ஒரு தேசத்தின் உண்மையான சரித்திரத்தை மறைப்பதற்கு எவருக்குமே உரிமையில்லை.
ஆனால் நடந்த உண்மையான சரித்திரத்தைவிட மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு, உரைக்கப்பட்ட சரித்திரம்தான் இன்று எம்மிடையே அதிகமாக உள்ளது.
நடந்த சரித்திரத்தை மறைக்கின்ற வழமைதான் இன்றுவரை சரித்திரமாகத் தொடர்கின்றது.
கத்தியின்றி, இரத்தமின்றிக் கிடைக்கப்பெற்ற சுதந்திரம் என்று இந்தியா பெற்ற சுதந்திரம் குறித்து இப்போதும் பலர் கூறி வந்தாலும், ‘அது திரிக்கப்பட்ட வரலாறு என்பதனை எதிர்காலம் கூறுமோ’ என்ற எண்ணமும் இப்போது வலுப்பட்டு வருகின்றது...
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸில் இருந்து எத்தனையோ ஆயிரம் புரட்சிவீரர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போர் புரிந்தார்கள். உண்மையில் ஆங்கிலேய ஆதிக்கத்தின் அடித்தளத்தை இப்புரட்சி வீரர்களின் போராட்டம் தான் ஆடவைத்தது.
1857ம் ஆண்டு நடைபெற்ற, ‘சிப்பாய்க்கலகம்’ என்று ஆங்கில அரசு பெயரிட்டழைத்த கலகம், உண்மையில் ஆயுதம் தாங்கிய சுதந்திரப் போராட்டம் தான்.!
சரியாக 74 ஆண்டுகளுக்கு முன்பு-அதாவது 1931ம் ஆண்டு மார்ச் மாதம் 25ந்திகதி – மகாத்மா காந்தி, கராச்சி நகருக்குச் செல்கின்றார். இலட்சக்கணக்கில் மக்கள் வெள்ளம் அலைபுரண்டு ஓடுகின்றது.
எதற்கு? காந்தியாரை வரவேற்கவா? இல்லை! கூட்டத்திலிருந்து இவ்வாறு தான் குரல்கள் எழும்புகின்றன. தலைவர்களே! திரும்பிச் செல்லுங்கள்!: காந்தி-ஏர்வின் (Erwin) ஒப்பந்தத்தை தூக்கி எறியுங்கள். பகத்சிங்கை கொன்ற பேர்வழி எங்கே? என்றெல்லாம் மக்கள் கதறுகின்றார்கள்.
அன்று மாலையில் நடந்த பெருங்கூட்டத்தில், ‘காந்தி எங்களுக்கு எதற்கு? அவர் ஒழியட்டும்’ என்று மக்கள்-அதிலும் குறிப்பாக இளைஞர்கள்-குரல் எழுப்புகின்றார்கள். ஏன்? என்ன காரணம்?
காரணம் என்னவென்றால், இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர்தான், அதாவது 1931ம்ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதியன்றுதான், இந்திய சுதந்திரப் போராட்டவீரன் பகத்சிங் அவர்களை அவரது இரண்டு போராளி நண்பர்களான சுகதேவ், ராஜகுரு ஆகியோருடன் ஆங்கில அரசு தூக்கிலிட்டுக் கொன்றிருந்தது.
இந்தியச் சுதந்திரப் போராட்ட மாவீரன் பகத்சிங்கின் முழுமையான தியாக வரலாறு மறைக்கப்பட்டு வந்துள்ளமை குறித்தும் பரவலாக வெளிவந்திராத சம்பவங்கள் குறித்தும் ஆதாரபூர்வமாகத் தர்க்கிப்பதுவே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
வெகுசனப் பிரச்சாரச் சாதனங்களை முழுமையாகத் தங்கள் கைகளில் வைத்திருந்த மேல்த்தட்டு இந்திய அரசியல்வாதிகள், பகத்சிங் போன்ற போராளிகளின் பங்களிப்புக்களை இயலுமானவரை மூடிமறைத்தே வந்துள்ளார்கள் என்பதற்கு இப்போது ஆவணச் சான்றுகளுடன் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
இவை எல்லாவற்றையும்விட, ‘பகத்சிங் அவர்களின் தூக்குத்தண்டனையை எப்போது நிறைவேற்றவேண்டும்’ என்று ஆங்கில அரசிற்கு ஆலோசனை அளித்தவரே, மகாத்மா காந்திதான்என்ற விபரமும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவை குறித்துப் பின்னர் கவனிப்போம்.
