01/05/2018

சித்தராவது எப்படி ? - 18...


அந்த மாவீரன் ஒரு மகா கோழையே...

இந்த பிறவியில் இருக்கும் துயரங்களை போக்குவதற்கு துயரங்களின் துன்பங்களின் தொடர்புகளை வகுத்து வகுத்து வைத்து இன்னும் அடைய கூடிய எதிர் கால துன்பங்களையும் பட்டியல் இட்டு ஒரு மனிதனை பயமுறுத்தி, குழப்பத்தினை உருவாக்கும் உலகத்தின் போக்கால் மனித குலம் அடையும் துயரங்களுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது..

எல்லாம் கடந்து போகும் என்ற நிலையான சத்தியத்தை முன் வைத்து தகுந்த விளக்கம் கொடுக்கும் மேதாவிகள் யாரும் இல்லை..

நோயை உருவாக்கி பிழைப்பை நடத்தும் பொய்யான மருத்துவனை போல் இன்று துயரம் என்ற பொய்யான மாயையான நோயை உருவாக்கி அதை தீர்ப்பது போல் பாவனை செய்பவர்களே பலர் இருக்கிறார்கள்..

ஒழுங்கின்மையே நோய் என்றும் அதை தீர்க்க ஒழுங்கு என்ற மாமருந்து ஒன்றே ஒன்று தான் உண்டு என்பதை அறிந்து இருந்தும் மறைத்து விட்டார்கள்.. அல்லது மறந்து விட்டார்கள்...

நோய்களை உருவாக்கும் சுவாச ஒழுங்கின்மையை சுவாச ஒழுங்கு என்ற மாமருந்து சீர் படுத்தும், என்ற அடிப்படையான மிக எளிமையான உண்மையை ஏற்றுக் கொள்பவர்கள், ஏற்றுக்கொண்டபின் அதை நடைமுறை படுத்துபவர்கள் எவரேனும் உண்டா என்றால் கேள்வி குறியாக உள்ளது...

ஒழுங்கின்மையிலே பழகி பழகி போய் விட்ட நிலையில் கிணற்று நீரின் அடியில் ஒரு மணி நேரம் மூச்சை அடக்கி பயிலும் ஒரு யோகி என்று சொல்லக் கூடியவரை தனது இயல்பாக ஓடும் சுவாசத்தில் சுவாச ஒழுங்கோடு இருக்கச் சொன்னால் அவரால் 2 நிமிடம் கூட இருக்க முடியாமல் இருப்பது மிகவும் வியப்பான விசயமாகும்..

இந்த கோணத்தில் பார்க்கையில் எல்லா சாதனைகளும் ஒழுகின்மையின் அடிபடையில் அமைக்கப் பட்டதால் அவற்றில் எந்த விசேசமும் இல்லை..

பிரபலமான நடிகர்கள் தங்களின் இயல்பான நிலையை விட்டு ஏதோ கற்பனை பாத்திரத்தின் ஒழுங்கின்மை என்ற நடிப்பில் பேரும் புகழும் அடைவது என்பது சமுதாயத்தின் ஒழுங்கின்மைக்கு ஏற்றால் போல் இருப்பதாலே இது சாத்தியமாகிறது..

அப்படியே உலக சாதனைகளை படைத்த அனைத்து பிரபலங்களும் ஒழுங்கின்மையின் உச்சத்திற்கு சென்றவர்கள்..

உதாரணமாக மாவீரன் என்று போன்றப்படும் அலெக்சாண்டர் பல ஆயிரம் உயிர்களை கொன்ற ஒரு உச்சக் கட்ட ஒழுங்கின்மையின் பூரண அடையாளம்..

அவன் பல நாடுகளை வென்றாலும், அவனால் இரண்டு நிமிடம் கூட சுவாச ஒழுங்கிலே இருக்க முடியாது..

காரணம் தன்னை வெல்ல முடியாத மகா கோழை அவன்... தன்னை வெல்ல முடியாத மகா கோழைகளுக்கே பேரும் புகழும் வந்து சேருகின்றன.. இதுதான் விசித்திரமான மாயையின் தோற்றம்..

தன்னை வெல்ல முடியாதவன் உலகை வெல்வதால் எந்த சிறப்பும் இல்லை..

தன்னை வெல்ல முடியாத பிரபல நடிகர்கள் அரசியல்வாதிகளிடம் இருக்கும் தனிப் பட்ட கெட்ட பழக்க வழக்கங்கள் அவர்களின் கோழைதனத்தின் மறைமுக எடுத்துக் காட்டு...

தன்னை அறிந்து தன் இயல்பு நிலை அறிந்து, தன் பிரபஞ்ச தொடர்பு நிலை அறிந்து, அதோடு பொருந்தி, பொருந்தி, சிறப்பான சத்திய, ஒழுங்கு,தயவு வாழ்வு, வாழ முடியாதவர்கள் உண்மையில் கோழைகளே....

