நான் வாழ்வில் உயர்ந்த நிலை அடைய வழி சொல்லுங்கள் என்று கேட்டு, ஒரு ஞானியிடம் வந்தான் அரசன் ஒருவன்...
முதலில் உன் மனம் பக்குவப்பட வேண்டும்,’ என்றார் ஞானி.
மனம் பக்குவப்படுதல் என்றால் என்ன? என்று அவன் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, வேலையாள் கூட்டிக் கொண்டிருந்த குப்பையும், தூசும் பறந்து அவன் மேல் பட்டுவிட்டன.
உங்கள் வேலையாளுக்கு அறிவே கிடையாதா? என்று சீறினான் மன்னன்.
உன்னிடம் பாம்புகள் நிறைய உள்ளன. முதலில் அவற்றைக் கொன்று விட்டுவா என்றார் ஞானி.
குழம்பிய மன்னன் திரும்பி விட்டான்.
சில மாதங்கள் கழித்து மீண்டும் ஞானியைத் தேடிவந்து அதே கேள்வியைக் கேட்டான்.
எதையோ எடுத்துக் கொண்டு போன வேலையாள், அரசன் மேல் எதிர்பாரா விதமாக மோதி, கையில் கொண்டு வந்ததைக் கீழே போட்டு விட்டான்.
உனக்கு எப்போதுமே பொறுமை இல்லை. ஆள் இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? என்று கோபமாக அவனிடம் கேட்ட மன்னன், ஞானியை நோக்கித் திரும்பினான்.
உன்னிடம் நாய் இருக்கிறது. அதை விரட்டி விட்டு வா என்றார் ஞானி.
வெறுப்புடன் திரும்பிய மன்னன் மீண்டும் சில மாதங்கள் கழித்து போனான்.
அதே வேலையாளை அழைத்து மன்னனுக்கு தேநீர் தரச் சொன்னார் ஞானி.
ஏற்கனவே மன்னனிடம் திட்டுக்கள் வாங்கிய பதற்றத்தில் தேநீரைக் கைதவற விட்டுவிட்டான் வேலையாள்.
மன்னன் உடையில் தேநீர் பட்டு விட்டது. புன்னகைத்துக் கொண்டே, ஏன் இந்தப் பதற்றம் உனக்கு? பரவாயில்லை. வேறு தேநீர் கொண்டு வா என்றான் அவனிடம் மன்னன்.
உயர்நிலை அடைவதற்கான வழி உனக்குத் தெரிந்து விட்டது.
இனி நான் உனக்கு சொல்லித்தர ஒன்றுமில்லை என்றார் ஞானி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.