22/06/2018

மனோதிடம்...


மனிதனாகப் பிறந்துவிட்ட நம்மை முன்னேற்றியே தீருவது என்று கச்சை கட்டிக் கொண்டு நிற்கிறார்கள் பல புத்தக வெளியீட்டாளர்கள். ஆண்டவனின் திருவடியை அடைய அறுபது சுலப வழிகள் என்பது முதல் இடது கால் சுண்டு விரலின் நகத்தை இடது கையால் வெட்டுவது எப்படி என்பது வரையில் சகலவிதமான தந்திரங்களையும் சொல்லித் தரும் புத்தகங்கள் ஏராளமாக வருகின்றன. கடைப் பிடிக்கிறோமோ இல்லையோ சுவாரஸ்யமாகப் படிக்க முடிகிறது.

இன்னொரு உபயோகம் என்னவென்றால் அந்தக் கஷ்டம் இந்தக் கஷ்டம் என்று நம்மிடம் வந்து புலம்புகிற பேர்வழிகளிடம் 'இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் உங்கள் கவலைகள் யாவும் தீரும்' என்று கூறிக் கொடுத்தனுப்பலாம். பிறகு அவர்கள் உங்களிடம் வரவே மாட்டார்கள்.

ஆனால் அடிப்படையில் மனோதிடம், மனோதிடம் என்கிறார்களே அது மட்டும் இருந்துவிட்டால் எந்தப் புத்தகமும் தேவையில்லை. சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி விகடன் பிரசுரம் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறது. அழகான அச்சு. கவர்ச்சியான வடிவமைப்பு. பீட்டர் க்ராஸ் என்பவரும் க்ளைவ் ஹாப்வுட் என்பவரும் இணைந்து எழுதிய ஆங்கிலப் புத்தகத்தின் மொழி பெயர்ப்பு. 200 பக்கங்கள். விலை நூறு ரூபாய். 'புகைப்பதை நிறுத்துவோம்' என்ற இந்தப் புத்தகத்தில் சின்னதும் பெரிதுமாகப் பல விஷயங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
என் நண்பரொருவர் நிறைய சிகரெட் பிடிப்பவர். அவரது மனைவியிடம் இதைக் கொடுத்து 'உங்கள் கணவரிடம் கொடுங்கள்' என்றேன். 'இதைப் போல நூறு புத்தகங்களை வாங்கித் தந்துவிட்டேன். அவரைத் திருத்த முடியவில்லை' என்றார் அலுப்புடன்.

எந்த நல்ல காரியமானாலும் முதலில் ஆசமனம் செய்ய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்வார்கள். (ஆசனம் செய்வது என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அதற்கான புத்தகத்தைப் படியுங்கள்.) மனோதிடம் பெறுவதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.

 பசியெடுத்தால் உடனே சாப்பிட உட்காராதீர்கள். ஒரு மணி நேரம் தள்ளிப் போடுங்கள். ஒரு கடினமான வேலையை செய்து கொண்டிருக்கும்போது கைக்கருகே உள்ள தினசரி 'வேளச்சேரியில் இரட்டைக் கொலை' என்று கொட்டை எழுத்தில் பேப்பரை எடுக்காதீர்கள். இப்படியே செய்து வந்தால் எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பதில் முனைப்பு ஏற்படும்.

உங்கள் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருங்கள். உங்கள் அம்மாவிடம் சொல்வதற்கு வெட்கப்படும் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்.

தூக்கத்தைக் குறையுங்கள். காலையில் எழுந்தவுடன் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் என்ன. அவற்றை எப்படி செய்ய போகிறோம் என்று சிந்தியுங்கள். மென்மையான இசையைக் கேளுங்கள்.
கண்ணாடி முன் நின்று ஐந்து நிமிடங்கள் வாய்விட்டு சிரியுங்கள். நாலு வயதுக் குழந்தை ஒரு நாளைக்கு 500 தடவைகள் சிரிக்கிறதென்று கணக்கிட்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தை மனம் உங்களுக்கு இருக்க வேண்டும்.

நடைப் பயிற்சியின் போது, எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறோம் என்பதை எண்ணிக் கொண்டே நடங்கள். மன ஒருமைப்பாட்டுக்கு இது மிகவும் உதவும்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உபவாசம் இருங்கள். பழ ரசத்தை மட்டுமே அருந்துங்கள் அல்லது பழங்களை சாப்பிடுங்கள்.

நாளொன்றுக்கு குறைந்த பட்சம் பத்து டம்ளர்கள் தண்ணீரைக் குடியுங்கள்.

இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா என்ற பிரச்னை ஏற்படும்போது இரண்டில் எது கடினமானதோ அதை செய்யுங்கள்.

ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய பெயரை அடிக்கடி சொல்லுங்கள். 'நான் என்ன சொல்கிறேன் என்றால், மிஸ்டர் நாராயணசாமி', நீங்கள் சொல்வது புரிகிறது மிஸ்டர் தாமஸ்' என்பது போலப் பேசினால் உறவு பலப்படுகிறது. எந்த மனிதருக்கும் அவருடைய பெயர் இனிய சங்கீதம்.

செய்யப் பிடிக்காத இரண்டு வேலைகளை ஒவ்வொரு நாளும் செய்யுங்கள். புத்தக அலமாரியை சுத்தம் செய்வது, உறவினருக்குக் கடிதம் எழுதுவது, செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, பத்திரிக்கைகளைத் தேதி வாரியாக அடுக்கி வைப்பது இப்படி ஏதாவது இரண்டு வேலைகளை செய்து முடியுங்கள்.

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டுமானால் அதற்கு அலாரம் தேவையில்லை. உங்களுக்குள்ளேயே ஒரு அலாரம் இருக்கிறது. படுப்பதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன், வசதியான நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் கைகளை முழங்காலின் மீது மேலோடு வைத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொள்ளுங்கள். 'நாளைக் காலையில் ஐந்து மணிக்கு நான் புத்துணர்வுடன், உற்ச்சாகத்துடன், சுறுசுறுப்புடன் எழுந்திருப்பேன்' என்று இருபது முறைகள் சொல்லுங்கள். மறுநாள் காலை தானென்று ஐந்து மணிக்கு எழுந்து கொள்வீர்கள்.

எழுந்ததும் மூன்று மந்திரங்களை சொல்லுங்கள்: 'இன்று நான் பிறரிடம் பரிவு காட்டுவேன். இன்று நான் பிறருக்கு உதவி செய்வேன். இன்று நான் கருணையுடன் நடந்து கொள்வேன்'...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.