1907ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ந்திகதியன்று பஞ்சாப் மாநிலத்தில் லாகூர் நகருக்கு அருகிலுள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் பகத்சிங் பிறந்தார். அவர் 12 வயதுச் சிறுவனாக இருந்தபோது, ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் ஆங்கிலேய ஜெனரலான டயர் என்பவன் நடாத்திய படுகொலைகள் சம்பவம் பகத்சிங் மனத்தில் விடுதலை வேட்கையை ஊட்டியது. பல புரட்சி அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதற்குரிய பணிகளில் பகத்சிங் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘இந்திய சமதர்மக் குடியரசு இராணுவம்’ (H.S.R.A.) என்ற அமைப்பு ஒன்று 1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டு, அந்த அமைப்பின் மத்தியகுழு உறுப்பினராக
பகத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அமைப்பின் முதல் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளில் பகத்சிங் முக்கிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். ஒன்று, பொலிஸ் அதிகாரி சான்டர்ஸ் என்பவரைக் கொல்வது, மற்றது சட்டசபையில் குண்டு வீசுவது.
1928ம் ஆண்டு டிசம்பர் 17ந்திகதி பொலிஸ் அதிகாரி சான்டர்ஸ் சுடப்பட்ட சம்பவத்தின் பின்னர் பகத்சிங்கின் தலைமறைவு வாழ்க்கை ஆரம்பமாயிற்று. நான்கு மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் கட்சியின் முடிவுப்படி 8-4-1929 அன்று சட்டசபையில் குண்டுவீசும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதில் படுதுணிகரமான, அதேவேளை வித்தியாசமான, முடிவொன்றை பகத்சிங் எடுத்தார். அதனை எமது நேயர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.
குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடுவதைக் காட்டிலும் தாங்களே கைதாகச் சம்மதித்து, பிறகு நீதிமன்றங்களைத் தமது கொள்கை பரப்பும் மேடைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் - என்று பகத்சிங் முன்வைத்த கருத்தை ர்.ளு.சு.யு ன் மத்தியகுழு ஏற்றுக்கொண்டது.
பகத்சிங் அவர்களும் பட்டுகேஸ்வர் தத் என்பவரும் திட்டமிட்டபடி, 1929 ஏப்ரல் மாதம் 8ம் திகதியன்று சட்டசபையில் குண்டுகளை வீசிவிட்டு, ‘இ;ன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் இந்த முழக்கம் அன்றுதான் முதல்முறையாகக் கேட்டது. பின்னர் கையிலிருந்த துப்பாக்கியால் மேல்நோக்கிச் சுட்டுவிட்டு, ர்.ளு.சு.யு யின் துண்டறிக்கைகளை வீசி எறிந்தார்கள். பிறகு தாங்களாகவே முன்வந்து கைதாகினார்கள்.
இன்று பகத்சிங்கைப் புகழ்ந்து எழுதுகின்ற ஆனந்தவிகடன் பத்திரிகை அன்று பகத்சிங்கின் இந்த நடவடிக்கை குறித்து என்ன எழுதியது தெரியுமா?
நேயர்களே, 1929ம் ஆண்டு (அப்போது மாத இதழாக வெளிவந்த ஆனந்த விகடனின்) மே மாத இதழில், பகத்சிங்கின் செய்கையைக் கண்டித்தும், கேலி செய்தும் வெளியான அக்கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.
“இரண்டு இளைஞர்கள் திடீரென எழுந்து இரண்டு அசல் வெடிகுண்டுகளை எறிந்துவிட்டு, கைத்துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம். இந்த இளைஞர்கள் இருவருக்கும் முழுமூடச்சிகாமணிகள்’ என்ற பட்டத்தை விகடன் அளிக்க விரும்புகின்றான். முதலாவதாக, மகாத்மாவின் சத்தியாக்கிரகப் பீரங்கியினால் தகர்க்க முடியாத அதிகாரவர்க்கத்தை வெங்காய வெடியினாலும், ஓட்டைத் துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள் எண்ணியது மூடத்தனம். . . இந்திய குடியரசின் சேனாதிபதி என்பதாகக் கையொப்பமிட்டு, சிரிப்பதற்கு விடயம் தந்ததின் பொருட்டு விகடன் மிகவும் நன்றி செலுத்துகின்றான்.
