திராவிடர் ஆட்சிக் காலம், தமிழக பெண்களுக்கு இருண்ட காலமாக அமைந்தது. அதுவரை பெண்கள் அனுபவித்து வந்த உரிமைகள் மறுக்கப்பட்டன.
அக் காலப் பெண்கள் நிலை குறித்த வரலாற்றுப் பதிவுகளிலிருந்து சிலவற்றை மட்டும் காண்போம்.
ஆண்கள் வரதட்சிணை வாங்கும் வழக்கம் திராவிடர்களால் உருவாக்கப்பட்டது ஆகும்.
வரதட்சிணை -திராவிடர் வழக்கமே
சோழர்காலம் வரை, மணமகளுக்கு மணமகன் பரிசம் போட்டுத் திருமணம் செய்யும் முறையே இருந்தது.இது குறித்து வராற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்.
’பெண் வீட்டார் மணமகனைத் தேடிச் செல்லுதல் பழந்தமிழர் பண்பாட்டுக்கு முரணாகும். மணமகன் வீட்டார் பெண்ணை நாடி மணமகள் வீட்டுக்கு வரவேண்டும். மணமகன் பெண்ணுக்குப் ’பரியம்’ (ஸ்பரிசம்) அல்லது தொடுவிலை போட வேண்டும்.
பெண் வீட்டார் மணமகனுக்கு வரதட்சிணை வழங்குதல் தமிழரின் மரபு அன்று.
ஆனால், பெண்களுக்கு நிலங்களைச் சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் அந்நாளிலும் உண்டு. தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. விக்கிரமசோழன் காலத்தில் மங்கை நல்லூரில் வாழ்ந்திருந்த அகளங்கராயன் என்பான் ஒருவன் தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவிட்டுவிட்டதற்காக, அவளுக்குச் சிறு நிலங்களை ஈடாகக் கொடுத்தான் என்று ஒரு கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.
எந்தக் காரணத்தாலோ, சில பிராமண குலங்களில் பெண்ணுக்குப் பரியம் கொடுக்கும் பழக்கம் நுழைந்துவிட்டதெனத் தெரிகிறது. அதைக் கண்டித்து ஒரு கிராமத்துப் பிராமணருள் கன்னடியர், தமிழர், தெலுங்கர், இலாடர் ஆகியவர்கள் தமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
அதன்படி, கன்னியாதானமாகவே தம் பெண்களுக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமென்றும், மணமகளின் தந்தைக்குப் பரியப் பணம் கொடுக்கும் மாப்பிள்ளையும், பரியம் பெற்றுக்கொள்ளும் மணமகளின் தந்தையும் குலத்தினின்றும் தள்ளி வைக்கப்படுவர் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது’
(தமிழர் வரலாறும் பண்பாடும் / முனைவர் கே.கே.பிள்ளை)
ஆக, வரதட்சிணை முறை தமிழர் முறை அன்று என்பதும், அம்முறையை அறிமுகப்படுத்தினோரே, திராவிடர்களாகிய தென்னிந்திய பிராமணர்தான் என்பதும் தெளிவாகிறது. இந்த திராவிடர்களாகிய தென்னக பிராமணர்கள் தமக்கான ஆட்சிக் காலத்தில் ஆடிய ஆணாதிக்கக் கூத்துகளில் சிலவற்றைக் காண்போம்.
பொதுவாக பெற்றோர்கள் தங்களின் மகள்களைப் பாரமாகவே கருதினர். அவர்களுக்கு விரைவில் மணமுடிக்க விரும்பினர்.
பெண்கள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படவில்லை.
மனுதர்ம அடிப்படையில் நடந்துகொள்ள பெண்கள் வலியுறுத்தப்பட்டனர்.
பொதுமகளிர் எனப்பட்ட விபசாரிகள் முறை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது.
உடன்கட்டை ஏறும் வழக்கமிருந்தது.
அரசர்கள் இறந்தால் அவர்களுடைய மனைவியர், காமக்கிழத்தியர் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தீயில் விழுந்து மாண்டனர்.
உடன்கட்டை ஏறாத பெண்கள் நிலை மிக மோசமாக இருந்தது. அவர்கள் தலையை மொட்டை அடித்துக்கொண்டனர். ஆபரணங்களைக் களைந்து வெள்ளை நிற ஆடை அணிந்தனர்.
உணவுப்பழக்கமும் மாற்றப்பட்டது.பொது இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி/ சரசுவதிமகால் வெளியீடு 2007/ பக் – 106, 107, 108)
மேற்கண்ட பெண்ணடிமைத்தன வழக்கங்கள் குறித்து திராவிடக் கோட்பாட்டாளர்கள் கடந்த 100 ஆண்டுகளாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
ஆனால், அவர்கள் பேச்சின் சாரமாக, தமிழர்கள் ஆணாதிக்கவாதிகள் என்ற கருத்து இருக்கும். இதற்காக, கண்ணகியின் வீரத்தைக் கொச்சைப்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை. ’திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோர் ஆணாதிக்கவாதிகள்’ என்ற அடாத பழியைப் போடவும் அவர்கள் தயங்குவதில்லை. ஆனால், விஜயநகர, நாயக்கர் காலத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய சான்றுகளை அவர்கள் முன் வைப்பதே இல்லை.
திராவிடர் ஆட்சியில் தமிழக வரலாற்றின் அழிக்க முடியாத களங்கமான போக்கும் உருவாக்கப்பட்டது. ‘அடிமைப் பெண்கள் பெண்களை ஏற்றுமதி’ செய்யும் வணிகம்தான் அது. விஜயநகரப் பேரரசில், பெண்கள் ரோமப் பேரரசுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். (மேலது நூல் / 76)
பெண்களை அடிமைகளாக்கும் விதிகளை உருவாக்கியது மனுநீதி. பெண்களைப் பண்டங்களாக்கி ஏற்றுமதியும் செய்த மனிதகுல விரோத ஆட்சிதான் திராவிடராகிய தென்னிந்திய பிராமணர்ஆட்சி என்பதை உணர வேண்டும். பெண்கள் வணிகம் என்பது ஒரு குறியீடுதான். பெண்கள் ஏற்றுமதியே செய்யப்பட்டார்கள் என்றால், சமூகத்தில் பெண்கள் நிலை எந்தளவு மோசமாக இருந்திருக்கும் எனக் கற்பனை செய்தால் வேதனையே மிஞ்சும்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான சமூகநிலையைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஆட்சி முறை திராவிட அரசர்கள் காலத்தில் உருவானது.
தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005)
கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.
இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.
கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்
நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)
மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?
இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை அல்லவா காட்டுகிறது...
- ம.செந்தமிழன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.