சட உலகுக்கே உரித்தான ஆவிப் பொருளை (Etheric Matter) உதறினாலொழிய சூட்சும உலகை அடைய முடியாது.
எனவே இவர்கள் சில நாட்களுக்கு ஆவி வடிவத்தை உதற முடியாமலும் தாம் நேசித்துப் பக்குவப்படுத்தி வந்த உடல் அழிந்துவிட்டபடியால் புலணுணர்வுகளைத் திருப்பிப் பெற இயலாமலும் இங்குமின்றி அங்குமின்றி இழுபறிப்பட்ட இடைநடுவே நின்று சஞ்சலப்படுகிறார்கள்.
பலவிதமான ஆசைகளையும் கற்பனைகளையும் மனதில் வளர்த்து வைத்துக் கொண்டு தங்கள் உடல்களை ஆசையுடன் அலங்கரித்துப் பேணி வந்த யுவதிகளும் இளைஞர்களும் சடுதி மரணம் அடைய நேரும் பொழுது இத்தகைய பரிதாபத்துக்குரிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இறந்தவரின் உடலை எரித்துவிடுவது தான் சிறந்த முறை.
ஆவி இரட்டை வடிவமானது தான் இதுவரை காலமும் எந்த உடலுடன் ஒட்டிக்கொண்டிருந்ததோ அந்த உடலின்பால் ஈர்க்கப்பட முடியாத நிலையில் அழிந்துவிடுகிறது.
உடலை விட்டு உயிர் நீங்கும் தருணத்தில் உடலின் பல்வேறு உறுப்புகளினதும் சக்திகள் யாவும் ஒருமுனையில் ஒன்றுபட்டு நின்றபின் “சுழுமுனை” நாடிவழியே மேலெழுந்து மூளையின் உட்குழிவுப் பள்ளத்தையடைந்து மண்டையோட்டின் உச்சிப்பாகமும் தலையோட்டின் பின் எலும்பும் சந்திக்கும் இணைப்பின் வழியாக (Parietal and Occipital Suture) வெளியேறுவதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு சக்திகள் ஒன்றுபட்டு வெளியேறும் நேரங்களில் சிலருக்கு நுண்நோக்காற்றல் ஏற்படுவதால் தூர தேசத்தில் இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு ஆவியுருவாகக் காட்சி கொடுப்பதும் உண்டு.
இறக்கும் தறுவாயில் சிலமனிதர்களால் இச்சட உலகுக்குரிய அதிர்வுகளுக்கு (Vibrations) அப்பாற்பட்ட குறைந்த அல்லது கூடிய அதிர்வுகளை ஏற்படுத்தி சிலதோற்றங்களை வெளிப்படுத்தவும் சட உலகிற்குரிய புலனுக்கு அப்பாற்பட்டதை காணவும் கேட்கவும் கூடியதாக இருக்கும்.
நமது பார்க்கும் கேட்கும் உணரும் திறன்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மிக நுண்ணிய உயிரணுக்களையே மிகத்தொலைவிலுள்ள பொருட்களையோ வெற்றுக்கண்களால் நம்மால் பார்க்க முடிவதில்லை.
உலகம் சுற்றுவதால் ஏற்படும் சத்தத்தையோ நிலத்தில் ஊர்ந்து செல்லும் ஜந்துக்கள் உண்டாக்கும் ஓசையையோ எம்மால் கேட்க முடிவதில்லை.
நமது சூழலிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நுண்ணுயிர்களை நம்மால் உணர முடிவதில்லை.
நமது புலனுணர்வுகளை இவ்வாறாக மட்டுப்படுத்தாது விட்டிருந்தால் எத்தனை சிக்கல்கள் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்…
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.