(ஆனந்தவிகடன்-1929 மே இதழ்)
ஆனால் பகத்சிங் அவர்களும் பட்டுகேஸ்வர் தத் அவர்களும் கொடுத்த வாக்குமூலத்தைக் கேளுங்கள் நேயர்களே..
“நாங்கள் வெடிகுண்டு எறிந்தோம். எந்தத் தனிநபரையும் நோக்கி நாங்கள் வெடிகுண்டு போடவில்லை. சட்டசபை பயனற்றது என்று கருதி அதன்மீது போட்டோம். சட்டசபை இருந்து என்ன பயன்? மக்கள் பிரதிநிதிகளின் முறைப்பாடுகள் அசட்டை செய்யப்படுகின்றன. சட்டசபையினால் யாதொரு நன்மையும் கிடையாது. ஏழைமக்கள் படும்துயர் சொல்லி முடியாது. இங்கிலாந்தைக் கனவிலிருந்து தட்டி எழுப்ப வேண்டுமென்றால் வெடிகுண்டு போடவேண்டியதுதான். . . கொலை செய்யவேண்டும் என்று
எண்ணியிருந்தால் அவ்விதமே செய்திருப்போம். அநீதியாக உள்ள தற்கால சமூகவாழ்வையும், அரசியலையும் போக்குவதே புரட்சியாகும. ஒரு மனிதனின் நலத்தை, மற்றொருவன் பறிப்பதும் ஒரு தேசத்தின் நலத்தை மற்றொரு தேசம் பறிப்பதும் ஒழிய வேண்டும்.. . . நாங்கள் எச்சரிக்கை செய்துள்ளோம். இந்த எச்சரிக்கை மதிக்கப்படாமல் போனால், தேசத்தில் பெரிய புரட்சி தோன்றும். அக்காலத்தை, நாம் எதிர்பார்க்கின்றோம். புரட்சி என்ற பலிபீடத்தில் எங்களது இளமையை நாங்கள் அர்ப்பணிக்கின்றோம். எத்தகைய கஷ்ட நஷ்டம் நேரினும் சரி, அதனை அனுபவிக்க நாங்கள்
தயார்.
‘புரட்சி ஓங்குக, புரட்சி ஓங்குக’
எவ்வளவு தெளிவாக, தீர்க்கமான, வீரமான வாக்குமூலம்.
இந்த வீரமிகு செயலைத்தான் ஆனந்தவிகடன் பத்திரிகை கிண்டல் செய்து எழுதியது.
இந்த வழக்கின் விசாரணை 1929ம் ஆண்டு ஜீலை மாதம் 10ம் திகதி தொடங்கிற்று. பகத்சிங் உட்ட இந்த வழக்கில் எதிரிகளாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொகை 32. ஆங்கில அரசுக்கு ஆதரவாக
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களின் தொகை 607. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவதற்கென்று ஒரு வழக்கறிஞர் கூட இல்லை. ஆங்கில அரசுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்ல வந்தவர்களை அரச தரப்பு குறுக்கு விசாரணை செய்யாமல் அவர்களதுசாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
1930ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி தீர்ப்புக் கூறப்பட்டது.
பகத்சிங், சுகதேவர், ராஜகுரு ஆகிய மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.
ஏழுபேருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனையும், இன்னும் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டன.
7-10-1930 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் படி பகத்சிங் முதலான மூவருக்கும் 17-10-1930 அன்றே தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், ஆங்கிலேய அரசோ இவர்களை 23-3-1931 அன்று தான்(5 மாதங்கள் கழித்து ப-ர்) தூக்கிலிட்டது.
இவ்வளவு காலமும் தண்டனையை நிறைவேற்றாமல் ஆங்கில அரசு இழுத்தடித்ததற்குக் காரணம், வெளிப்படையானதுதான்.
பகத்சிங் முதலானவர்களைத் தூக்கிலிட்டால், இந்தியா முழுவதும் எழுந்து நின்று ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் கலவரங்களில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம் அன்று அவர்களுக்கு இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களின் அந்த அச்சம் அகன்றதற்கு காரணம் யார்? அதை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யார்? என்பதற்கு இன்று ஆவணங்கள் சாட்சி சொல்கின்றன.