ஏன் இந்த சுவாச ஒழுங்கோடு இருப்பது அவ்வளவு சிரமம் ?

மரணத்திற்கு பின் ஒருவரின் சூட்சம தேகம் பிரபஞ்ச பேராற்றலால் பேரறிவால் பக்குவப் படுத்தப் பட்டு பண்படுத்தப் படுகிறது..

தோன்றா நிலையில் இருக்கும் அந்த பிரபஞ்ச பேராற்றல் ஒழுங்கின் வடிவம்..

அதை அடைந்த எதுவும் தன் ஒழுங்கின்மையை கை விட்டு விட்டு அந்த பேரற்றலின் ஒழுங்கோடு இணைந்து ஒழுங்கின் வடிவமாக மாறியே ஆக வேண்டும்.. அதுவாகவே ஆக வேண்டும்..

அப்படி ஆன அந்த சூட்சம தேகம் பிறவி எடுத்த உடன் முதலில் பிரபஞ்ச ஓழுங்கோடு தான் இருகிறது..

தூல தேகத்தில் மட்டுமே அந்த தூய பிரபஞ்சத்தின் தன்மையை அனுபவப் படமுடியுமே தவிர சூட்சம தேகத்தால் முடியாது..

அப்படி உடல் எடுத்த சூட்சம தேகம் உலக சார்புகளை சார்ந்து ஒழுங்கின்மை ஆகி விடுகிறது... பிரபஞ்சத்தின் தூய்மையை மறந்து போய் விடுகிறது..

ஒழுங்கின்மை காரணமாக அழிந்து போன தேகத்திற்கு மீண்டும் அதே கதைதான்..

அந்த கதை மீண்டும் மீண்டும் தொடராமல் இருக்கவே சுவாச ஒழுங்கின் மூலம் பிரபஞ்சத்தின் தூய்மையை மீண்டும் பெற வேண்டி இருக்கிறது..

ஒழுங்கின்மையின் அழுத்தம் அதிகமாக இருக்க இருக்க சுவாச ஒழுங்கு என்ற இயல்பான நிலை மிகவும் கடினமாகிறது..

ஆக சுவாச ஒழுங்கு என்பது, பிரபஞ்ச ஆற்றலால் இயக்கப்படும் சுவாசத்தில், நிலை நிறுத்தப் படும் ஒழுங்கு என்பது பிரபஞ்ச ஆற்றலோடு, இணைந்து இருப்பதற்கு சமம்..

மரணத்திற்கு பின் ஆன்மா ஆகிய உயிர் நிலை, பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து, பக்குவப் படுதலுக்கு ஒத்த நிலை..

அந்த சுவாச ஒழுங்கில் மனம் தன் தன்மையான ஒழுங்கின்மையை இழக்க நேரிடுவதால், மனம் தன்னையே இழந்தது போல ஆவதால், மனம் தான் கொண்டுள்ள எண்ண ஆதிக்கங்களால், சுவாச ஒழுங்கை எப்படியாவது கெடுக்கவே செய்யும்.. அதனால் தான் சுவாச ஒழுங்கு அவ்வளவு சிரமமாக உள்ளது..

இந்த சுவாச ஒழுங்கின்மையை புத்தி கண்டு அறிந்து ஒவ்வொரு தடவையும் சுவாச ஒழுங்கின்மையை சரி செய்யும் பொழுது, புத்தியானது தனது ஆதிக்கத்தை மனதின் மேல் செலுத்துகிறது..

இப்படியாக சுவாச ஒழுங்கிற்கு ஏற்படும் ஒவ்வொரு தவறிலும், அதை ஒழுங்கிற்கு கொண்டு வர முயலும் புத்தி சிறுக சிறுக மனதின் மேல் ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு முடிவில், பூரணமாக புத்தி ஆனது மனதை தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்கிறது..

அந்த நிலையில் மனமானது புனித சக்தியாகிய புத்தியின் கனலால் நிரப்பப் பட்டு சுத்த மனம் ஆகிறது..

அந்த நிலையில் மட்டுமே மனதின் ஆதிக்கத்தில் உள்ள சித்தமும் தேகமும் முழுமையாக பிரபஞ்ச ஆற்றலை பெறும் தகுதி பெற்று, பேரண்ட பேர் ஆற்றலையும் பெறுகிறது.. இவை அத்தனையும் சுவாச ஒழுங்கில் சாத்தியமாகிறது...

இந்த சுவாச ஒழுங்கின் மூலம் பிரபஞ்ச பேராற்றலையும் பேரறிவையும் பெறலாம் என்பதும், சித்தராகலாம் என்பதும், வலுவான சத்தியமான உண்மை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.