21/03/2018

ஆனால் என்பது ஆபத்தானது...


ஆனால் என்ற சொல் அதற்கு முன்னால் சொல்லப்பட்டதை எல்லாம் அர்த்தம் இல்லாததாக்கி விடுகிறது.

உதாரணத்திற்கு நாம் அன்றாடம் சொல்லக் கூடிய சில..

நான் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். ஆனால் இப்படி அதிகாலையில் குளிராக இருப்பதால்.... (இன்று உடற்பயிற்சி செய்யப் போவதில்லை என்று பொருள் காண்க).

கோபப்படுவது நல்லதில்லை தான். ஆனால் இப்படியெல்லாம் நடந்து கொண்டால் கோபப்படாமல் இருப்பதெப்படி? (கோபப்படுவது நல்லதில்லை என்பது வெறும் சம்பிரதாயத்திற்காக சொல்லப்பட்டு இருக்கிறது).

செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் நேரமே கிடைக்கிறதில்லை. (அதனால் நான் ஒன்றுமே செய்வதில்லை).

இதில் எல்லாம் ஆனால் என்று சொல்வதற்கு முன்னால் சொன்ன அத்தனை நல்ல விஷயங்களும் நடைமுறைக்கு வராத வெறும் வெற்று வார்த்தைகளாகி விட்டது என்பது தெளிவாகத் தெரிகிற உண்மை.

சீதோஷ்ண நிலை சரியாக இருந்திருந்தால் உடற்பயிற்சி செய்திருப்பேன், எல்லோரும் ஒழுங்காக நடந்து கொண்டால் கோபமே பட மாட்டேன், நாளுக்கு 24 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் எதையும் செய்து முடிப்பேன் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் பொய்கள்.

நம் சோம்பேறித்தனத்தையும், கட்டுப்பாடற்ற மனதையும் மறைக்கும் ஆயுதம் தான் இந்த ஆனால்..

இந்த ஆனால் நம்மை சமாதானப் படுத்திக் கொள்ள உதவலாம். ஏமாற்றிக் கொள்ள உதவலாம்.

ஆனால் இந்த 'ஆனால்' நம்மை என்றும் பின் தங்கியே இருக்க வைக்கும். சாதிக்காத சப்பைக்கட்டு மனிதர்களாகவே நம்மை இருத்தி விடும்.

நீங்கள் சொல்லத் துவங்கும் 'ஆனாலி'ல் வலுவான காரணங்கள் கூட இருக்கக்கூடும். ஆனால் எல்லாமே சாதகமாக இருக்கும் போது சாதிப்பதில் சிறப்பென்ன இருக்கிறது?

தடைகளையும் சாதகமில்லாத சூழ்நிலைகளையும் மீறி மன உறுதியுடன் சாதிப்பதில் அல்லவா மகத்துவம் இருக்கிறது.

எனவே "ஆனால்" என்ற சொல்லை உபயோகப்படுத்தும் போதெல்லாம் எச்சரிக்கையுடன் இருங்கள். அந்த சொல்லைக் குறைவாகப் பயன்படுத்துங்கள்.

சொல்லும் போது உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்களா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

அடுத்தவர்களை நம்ப வைக்க முயல இந்த 'ஆனால்'ஐப் பயன்படுத்தி உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.