30/07/2018

சிலுவை யுத்தங்கள் − 6...


சின்னாசிய பிரதேசத்தில் துருக்கிய ஸல்ஜூக்கியர்களின் வெற்றி...

ஹி.462(கி.பி.1071) இல் Manzikert (மன்ஸிகேட்/மலஸ்காட்) யுத்தத்தில் ஸல்ஜூக்கிய சுல்தான் அலப்அர்ஸலான் என்பவரிடம் உரோமர் படுதோல்வி அடைந்து சிலுவைப் போருக்கான இன்னொரு காரணமாகும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அப்போரில் உரோம அரசன் நான்காம் "ரோமன்ஸ் டியோஜினஸ்" முஸ்லிம்களால் கைதியாக்கப்பட்டான். பின்னர்,பல நிபந்தனைகளோடு கூடிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டான்.

இந்த "Manzikert" (மன்ஸிகேட்)" யுத்தத்தில் உரோமர்கள் அடைந்த தோல்வி,அவர்களின் உள்ளங்களிலே எப்போதாவது, எப்படியாவது முஸ்லிம்களைத் தோற்கடிக்க வேண்டும் எனும் தீராத வெறியை   ஏற்படுத்தியிருந்தது. உரோமர்களின் வரலாற்றிலேயே மிகப் பெரிய ஏமாற்றத்தையும் தோல்வியாகவும் அமைந்த அப்போர், மேற்குலகைச் சேர்ந்த கிறித்துவர்கள்,கிழக்குலக முஸ்லிம் நாடுகளின் மேல் தமது கவனத்தைத் திருப்பக் காரணமாகவும் இருந்தது.

உரோமப் பேரரசன் பாப்பரசரிடம் உதவி கோருதல்...

ஸல்ஜூக்கிய சிற்றரசின் ஆட்சியாளர்கள் சின்னாசிய (துருக்கி)விலுள்ள உரோம அரசப் பிரதிநியான "அலக்ஸியஸ்" என்பவனின் ஆட்சிப் பிரதேசங்களான ஹலப்,ரஹா,மவ்ஸில் என்பவற்றைக் கைப்பற்றியதோடு ஐரோப்பியப் பிரதேசங்களையும் வெற்றி கொள்ள நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

வளர்ந்து வரும் ஈமானிய உணர்வுள்ள முஸ்லிம்களின் சக்தியை எவ்வகையிலும் தன்னால் தடுத்து நிறுத்த முடியாது எனக் கண்ட உரோம அரசன், கி.பி.1094ல் கிறித்துவ மதத் தலைவரான பாப்பரசரிடம் உதவி கோரியது தான் உடனடிக் காரணம் என வரவாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

கி.பி.869−ஆம் ஆண்டு ரோமிலும் கி.பி.879−ஆம் ஆண்டு ஸ்காண்டி நோபிலும் நடைபெற்ற மாநாட்டைத் தொடர்ந்து கிறித்துவத் திருச்சபை கிழக்கு திருச்சபை, மேற்கு திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது.கிழக்கு திருச்சபையைச் சேர்ந்த அரசன் அப்போதைய உரோமத் திருச்சபையின் தலைவராக இருந்த பாப்பரசர் இரண்டாம் "ஏர்பனிடம்" உதவி கோரி வேண்டுகோள் விடுத்தான்.

கிழக்குத் திருச்சபையின் மீது தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் நிறுவிக்கொள்ள இதனை ஒரு சந்தர்ப்பமாகக் கருதிய மேற்குத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் இரண்டாம் ஏர்பன், உரோமப் பேரரசின் வேண்டுகோளுக்கு இணங்கி உதவி வழங்கினார்.

குறிப்பு:- ஸல்ஜூக்கியர் என்பது அப்பாஸிய ஆட்சியின் கீழ் ஆட்சி செய்த முஸ்லிம் சிற்றரசாகும்.

- தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.