காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு அலட்சியம் காட்ட காலக்கெடு முடிந்த பின்னர் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு எழுச்சி போல் மீண்டும் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸார் பாதுகாப்பு மெரினாவில் அதிகப்படுத்தப்பட்டது.
ஆனாலும் சனிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வந்தனர். அவர்களுடன் போராட்டக்காரர்களும் ஊடுருவி வந்தனர். பின்னர் கடல் நீர் அருகே வரிசையாக நின்று பதாகைகள் ஏந்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோஷமிட்டனர்.
இதை முகநூலில் பலரும் ஷேர் செய்ததால் அது காட்டுத்தீயாய் பரவியது. இந்நிலையில் வெளியே சர்வீஸ் சாலையில் இருந்த போலீஸாருக்கு இந்த தகவல் தெரிந்து வேக வேகமாக மணற்பரப்பில் போராடும் இளைஞர்களைப் பிடிக்க ஓடி வந்தனர்.
சில போலீஸாரால் ஓட முடியவில்லை. போராட்டக்காரர்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள வாடகை குதிரைகளின் மீது ஏறி போராட்டக்காரர்களை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குதிரைக்காரர்களை அழைத்து குதிரை மேல் ஏற்றி கடல் அருகில் வேகமாக கொண்டு போ என்று கூறியுள்ளனர். அதற்கு குதிரை ஓட்டுபவர்கள் “சார் குதிரை ஒரு வட்டம் அடித்து பழக்கப்பட்டது. அதைத்தாண்டி போகாது” என்று கூறியுள்ளனர்.
அதிகாரி சொல்லும் போது மறுத்து பேசுகிறாயா டூ வாட் ஐ ஸே என்று கூறி குதிரையில் ஏறி போராட்டக்காரர்களை பிடிக்கக் கிளம்பியுள்ளனர். ஆனால் அது பழக்கப்பட்ட குதிரை என்பதால் ஒரு சுற்று சுற்றிவிட்டு கிளம்பிய இடத்திற்கே மீண்டும் வந்துவிட்டது. குதிரைக்கு காவிரி மேலாண்மை வாரியம் தெரியுமா? காவலர்களைப் பற்றித் தெரியுமா? யார் ஏறினாலும் ஒரு ரவுண்டு அவ்வளவுதான்.
அதன்படி கிளம்பிய இடத்திற்கே திரும்பிய குதிரையை மீண்டும் கடல் அருகே கொண்டு செல்ல போலீஸார் கேட்ட போது சார் மீண்டும் ஒரு சுற்று சுற்றிவிட்டு இங்குதான் வரும் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள் இறங்கி நடந்து போய் பிடியுங்கள் என்று குதிரைக்காரர்கள் கூறியுள்ளனர்.
வடிவேல் காமெடி போல் நம்ம நிலை ஆகி விட்டதே என்று போலீஸாரும் மூச்சு வாங்க போராட்டக்காரர்களை பிடிக்க ஓடினர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.