விசாரணை மற்றும் சிறை கதிகளுக்கு காவல் துறையின் பிடியில் இருக்கும் போது நடக்கும் மரணங்கள் குறித்த செய்தி செய்தித்தாள்களில் வெளியானதை குறித்து, 1986 டிசம்பர் 26ஆம் தேதி, திரு. டிகே. பாசு அவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஒரு கவன ஈர்ப்பு கடிதம் எழுதினார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், அதன் முக்கியத்துவத்தை அறிந்து, 'காவலில் மரணங்கள் ' குறித்து விபரமாக ஆராயவும் , வேண்டிய சட்ட வழிமுறைகள் வகுக்கவும், பாதிக்கப்பட்டவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் நஷ்ட ஈடு வழங்க வழி செய்யவும், சட்டத்தை தன் கையில் எடுத்த காவல்துறை அதிகாரிகளை தங்கள் செய்கைக்கு பதில் சொல்ல வைக்கவும், ஆவன செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். பெரும்பாலும் சிறை மரணங்கள் மூடி மறைக்கபட்டு குற்றவாளி தப்புவதுடன் , அப்படிப்பட்ட சம்பவங்கள் பெருகி வளர்ந்து வருகின்றன.
இந்த பிரச்சனையின் தீவிரத்தையும் அதிகரித்து வரும் சிறை மரணம் குறித்த புகார்ளையும் உணர்ந்து, அந்த கடிதமே ஒரு "ரிட்" மனுவாக ஏற்கப்பட்டு , 09/02/1987 அன்று கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.
அதற்கு பதிலளிக்க மேற்கு வங்க அரசு எதிர் மனு தாக்கல் செய்தது. அதில் சிறை மரணங்கள் குறித்து எதுவும் மூடிமறைக்கப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட மரணத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டது. மேலும் வாதியின் மனு புரிதல் இல்லாதது, திசைதிருப்புவது, மற்றும் ஆதாரமற்றது என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது.
14/8/1987 அன்று நீதிமன்றம் கீழ்கண்ட உத்தரவை வழங்கியது:
"ஏறத்தாழ எல்லா மாநிலங்களிலும் இது குறித்த புகார்களும் , செய்தித்தாள்களில் 'லாக் அப் மரணங்கள்' என குறிப்பிடப்படும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க எந்த அமைப்பும் இருப்பதாக தெரியவில்லை. இது ஒட்டு மொத்த இந்திய சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதாலும், எல்லா மாநிலங்களையும் பாதிக்கும் விஷயமாக இருப்பதாலும், அனைத்து மாநிலங்கலுக்கும் நோட்டீசு அனுப்பி, அவர்கள் இது விஷயமாக சொல்ல விரும்புவதை அறிய வேண்டிதும் அவசியம். கூடவே இந்திய சட்ட ஆணையத்துக்கும் நோட்டீசு அனுப்பப்படட்டும். இதில் தேவையான ஆலோசனைகளை இன்றிலிருந்து 2 மாதத்திற்குள் அவை பதில் அளிக்கட்டும்
அதற்கு பதிலளிக்கும் வகையில் மேற்கு வங்கம், ஒரிசா, அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு, மேகாலயம், மகாராஷ்டிரம், மணிபூர், சண்டிகர் உள்ளிட்ட அரசுகளும், இந்திய சட்ட ஆணையமும் வாக்குமூலம் தாக்கல் செய்தன.
9 வருட விவாதங்களுக்கு பிறகு, 18/12/1996 அன்று, நீதிமன்றம், கைது மற்றும் காவல் சிறைவைப்பிற்கு கடைபிடிக்க வேண்டிய 11 முன்தேவைகள் அடங்கிய நெறிமுறையை வகுத்து, தக்க சட்ட உருவாக்கப்படும் வரை இதை அமலாக்கியது.
(1) கைது செய்யும் காவலரும் கைதானவரை விசாரிக்கும் காவலரும் சரியான, பார்வையில் படும்படியான தெளிவான, பெயர் மற்றும் பதிவி அடங்கிய அடையாள பெயர்குறிப்பை (பேட்ஜ் ) அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு விசாரணை அனைத்து காவலர்கள் குறித்த விபரமும் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
(2) கைது செய்யும் காவல் துறை அதிகாரி, கைது செய்யும் நேரத்தில், கைது பற்றிய குறிப்பு ஒன்று தயாரித்து, அதில் குறைந்தது ஒருவரின் சாட்சி கையெழுத்தை பெற வேண்டும். அந்த சாட்சி கைதானவரின் குடும்ப உருப்பினராகவோ, கைது செய்யப்பட்ட பகுதியில் மரியாதைக்கு உரிய ஒருவராகவோ இருக்க வேண்டும். அதில் கைது செய்யப்படும் நபரும் கையெழுத்து இட்டு தேதி நேரம் உள்ளிட்ட விபரங்களையும் எழுதி ஊர்ஜீதப்படுத்த வேண்டும்.
