இட்டிலி. இடியப்பம். புட்டு. என்று நீராவியில் செய்த உணவுப் பொருள்களை உண்டு நமது முன்னோர் தங்கள் ஆவியை நல்ல முறையில் காத்து வந்தனர்.
இன்றோ பொரித்த வறுத்த உணவுகள் மட்டுமல்ல. வெளிநாட்டார் உணவு வகைகளையும் உண்ணுவதில் பெருமைகொள்ளுகின்றோம்.
அந்தந்த நாட்டில் தட்ப வெப்ப நிலைகளுக்குத் தேவையான உணவு முறைகளை நமது பெரியவர்கள் கண்டு உண்டும் வந்தார்கள்.
இன்று தனது ஆத்திச்சூடியில் பாரதி ஊண் மிக விரும்பு என்றான். ஒரு இளைஞர் சாப்பிடுவதிலே வரைமுறையே இல்லாமல் சாப்பிடுவார். கேட்டால் பாரதியே ஊண் மிக விரும்பு என்று சொல்லியுள்ளாரே என்று எதிர் வினாத் தொடுக்கின்றார்.
அவன் சொன்னது உண்ணுகின்ற உணவை விரும்பி உண்ண வேண்டும் என்பதற்காக.விரும்பி மகிழ்ச்சியோடு உண்ணுகின்ற உணவு தான் உடம்பிலே சேரும் என்பதற்காக. ஆமாம் சிலர் சாப்பிடுவதனைப் பார்த்தால்தெரியும் கடனே என்றுசாப்பிடுவார்கள். சாப்பிட வேண்டுமே என்று எதை வைத்தாலும் சாப்பிடுவார்கள்.
நெல்லையில் சாப்பாட்டுக் கடன முடிச்சிட்டுப் போயேன் என்பார்கள். எல சாப்பிட்டியா என்று கேட்டால் என்ன எழவையோ வச்சா அள்ளிப் போட்டுட்டு வந்திட்டேன் என்பார்கள்.சிலர் நேரம் தவறினாலும் மதிய உணவை மாலையில் கூடச் சாப்பிடுவார்கள்.
சிலர் சாப்பிடுவதையே பொழுது போக்காகவும் பெருந்தொழிலாகவும் கொண்டு வாழ்வார்கள். அவர்கள் உண்பதைப் பார்த்தால் நமக்கே அச்சம் வந்து விடும்.
எதுவெனினும் சாப்பிடுவார்கள் எப்போதும் சாப்பிடுவார்கள் உடனுக்குடன் கூட அவர்கள் சாப்பிடுவார்கள். எந்த உணவு விடுதியில் எத்தனை மணிக்கு என்ன கிடைக்கும் என்கின்ற பட்டியலைச் சரியாகச் சொல்லுவார்கள்.சரியான நேரத்திலே அங்கு சென்று அதனைச் சாப்பிடுவார்கள். போக முடியாவிட்டாலும் யாரையாவது அனுப்பி வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுவார்கள்.
ஏதேனும் ஒரு நேர உணவு உண்ண முடியாமல் போனால் அந்தப்பொழுது உணவை விட்டு விட்டு அடுத்த நேர உணவை உண்பதற்கு முன்னர் ஒரு எலுமிச்சையை சாறாக்கி உண்டு விட்டு உண்டால் நோய் வாராது.
சில பெண்கள் வீட்டில் செய்த உணவுப் பொருள் வீணாகி விடக் கூடாது என்று இயலாமல் கூட அந்த உணவுப் பொருளை உண்பார்கள். நமது உணவுப் பழக்கம் எல்லா நோய்களையும் நம்மிடம் கொண்டு வருகின்றது.
காலையில் சக்கரவர்த்தியைப் போலவும் மதியம் மன்னரைப் போலவும் இரவு சேவகனைப் போலவும் உண்ண வேண்டும் என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள். அதன் படி வாழ்ந்தார்கள். சர்க்கரை நோய் மிகுந்திருக்கும் இந்த நாட்டில் இத்தனை இனிப்புக் கடைகள்.புரியவில்லை.
அண்ணாச்சி சாகப் போறது உறுதி. தின்னுட்டுச் சாவோமே இதுதிருநெல்வேலி. வயித்துப் பாட்டுக்குத் தான அண்ணாச்சி ஒழைக்கோம்.
அதே பாரதி உடலினை உறுதி செய் என்றான்.ஙப் போல வளை என்றான்.எத்தனை பேர் உடற் பயிற்சி செய்கின்றனர். நமது மகிழுந்திற்கு எண்ணெய் நிரப்புகின்றோம். ஒடவேயில்லை எனில் அந்த மகிழுந்தில் மீண்டும் எண்ணெய் நிரப்ப முடியுமா. ஒடினால்தானே எண்ணெய் செலவழியும்.
புதிதாக எண்ணெய் நிரப்பமுடியும். காலையில் எல்லா ஊர்களிலும் நடைப் பயிற்சி கொள்பவர்கள் ஒருவரை பார்த்தவுடன் சர்க்கரை அளவை விசாரிக்கும் போது பெருமையாகவே கேட்கின்றார்கள். எனக்கு 300 உங்களுக்கு என்றவுடன் 320 என்று அவர் பெருமையோடு சொல்வதும் ஓன்றும் புரியவில்லை.
அவ்வைப் பெருமாட்டி இத்தனைக்கும் காரணமான வயிற்றிடம் கேள்வி கேட்கின்றாள். வயிறே ஒரு நாள் சாப்பிடாமல் இரேன் என்றால் முடியாது சாப்பிட்டே ஆக வேண்டும் என்கின்றாய்.
ஒரு நாள் உணவு நிரம்ப கிடைக்க வாய்ப்பிருக்கும் நேரம் இரண்டு நாளுக்கு நிரப்பிக் கொள்ளேன் என்றால் முடியாது என்கின்றாய்.
உணவு உறுதி செய்யப் படாத ஏழைகளின் நிலை. இல்லாத அன்று பொறுத்துக் கொண்டு. கிடைக்கின்ற அன்று அள்ளி திணித்துக் கொள்ளலாமல்லவா. வயிறு ஒத்துழைக்க மறுக்கின்றதே
இப்படிப் பட்ட உன்னோடு வாழ முடியாமல் எத்தனை பேர் துன்புறுகின்றார்கள் தெரியுமா.
பசிப்பிணி போக்குவதே அனைவரின் கடமையும் என்று உணர்த்துகின்றார் ஔவையார்.
செய்யுள்
ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒரு நாளும்
என்நோய் அறியா இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.