்டெறும்புகளும் எதிரி என்று கருதுபவர்களைக் கடிக்கும். அப்போது உடலில் படும் வேதிப்பொருளால் நமக்கு சிறிது நேரம் வலிக்கிறது. அந்த வேதிப்பொருளின் வீரியம் குறையும் வரை வலிக்கும்.

சாமி எறும்புகள் எனப்படும் கறுப்பு எறும்பு பெரும்பாலும் கடிப்பதில்லை. கூசுவது போல ஓடிச் சென்று விடும். சில நேரம் பளிச்சென்ற நிறம் ஏதுமில்லாமல் சிறியதாக, வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் எறும்புகளைப் பார்த்திருக்கலாம். அவை முழு வளர்ச்சி அடையாத குட்டி எறும்புகள்.

எறும்புப்புற்றில் சேர்த்து வைத்திருந்த தானியங்களை வறுமையால் வாடிய மனிதர்கள் சிலர் எடுத்து, சமைத்து உண்டதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.