19/08/2018

எட்டுவழிச் சாலை திட்டத்தை கைவிடுக! 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம்; விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு...


சேலம் - சென்னை எட்டு வழிச்சாலையை எதிர்த்து அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு...

சேலத்திலிருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று சாலைகள் உள்ளன. நான்காவதாக அதிவிரைவு எட்டு வழிச்சாலை ஒன்றைஅமைக்க மத்திய - மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதை செயல்படுத்துவதற்கான முறையில் நிலங்களை அளவீடு செய்வது, முட்டுக்கல் போடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நில உரிமையாளர்களான விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக கடும் எதிர்ப்பினை அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடமும் விவசாயிகள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராடி வருகின்றனர்.

தொடரும் போலீஸ் அராஜகம்...

ஆனால் தமிழக அரசு, சட்டவிரோதமாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையை பயன்படுத்தி அச்சுறுத்தியும் மிரட்டியும் பொய் வழக்கு போட்டும் ஆசை வார்த்தை காட்டியும் நிலத்தை அளக்கும் பணியை மேற்கொண்டது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் மீது பொய் வழக்குபோட்டு சிறையிலடைத்தது. எட்டு வழிச்சாலைக்கு எதிராக கூட்டம் நடத்தினால், பேசினால், துண்டுப் பிரசுரம் கொடுத்தால் குற்றம் என்று காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுக்கும் தமிழக அரசின் இத்தகைய போக்குகளை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து இந்த சாலைக்கு பத்தாயிரம் ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில் சுமார் ஏழாயிரம் ஏக்கர் விவசாயிகளுக்கு சொந்தமான நல்ல விளை நிலங்கள் ஆகும். இந்த நிலம்பறிக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கும் நிலை ஏற்படும். வேலை தேடி புலம்பெயரும் நிலைமை உருவாகும். மலைகளை உடைத்தும், வனங்களை அழித்தும், ஏரி- குளங்களை தூர்த்தும் சாலை அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். அதிவிரைவு சாலை என்பதால் வழியிலுள்ள கிராமமற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் மக்கள் இச்சாலையை பயன்படுத்த முடியாது.இந்த வழியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள் என அனைத்தும் தரைமட்டமாக்கப்பட உள்ளன. இத்தனை அழிவுகளை ஏற்படுத்தி இந்த சாலை அமைக்கப்படுவதன் மூலம் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுங்க வரியாக வசூலிக்க இருக்கிறது. ஏழை சிறு விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை ஏற்க முடியாது. சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில்உள்ள தாது வளங்களை கொள்ளையடிப்பதற்கான திட்டமும் இதில் அடங்கியுள்ளது என்று இக்கூட்டம் குற்றம் சாட்டுகிறது.எனவே எட்டுவழி அதிவிரைவு சாலை திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் நிலங்களில் போடப்பட்டுள்ள முட்டுக்கல் அனைத்தையும் அரசே அப்புறப்படுத்த வேண்டும். சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

10லட்சம் பேரிடம்...

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்திசம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பொதுமக்களிடம் 10லட்சம் கையெழுத்துக்கள் பெற்று முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்குவது என்றும், செப்டம்பர் 3வது வாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நிபுணர்கள் கலந்து கொள்ளக்கூடிய பொது விசாரணை அனைத்து மாவட்ட விவசாயிகளும் பங்கேற்கும் வகையில் திருவண்ணாமலையில் நடத்துவதென்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது. விவசாயிகளின் நில உரிமையைக் காக்கவும், தமிழக அரசின் ஜனநாயக விரோதநடவடிக்கைகளைக் கண்டித்தும் நடைபெறவிருக்கும் இப்போராட்டத்திற்கு அனைத்துக்கட்சி, சமூக நல அமைப்புகள் மற்றும் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கும் அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எதிர்ப்புக் கூட்டமைப்பு உதயம்...

அத்துடன் இந்த பிரச்சனையில் தொடர்ந்து கவனம் செலுத்த எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பை உருவாக்குவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள்சங்க பொதுசெயலாளர் வே.துரைமாணிக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டி.ரவீந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் ஏ.சந்திரமோகன், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பாலசுந்தரம், அகில இந்திய விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடராஜன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் ஜே.பி.கிருஷ்ணா, வாழ்க விவசாயிகள் இயக்கம் சார்பில் கே.பாலகிருஷ்ணன், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு – திருவண்ணாமலை சார்பில் அபிராமன், தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு சார்பில் தேவருக்மாங்கதன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்டமாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, தலைவர்பொன்னுசாமி, நிர்வாகிகள் ஆர்.குழந்தைவேல், பி.தங்கவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

- தீக்கதிர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.