இதன் பின்னணியைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம். காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் வலுவோடு நடந்து கொண்டிருந்தது. அந்த வேளையில் அப்போராட்டத்தை நிறுத்துவதற்காக
பல முயற்சிகளை ஆங்கில அரசு மேற்கொண்டு வந்தது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆங்கில அரசுக்குமிடையே ஒரு சமரச உடன்பாடு உருவானது. அது காந்தி-எர்வின் உடன்பாடு என்று அழைக்கப்பட்டது. இந்த உடன்பாட்டை எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்காரர்களே குரல் எழுப்பினார்கள்.
காரணம், இந்த உடன்பாடு புரட்சிகரத் தோழர்களுக்கும் இயக்கங்களுக்கும் எதிரான பல செய்திகளைத் தன்னுள் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் அரசின் கை ஓங்கியதும், புரட்சிகர நடவடிக்கைகள் வரலாற்றில் மறைக்கப்பட்டதும் இந்த உடன்பாட்டிற்குப் பின்புதான்.
இந்த காந்தி-எர்வின் உடன்பாடு காங்கிரசின் பல தலைவர்களுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது. இந்த உடன்பாட்டில் மற்ற அனைவரையும் விட காந்திதான் அதிக ஆர்வம் காட்டினார் என்று காந்தியின் சீடரான பட்டாபி சீதாராமையா (வுhந ர்ளைவழசல ழக ஐனெயைn யேவழையெட ஊழபெசநளள) என்ற நூலின் முதலாவது பாகம்-பக்கம் 437ல்-எழுதியுள்ளார். “இந்த உடன்பாட்டில் உள்ள நிலச்சீர்திருத்தக் கொள்கை குறித்து வல்லபாய் பட்டேலுக்குத் திருப்தியில்லை என்றும், சட்டம் பற்றிய பகுதியில், ஜவகர்லால் நேருவுக்குத் திருப்தியில்லை என்றும், சிறைக்கைதிகளின் விடுதலை பற்றிய பகுதியில் யாருக்குமே திருப்தியில்லை!” என்றும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாருக்குமே திருப்தி தராத அந்தப்பகுதி காந்தி-எர்வின் உடன்படிக்கையின் (ii)ம் பகுதியாகும்.
அப்பகுதி வருமாறு:
“ Soldiers and police convicted of offences involving disobedience of orders. (in the very few cases that have occurred) will not come within the scope of amnesty.”
அதாவது காங்கிரசால் நடாத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற மிகச் சில பொலிசார் மீதும், ராணுவத்தினர் மீதும் அரசாங்கத்தால் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை, இந்த உடன்படிக்கை கட்டுப்படுத்தாது என்பதே இப்பகுதி உணர்த்தும் பொருளாகும்.
இந்த ஒப்பந்தம் 1931ம் ஆண்டு மார்ச் மாதம் 5ந்திகதி கையெழுத்திடப்பட்ட பின்பு 28ம் திகதியளவில் கராச்சியில் காங்கிரஸ் மகாநாடு நடைபெற இருந்தது. இந்த இடைவெளியில் திரைமறைவில் நடைபெற்ற விடயங்களை இப்போது பார்ப்போம்.
1929ம் ஆண்டு ஏப்பிரல் 8ம் திகதியன்று சட்டசபை வெடிகுண்டுச் சம்பவம் நடைபெற்றபோது பகத்சிங் மக்களிடையே புகழ்பெற்றவராக இல்லை. ஆனால் 1931ம் ஆண்டுக்குள் பகத்சிங்கின் புகழ் உச்சநிலையை அடைந்தது. இந்தியா முழுவதும் பாமர மக்களிடையே கூட பகத்சிங் பற்றிய வீரக்கதைகள் பேசப்பட்டன. அந்த நேரத்தில் காந்தியின் புகழ் அளவிற்கு பகத்சிங் இணையாக புகழ் பெற்றிருந்தார் என்று காங்கிரஸ்கட்சியின் அதிகாரபூர்வ வரலாற்று ஆசிரியரான பட்டாபி சீதாராமையா,
The History of Indian National Congress நூலின் முதலாவது பாகம், 456வது
பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில் பகத்சிங்கின் புகழைக் கண்டு ஆங்கில அரசாங்கமே கலங்கி நின்றது. பகத்சிங்கின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.
இந்தவேளையில்தான் காந்தி -எர்வின் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகின்றது. காந்தி-எர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டாலும் ‘பகத்சிங்கின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தாலேயன்றி, மார்ச் மாத இறுதியில் கராச்சியில் கூடவிருக்கும் காங்கிரஸ் மாநாடு ஒப்பந்தத்தை ஏற்காமல் போகும் வாய்ப்புகள் தென்படுகின்றன’ என்று இரகசியப் புலனாய்வுத் துறை, எர்வின் பிரபுவின் செயலாளரான எமர்சன் என்பவருக்கு குறிப்பு அனுப்பியது.
