01/08/2018

திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்...


இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்.

சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார்.

ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார்.

போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார்.

தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.

இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கக்ப்பட்டு விட்டன.

ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா. அரங்கா. அரங்கா. என்று கத்தினார்.

உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது.

அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி அரங்கா என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர்.

அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி.

சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது.

இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய “தோற்ற்க் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்” என்ற நூலில் காணப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.