26/07/2018

நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய்...


ஒருமுறை தேரையர் அகத்தியரிடம்...

குருவே.. மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார்.

அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார்.

சீடனே... உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.

சுவாமி. தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே. இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே. இதெப்படி சாத்தியம்? என்றார்.

சீடனே.. ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.

தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார்.

நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார்.

நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள்.

ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்.

மகனே. ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும்.

மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும்.

எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.