ஆதாரம்; NAI –File No. Home/Poll/4/21/1931 (P.27(I)
இந்தச்சூழலை நன்கு விளக்கி எர்வின் பிரபுவின் செயலாளரான எமர்சன் 15-3-1931 அன்று காந்திக்கு ஒரு கடிதத்தை எழுதுகின்றார். பகத்சிங்கை, கராச்சி காங்கிரசுக்கு முன்பாகவே தூக்கில் போட்டு விடுவது குறித்து அக்கடிதத்தில் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. ஆதாரம்: ஐடீசுனு (IBRD (Page 28))
இங்குதான் இந்திய அரசியல் சரித்திரத்தில் ஒரு பெரிய மாற்றம் நடைபெற்றுள்ளது பகத்சிங்கின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்பதற்குப் பதிலாக, இந்தத் தண்டனையை எப்போது நிறைவேற்றலாம் என்றுதான் மகாத்மா காந்தி ஆங்கில அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ள விடயம், அரசாங்க கோப்பில் உள்ளது. – The Tribune, 09-04-1931.
பட்டாபி சீதாராமையாவும் இதனை ஒப்புக் கொள்ளுகின்றார். கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கூட்டம் முடியும்வரை பகத்சிங் முதலானோரது தூக்குத்தண்டனையை ஒத்திப்போடுவதற்கு ஆங்கிலேய அரசு தயாராக இருந்த போதிலும், காந்தியாரோ அந்த இளைஞர்களை காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்னரேயே தூக்கிலிடுவதுதான் நல்லது என்று உறுதியாக கூறிவிட்டதாகவும் சீதாராமையா எழுதியுள்ளார். அந்த வரிகளை அப்படியே தருகின்றோம்.:
"Ganthi himself definitely stated to the Viceroy that, if the boys should be hanged, they had better be hanged before the Congress, than after.”
அதாவது அப்போது நடைபெற இருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னரேயே இந்த இளைஞர்களைத் தூக்கிலிடலாம் என்று காந்தியார் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து எமர்சன் 20-03-1931 அன்று காந்திக்கு எழுதிய கடிதத்தில், பகத்சிங் தண்டனை குறித்து நேற்றிரவு உங்களோடு பேசியபடி. . . என்று தொடங்குகின்றார்.
அக்கடிதத்தில், அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றிப் பேசப்பட்டுள்ளது. பகத்சிங்கின் தண்டனையைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசவிருக்கும் கூட்டம் அது. அக்கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, அது மக்கள் மத்தியில் பெரும் உணர்ச்சியைத் தூண்டக்கூடும் என்பதனால், அதனை எப்படி ஒதுக்குவது என்று காந்தியிடம் அக்கடிதத்தில் யோசனை கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்திற்குக் காந்தி உடனடியாகப் பதில் அளிக்கின்றார்.
அதன் தமிழாக்கம் வருமாறு: திகதி மார்ச் 20, 1931..
என் அருமை எமர்சன்,
சற்று நேரத்துக்கு முன்பு பெறப்பட்ட தங்கள் கடிதத்துக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்ட அக்கூட்டம் பற்றி நான் அறிவேன். என்னால் இயன்ற எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன், என்பதோடு, விரும்பத்தகாத எதுவும் நடைபெறாது என்றும் நம்புகின்றேன். . . என்று மேலும் எழுதி, எம்.கே. காந்தி என்று கையொப்பம் இட்டுள்ளார்.
இதேவேளை, பகத்சிங்கின் தந்தையான கிஷன்சிங், தாளாத பாசத்தின் காரணமாக ஆங்கிலேய அரசிற்கு கருணைமனு ஒன்றைக் கொடுத்து, பகத்சிங்கை விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தார்.
இதனைக் கேள்வியுற்ற பகத்சிங் மிகவும் கோபமடைந்தார். அவர் தனது தந்தைக்கு எழுதிய நீண்ட, கடுமையான பதில் கடிதம் அவருடைய தியாகத்தையும், துணிவையும் காட்டுகின்றது. அக்கடிதத்தில் ஓரிடத்தில் அவர் இவ்வாறு எழுதுகின்றார்.
