06/05/2018

மூவாயிரம் ஆண்டுக்கு முந்தைய வரலாறு.. கொடைக்கானல் மலையில் குள்ள மனிதர்களா?


கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் குள்ளமனிதர்கள் வாழ்வதாக அப்பகுதி மக்கள், இந்த நவீன காலத்திலும் நம்புகிறார்கள்.

பெருமாள்மலையிலிருந்து பழனி செல்லும் மலைச்சாலையில் இரண்டு கி.மீ. தொலைவில், முதன்மை சாலையிலிருந்து விலகிச் செல்கிறது பேத்துப்பாறை என்கிற ஊர்.

இங்கிருந்து மேலும் கீழே 6 கி.மீ. பயணம் செய்தால் கணேசபுரம். இதனை அவ்வூர் மக்கள் அஞ்சுவீடு என்றும் அழைக்கிறார்கள்.

அஞ்சுவீட்டிலிருந்து அரை மணி நேரப் பயணத்தில் மலையேறிச் சென்றால், யானைகள் வலசை செல்லும் பகுதியில் அமைந்திருக்கிறது பத்து ஏக்கர் எனும் குள்ளர் குகைப் பகுதி.

மலையின் விளிம்பில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் 30 மீட்டர் சுற்றளவில் ஆறு குகைகளைக் கொண்ட தொகுப்பும், அதற்கு அருகில் முந்நூறு மீட்டர் தொலைவில். மேற்கண்ட அதே சுற்றளவில் ஐந்து குகைகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பும், இதற்கு அண்மையில், அதே போன்று ஐந்து, நான்கு மற்றும் இரண்டு குகைகள் கொண்டு தொகுப்பும் காணப்படுகின்றன.

ஒவ்வொரு குகையும் நான்கு பக்கமும் பட்டையான பெரும் கற்களைக் கொண்டு மூடி ஒரு பக்கம் திறந்து விடப்பட்டிருக்கிறது. அதற்குள் நுழைந்தால் மூன்று பேர் உள்ளே அமர்ந்து கொள்ள முடியும்.

வரலாற்றுக் காலத்திற்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள், இறந்தவர் நினைவாக அமைத்துள்ள கற்குகைகள் (டால்மென்) என்பதை அறியமுடிந்தது.

அவ்வூரைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் கூறுகையில், 'இங்கு குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாகவும், அவ்வப்போது அவர்கள் வந்து செல்வதாகவும் உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். ஒரு சாரார், இது பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது அமைத்த குகை என்ற அடிப்படையில் பாண்டவர் குகை என்றும் அழைக்கின்றனர்' என்கிறார்.

ஒவ்வொரு வட்டமும் மிகக் கடினமான பாறைகளைக் கொண்ட அடித்தளத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. குகை ஒவ்வொன்றும் 2 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளன. பெரும்பாலான குகைகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

கற்கள் அனைத்தும் சரிந்து கிடக்கின்றன. சில குகைகளுக்குள் பாம்புகள் அதிகம் தென்படுகின்றன.

இதுகுறித்து தொல்லியல் அறிஞர் முனைவர் வெ.வேதாசலம் கூறியபோது, 'இது போன்ற கற்குகைகள் அனைத்தும் நீத்தாரை நினைவுபடுத்தும் பண்டைய மரபின் தொடக்கம் என்று கொள்ளலாம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மரபு என்பதால், இது போன்ற கற்திட்டைகள், குற்குகைகள், கல்வட்டங்கள் உலகம் தழுவிய அளவில் ஒரேமாதிரியாகக் காணப்படுகின்றன.

கொடைக்கானலைப் பொறுத்தவரை பரவலாக அதன் அனைத்து மலைப்பகுதிகளிலும், குறிப்பாக தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கூடலூர் பகுதிகளில் நிறைந்து காணப்படுகின்றன.

இதனை அந்தப் பகுதி மக்கள் குள்ளமனிதர்கள் வாழும் குகை, வாலியர் குகை, பாண்டவர் குகை என்று அழைத்துக் கொள்கின்றனர்.

ஆனால் தங்களோடு வாழ்ந்து இறந்து போன மனிதர்களின் நினைவாக அமைக்கப்பட்டு வணங்கப்பட்ட பண்டைய வழக்கம் காரணமாக அமைக்கட்டவையே இந்தக் கற்குகைகள். இதனை 'டால்மென் சைட்' என்று அழைக்கிறோம்' என்றார்.

இத்தனை பெரிய கற்களை தூக்கிக் கொண்டு வந்து, மலை விளிம்புகளில் மிக நேர்த்தியாக அமைத்து முன்னோர்களை வழிபட்ட நம் முன்னோர்களை நினைத்தால் பெருமையாகத்தான் உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.