05/04/2018

மன உறுதியே மாற்றங்களை நிகழ்த்திக்காட்டும்...


உடல் உறுதியைவிட மன உறுதியே மாற்றங்களை நிகழ்த்திக்காட்டும். இதோ ஒரு உதாரண மனிதன்...

ஏஞ்சலோ சிசிலியானோ என்பவர் இத்தாலியில் பிறந்தவர். பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் மெலிந்த தோற்றத்துடன் இருந்தார். இதை பலர் ஏளனம் செய்தனர். ஒருநாள் கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முரடன், ஏஞ்சலோ முகத்தில்படும்படி கடற்கரை மணலை வாரி இறைத்தான். இந்தச் செயல் ஏஞ்சலோவிற்கு பெரிய அவமானத்தை அளித்தது.

உடனே தீர்க்கமாக முடிவெடுத்தார். கடினமான உடற்பயிற்சிகளை செய்து வலிமையான உடலமைப்பைப் பெறுவது என்று உறுதியேற்றார். உடலமைப்பை மெருகேற்றி வந்தார். ஒருமுறை மிருகக்காட்சி சாலையில் சிங்கம், புலி போன்ற மிருகங்களைக் கவனித்தார். அவை தங்களது தசைகளின் வலிமையைக் கொண்டே ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்தார்.

தானும் அவற்றைப் போல வலிமையான தசைகளைப் பெற வேண்டும் என்று கடினமான பயிற்சி மேற்கொண்டார். இவர் 12 நிலைகளில் பயிற்சியை வரையறுத்துக் கொண்டு பயிற்சி செய்தார். பிறருக்கும் பயிற்சி அளித்தார். இவரது பயிற்சிமுறை உலகளவில் தரமுடையதாகக் புகழ்பெற்று பரவியது.

'அட்லஸ்' சிலை ஒன்று பூமியை தாங்கிக் கொண்டிருக்கும். இதைப்பார்த்த பலருக்கு ஏஞ்சலோ சிசிலியானாவின் கட்டான உடல்தோற்றமே நினைவுக்கு வந்தது. அதனால் அவரை 'சார்லஸ் அட்லஸ்' என்று அழைக்கத் தொடங்கினர். அன்று முதல் தனது பெயரை (சட்டப்படி) அட்லஸ் என்று மாற்றம் செய்து கொண்டு தன்னுடைய பயிற்சி நிறுவனத்திற்கு 'அட்லஸ் பிராண்ட்' என்ற அடையாளத்தையும் உருவாக்கினார்.

இவரது அனுபவம் மற்றும் பயிற்சி என்பது வெறும் எடைகளை தூக்கி உடற்பயிற்சி செய்வது என்று கூற முடியாது. பிறரது கேலிப் பேச்சுகளுக்கும், அவமானத்திற்கும் ஆளான ஏஞ்சலோதான், தன்முனைப்புடன் கடுமையான பயிற்சிக்குப் பின் உலகின் உறுதியான மனிதனின் உடலமைப்புக்கு எடுத்துக் காட்டாகிப் போனார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.