01/04/2018

மறைந்து வரும் விளையாட்டுகளும் மறக்காத நினைவுகளும்...


கோலிகுண்டு, பம்பரம், சில்லாக்கு, பாண்டி, ஒத்தையா ரெட்டையா, சொட்டாங்கல்லு, பூப்பறிக்க வருகிறோம், காலாட்டுமணி கையாட்டுமணி, எறிபந்து, கொலகொலயா முந்திரிக்கா, பச்சக்குதிர தாண்றது, ஓடிப்புடிச்சு ஒளிஞ்சுபுடிச்சு, தாயம், பரமபதம், ஆடுபுலியாட்டம், பல்லாங்குழி, கல்லா மண்ணா, டியாண்டோ டியாண்டோ, திருடன் போலீஸ், தீப்பெட்டிப்படம் சேக்கிறது, சடுகுடு, கிட்டி (கில்லி), எருவாட்டி, கண்ணாமூச்சி, கிறுகிறுவானம், ரயில்வண்டி, நொங்குவண்டி டயர்வண்டி ஓட்றது, குச்சி விளையாட்டு (சிலேட்டு குச்சிதான்), குலுக்குச்சீட்டு என இளமை பூராம் விளையாடித்திரிந்ததால் இன்று வரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை.

மேலே பட்டியலிலுள்ள விளையாட்டுகளின் பேர் கூட இன்று உள்ள சிறுவர்கள் யாருக்கும் தெரியாது. மேலும், அப்படி விளையாடும்  சிறுவர்-சிறுமியர்கள் எல்லோரும் ஊராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் படிப்பவர்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இந்த விளையாட்டுகள் அழிவதால் என்ன பெரிதாய் ஆகி விடப்போகிறது என்று நினைப்பவர்களை பார்த்தால் பாவமாயிருக்கிறது. ஏனென்றால், இன்று இந்தியாவின் தேசியவிளையாட்டாக மாறிவரும் கிரிக்கெட் விளையாட்டே அல்ல. அது முழுக்க, முழுக்க வியாபாரம். கோடி, கோடியாய் முதலீடு செய்யும் தொழில். விளையாட்டு எப்பொழுது வியாபாரம் ஆனதோ அப்பொழுதே அதை நாம் பார்ப்பதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், நாமோ கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

மேலே பட்டியலிட்ட விளையாட்டுகள் எல்லாமே கொஞ்சம் தான். தற்போது இருபத்தைந்து வயதுக்கு மேல் உள்ளவர்கள் எல்லோருமே இந்த விளையாட்டுக்களை குறித்து கட்டாயம் அறிந்திருப்பார்கள். மேலும், இன்னும் நம் தாத்தா காலத்து விளையாட்டுகளை எல்லாம் அறிந்தால் பட்டியல் நீளும். மேலும், விளையாட்டுகளை எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் என்று தெரியும். கிராமப்பகுதியில் வசிக்கும் நண்பர்கள் இன்னும் நிறைய விளையாட்டுகளை குறித்து எழுதலாம். கம்மாயில் மீன் பிடிப்பது, மரத்தில் ஏறித்தாவி குளிப்பது என இன்னும் நிறைய இருக்கிறது.

இந்த விளையாட்டுகளை எல்லாம் நினைக்கும் போது ஒரு கூட்டமே நினைவுக்கு வருகிறது. தனியாகவா விளையாட முடியும்?. குண்டு விளையாட்டில் தேக்கியது, பம்பரத்தில் ஆக்கர் விழுந்தது, கபடியில் உப்புக்கு சப்பானியா என்னை பாடிவர அனுப்புவது, கிட்டி விளையாடி ஊர் ஊராய் சுற்றியது, திருடன் போலிஸ் விளையாட்டில் பாடும் பாட்டு (டக்! டக்! யாரது? திருடன்! என்னா வேண்டும்? நகை வேண்டும்! என்னா நகை?....), டயர்வண்டிய வீதிவீதியா ஓட்டி அலைந்தது, பள்ளிக்கூடத்தில் பாடமெடுக்காத வேளையில் குலுக்கு சீட்டு விளையாடியது, காலாட்டுமணி கையாட்டுமணியில் பிடிக்காதவங்களை நச்சுன்னு கொட்டுறது, பிலிம்ல படம் காட்ட காசு போட்டு பிலிம்மா வாங்கி குவிக்கிறது, பச்சக்குதிர தாண்டுறப்ப கல்லாட்ட பண்றது, கிறுகிறுவானம் சுத்தி கீழே விழுந்து கிடப்பது, வைகுண்ட ஏகாதசிக்கு முழித்திருந்து பரமபதம், தாயம், சதுரங்கம் விளையாடியது, போஸ்ட்மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிருந்து கண்ணாமூச்சிக்கு பட்டுவந்தது, சோப்புதண்ணிய ஊத்தி முட்டைவிட்டு திரிஞ்சது, உடைந்தவளையல்களை சோடி சேர்த்து விளையாடியது என ஞாபகங்கள் கிளை விட்டுக்கொண்டே இருக்கின்றன. என்னுடைய ஒரு ஆசை என்னவென்றால் எப்படியாவது இந்த விளையாட்டுக்களை இன்றைய தலைமுறையிடமும் விதைத்துவிட வேண்டும் என்பது தான்.

தமிழ்த்திரைப்படங்களில் சிலபடப்பாடல்கள் இன்னும் அந்த விளையாட்டுக்களை ஞாபகமூட்டும் அற்புதப் பதிவாக இருக்கிறது. உதாரணத்திற்கு வெயில் படத்தில் வரும் வெயிலோடு விளையாடி.., பூ படத்தில் வரும் ச்சூ ச்சூ மாரி.., பசங்க படத்தில் பேர் போடும் போது வரும் விளையாட்டு குறித்த பாடல்கள், களவானி படத்தில் பேர் போடும்போது வரும் சொட்டாங்கல்லு பாட்டு என நிறைய. இந்தப்பாடல்கள் எல்லாம் அப்படியே பால்யத்திற்கு அழைத்து சென்று விடுகின்றன. இன்றும் கிராமங்களில் உள்ள சிறுவர்கள் இதெல்லாம் விளையாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.சி என வாயில் நுழையாத பள்ளியில் படிக்கும் மாணவர்களை நினைத்தால் பாவமாயிருக்கிறது. மண்ல விளையாடாத புண்ணு வந்துரும்ன்றதுல இருந்து அவங்ஙள விளையாடவே விடாம டியூசன், கராத்தே க்ளாஸ், பாட்டு க்ளாஸ்ன்னு அனுப்பி க்ளாஸ்ல முதல் ஆளா வர வைக்கிறதுல தான் குறியா இருக்காங்க. அந்தச் சிறுவர்களை கணினிபூத விளையாட்டுகளில் இருந்து காப்பாற்றுங்கள்! அதைவிட முக்கியம் உங்கள் நினைவுகளை அடுத்த தலைமுறையிடம் கட்டாயம் கடத்தி விடுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.