(3) காவல் நிலையத்திலோ, அல்லது விசாரணை மையத்திலோ, அல்லது பிற சிறை இடத்திலோ இருக்கும் கைதான அல்லது விசாரணைக் காவலில் இருக்கும் நபர், அவருக்கு தெரிந்த அல்லது அவரது நலனில் விருப்பமுள்ள ஒரு நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ, யதார்த்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக, கைது குறித்து தகவல் தெரியப்படுத்த உரிமை உண்டு. ஒருவேளை அந்த நலன் விரும்பி, சாட்சி கையெழுத்து இட்ட நபராகவே இருந்தால் அது தேவையில்லை.
(4) அந்த நலன்விரும்பி நண்பர்/உறவினர் வெளியூரில் அல்லது வெறியாட்டத்தில் இருந்தால் கைது நடந்த இடம், நேரம், தற்போது காவலில் இருக்கும் இடம் உள்ளிட்ட விபரங்களையும், அந்த காவல்நிலையத்தின்/மாவட்டத்தின் சட்ட உதவி அமைப்பு மூலமாக, கைது நடந்த 8 அல்லது 12 மணி நேரத்திற்குள் தந்தி மூலம், தெரியப்படுத்த வேண்டும்.
(5) கைது செய்த உடனே அல்லது காவலில் வைக்கப்பட்ட உடனே, கைதானவருக்கு, கைது குறித்து வேண்டியவருக்கு தெரியப்படுத்தும் உரிமை உள்ளதை, தெரிவிக்க வேண்டும்.
(6)காவலில் வைக்கப்படும் இடத்தின் டைரியில்(பதிவில்) கைதாகி காவலில் வைக்கப்படும் நபர், தகவல் தெரிவிக்கப்பட்ட அவரது நண்பர் , காவல் இடத்தின் அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள், ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
(7) கைதானவர் கோரினால், கைதாகும் நேரத்தில், அவரது பரிசோதனை செய்து அந்த சமயத்தில் அவரது உடலில் உள்ள சிறிய மற்றும் பெரிய காயங்களை "ஆய்வு குறிப்பு" ஒன்றில் பதிவு செய்ய வேண்டும். அந்த ஆய்வு குறிப்பில் கைதானவர் மற்றும் கைது செய்த அதிகாரி இருவரும் கையெழுத்து இட்டு, அதன் நகலை கைதானவருக்கு கொடுக்க வேண்டும்.
(8) காவலில் இருக்கும் போது, 48 மணி நேரத்திற்கு ஒரு முறை, அந்த மாநிலம்/யூனியன் டெரிடெரியின் உடல்நல சேவை இயக்குனரால், அனுமதிக்கப்பட்ட, மருத்துவர் குழுவை சேர்ந்த ஒரு மருத்துவர், கைதானவரை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். உடல்நல சேவை இயக்குனர் அனைத்து மாவட்டம் மற்றும் தாசில்களுக்கும் அப்படி ஒரு மருத்துவ குழுவை உருவாக்க வேண்டும்.
(9) மேலே குறிப்பிடப்பட்ட, கைது குறிப்பு உள்ளிட்ட அனைத்து கோப்பு நகல்களும் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு, அவரது பதிவிற்காக, அனுப்பப்பட வேண்டும்.
(10) விசாரணையின் போது கைதானவர் தனது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். ஆனால் விசாரணை நேரம் முழுவதற்கும் அனுமதிக்க அவசியம் இல்லை.
(11) அனைத்து மாவட்டம் மற்றும் மாநில தலைமையகத்திலும், கைதானவரின் கைது மற்றும் காவல்/சிறை வைப்பு குறித்த தகவல்களை, கைது செய்த அதிகாரி கைது நடந்த 12 மணி நேரத்திற்குள் தெரிவிக்க, காவல்துறை கட்டுப்பாட்டு அறை இருக்க வேண்டும். காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அந்த தகவல்களை அனைவரின் பார்வையிலும் படும்படியாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.
மேலே விதிக்கப்பட்ட முன்தேவைகளை கடைபிடிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பிற்கு உண்டான தண்டனையும் வழங்கப்படலாம். அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சம்பந்தபட்ட இடத்தின் சட்டவரம்பிற்கு அதிகாரம் உள்ள உயர்நீதி மன்றத்தில் நடக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.