18/07/2018

ஆமை புகுந்த வீடு உருப்படாது...


வழக்கம் போல சொல்பிழைகளால், அர்த்தம் மாறிய பழமொழிதான் இது.

பழமொழிகளுக்கு இப்படி நேர்ந்ததன் காரணம் அதன் பழமை (தொன்மை) தான். பாடல்களாக இருப்பின் கல்வெட்டுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதி வைத்து காத்தார்கள்.

பழமொழிகள் என்பது வட்டார வழக்கு போன்றது. பேசிப் பேசிக் கொண்டு வந்த மொழிகள். யாரும் எழுதி வைத்து காக்கவில்லை, அவசியமும் இல்லை, காரணம் இது பேச்சு வழக்குதான். இந்த பழமொழியில் வரும் எழுத்துகள் திரிந்து பொருள் மாறியது இப்படித்தான்.

புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் காளான். இருட்டிலும் ஈரப்பதத்திலும் காளான் தோன்றும்.

அந்தக் காலத்தில் எல்லாம் பலகை வீடுகள்தாள் என்பதை அறிவோம். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்குப் பல நோய்கள் தொற்றிக்கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள்.

எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணிப்பார்கள். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இப்படித்தான் இந்த பழமொழி கூறுகிறது.

சரியான பழமொழி இது தான்.

ஆம்பி பூத்த வீடு உருப்படாது. 'ஆம்பி' என்றால் காளான்.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.