“நான் எனது முதுகில் குத்தப்பட்டதாக உணருகின்றேன். இதே காரியத்தை வேறு யாரேனும் செய்திருந்தால் அது துரோகத்திற்குச் சற்றும் குறைவானதல்ல என்றே கருதியிருப்பேன். ஆனால் உங்களைப் பொறுத்தவரையில் இது மிக மோசமான பலவீனம் என்றே சொல்லுகின்றேன்.”
23-3-1931 அன்று இரவு 7-33 மணிக்குச் சாவைச் சந்தித்த கடைசி நிமிடம்வரை பகத்சிங்கும் அவரது தோழர்களும் உற்சாகமாகவே இருந்தார்கள். இறுதி நேரத்திலும் பகத்சிங், மங்கிய வெளிச்சத்தில், மங்காத ஆர்வத்துடன் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். அது தடை செய்யப்பட்ட ஒரு சிவப்புப் புத்தகம்.- லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்.”
அந்த இறுதிநேரம் வந்தது. தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல காவலர்கள் வந்து கதவைத் தட்டுகிறார்கள். அவர்கள் பக்கம் திரும்பி பகத்சிங் கேட்கின்றார்., “இன்னும் இரண்டு பக்கங்கள் தான் பாக்கி இருக்கின்றன. படித்துக்கொள்ளட்டுமா?’
பிரமித்து நிற்கிறார்கள் காவலர்கள். எப்படிப்பட்ட மனிதன் இவர்? லெனினின் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு, தூக்குமேடையை நோக்கி நடந்து செல்கின்றார் பகத்சிங்.
மாஜிஸ்ரேட், சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், போன்ற உத்தியோகத்தர்கள் முன்புறமுள்ள பெரிய வாயில்வழியாக வராமல் விசேட விசாரணைக்கோட்டுக்குப் போகும் வழியாக உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்த பகத்சிங்,‘நீங்கள் பாக்கியசாலிகள்! இந்திய மண்ணின் வீரர்கள், தங்கள் நாட்டின் விடுதலைக்காக புன்னகையோடு சாவைத்தழுவும் காட்சியை நேரில் பார்க்கும் புண்ணியம் உங்களுக்கு
கிடைத்திருக்கிறது’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
தூக்குமேடையில் பகத்சிங் நடுவில் நின்றார். ராஜகுரு அவருக்கு வலது பக்கத்திலும், சுகதேவ் அவருக்கு இடது பக்கத்திலும் நின்றார்கள். சுருக்குக் கயிறு அவர்கள் மீது மாட்டப்பட்டபோது அவர்கள் அதை முத்தமிட்டார்கள். மூவரும் ஒருவரையொருவர் கடைசித் தடவையாக தழுவிக் கொண்டு தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள். பேசத் தொடங்கிய ஒரு நிமிடத்துக்குள் தூக்குப்பலகை தட்டி விடப்பட்டது. பகத்சிங் ஒரு கணத்தில் உயிர் இழந்தார். அவரைவிட மெலிந்திருந்த மற்ற இருவரும் மரணமடைய மேலும் இரண்டொரு விநாடிகளாயின.
இத்தகைய உயரிய விடுதலை வீரனுக்கும், அவனது தோழர்களுக்கும் எமது சிரம் தாழ்த்திய வணக்கங்கள்
அன்புக்குரிய நேயர்களே..
இந்தக் கட்டுரையில் தரப்பட்ட கருத்துக்கள் பல ஆய்வு நூல்களிலிருந்தும், உண்மையான ஆவணங்களிலிருந்தும் சம்பந்தப் பட்டவர்களின் கடிதங்களிலிருந்தும் பெறப்பட்டவையாகும். கிட்டத்தட்ட 24 தமிழ் நூல்களும், 22 ஆங்கில நூல்களும், 130 அடிக்குறிப்புக்களும் அடித்தளமாக அமைந்தன. முழுமையாகத் தொகுத்து அளிப்பதற்கு ‘பகத்சிங்கும் இந்திய அரசியலும்’ என்ற நூலும் 1931ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘வீரத்தியாகி சர்தார் பகத்சிங்’ என்ற நூலும் பேருதவி புரிந்தன. பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியற் தலைவர்கள், ஆங்கில அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் போன்றவர்களின் குறிப்புக்களும், கடிதங்களும் எமக்குப் பல விடயங்களைப் புரிய வைக்க உதவின.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது நன்றிகள்...