அனைத்து வயதினரையும் பாதித்து வரும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இதயநோய் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கோபமே காரணமாக உள்ளது. கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கிவிடுகின்றன. மேலும், அடிக்கடி கோபம் ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சூடாக இருப்பது போன்ற ஒருவித உணர்ச்சி, முகத்தில் ஒருவித வெறி, மனம் அமைதியின்மை ஆகியன ஏற்பட்டு சமூகத்தில் இருந்து ஒதுங்க ஆரம்பிக்கின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். உடலில் பித்தத்தின் அதிகரிப்பால் தோன்றும் இந்த கோபத்தை பித்தபிரமேகம் என்று மனம் சார்ந்த நோயாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது. உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி.
சிவப்புநிற பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது. காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன. இதே குடும்பத்தைச் சார்ந்த செம்பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும். செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும். செம்பருத்தி செடிகளின் பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.
செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து, அம்மியில் வைத்து மைய அரைத்து, அரைநெல்லிக் காயளவு உருண்டையாக உருட்டி, பாலுடன் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 5 நாட்கள் உட்கொண்டு வர தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.
செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம், நெல்லிவற்றல்-1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும், செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைசூடு தணியும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.