உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.
உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.
துவர்ப்பு: உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.
இனிப்பு: மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.
புளிப்பு: உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.
காரம்: பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.
கசப்பு: பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.
உவர்ப்பு: அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.
உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.
இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
எப்போதும் உணவு உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.
எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.
உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம்.
உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.
நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.
'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.