இந்தக் கேள்வி காலம் காலமாகக் கேட்கப்பட்டு வருகின்றது. ஆனால் நேரடியான பதில்தான் இல்லை.
முதலில் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் கடவுளை நம்புகிறவன். தினமும் காலை குளித்து முடித்தவுடன் கடவுள்கள் படங்களுக்கு முன் நின்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு, நெற்றி நிறைய விபூதி பூசுகிறவன். ஆனாலும் இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் தோன்றிக் கொண்டு இருக்கிறது.
சூரியன் இருக்கிறானா, சந்திரன் இருக்கிறானா என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. அவை கண்ணுக்கு முன்னால் தெரிகின்றன. அவைகளின் செயல்களை உணருகிறோம். ஆகவே அவைகளின் இருப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.
ஆனால் கடவுள் அப்படியில்லை. கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. பார்த்தாகச் சொல்பவர்கள் ஒன்று பொய்யர்கள் அல்லது மனப்பிராந்தி பிடித்தவர்கள்.
அப்படியானால் கடவுள் என்ற ஒரு தத்துவம் எப்படி உருவாகியது? இது மிகவும் ஆராய வேண்டிய கேள்வி.
கடவுளை உருவாக்கியவர்கள் யார்? ஏன் உருவாக்கினார்கள்? அது மக்களை எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தீர்க்கமான பதிலை இந்த சிறு பதிவில் முடிக்க முடியாது. தவிர அந்த அளவிற்கு எனக்கு ஞானமும் இல்லை.
ஆனால் நான் ஒரு சராசரி அறிவுள்ள ஒரு மனிதன். பல ஆன்மீகப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். பல ஆன்மீகப் பிரங்கங்களைக் கேட்டிருக்கிறேன். பல சாமியார்களின் நடவடிக்கைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் காலில் விழுந்தும் இருக்கிறேன்.
இந்த பின்புலத்தில் என் மனதில் தோன்றும் கேள்விகளையும் அதன் பதில்களாக என் மனதில் தோன்றும் எண்ணங்களையும்தான் இங்கே பகிர்கிறேன்.
ஆதி மனிதனைக் கடவுள்தான் படைத்தார் என்ற விவாதத்தில் நம்பிக்கைதான் ஆதாரமே தவிர வேறு எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது.
இன்றும், கடவுளைக் காட்ட முடியுமா என்றால் அது அவரவர் நம்புக்கையின்பாற்பட்டது என்றுதான் சொல்லுகிறார்களே தவிர கடவுளைக் காட்டுவார் யாரும் இல்லை.
கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் அவர் எல்லோருக்கும் பொதுவானவர் ஆகத்தானே இருந்திருக்க வேண்டும்?
ஏன் இந்துக்களுக்கு ஒரு கடவுள் (ஒருவரல்ல, எண்ணிலடங்காத கடவுள்கள்), இஸ்லாமியர்களுக்கு ஒரு கடவுள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுள் என்று இருக்கிறார்.
ஆதியில் ஒரு மனிதனிலிருந்துதானே மற்ற எல்லோரும் உற்பத்தியானார்கள்?
அப்போது முதல் மனிதனை உண்டாக்கிய கடவுள் ஒருவர் தானே இன்று வரையில் இருக்க வேண்டும்?
ஏன், எப்படி இத்தனை கடவுள்கள் உண்டானார்கள்?
ஆகவே கடவுள் என்பவர் மனிதனால் உருவாக்கப்பட்டவர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவரவர்கள் தங்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப கடவுள்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதுதான் முழுமுதற்கடவுள் என்று நம்பி வழிபட்டார்கள்.
தங்களின் மனம் சலனமடையும் போது ஒரு ஊன்றுகோலாக கடவுளைப் பயன்படுத்தினார்கள். இன்னும் வழிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் கடவுளைக் காட்டி, மக்களை ஏமாற்றுகிறார்களே, அவர்களை என்ன செய்யலாம்?
அப்படி கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்புகிறார்களே அவர்களைப்போல் முட்டாள்கள் யாராகிலும் உண்டா?
கடவுளை நம்பினால் நம்புங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை மூளைச்சலவை செய்து அடிமைகளாக்கி விடுவார்கள். உங்கள் வாழ்க்கையை இழந்து விடுவீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள்.
வாழக்கையையும் உங்களை நம்பி இருப்பவர்களையும் கோட்டை விட்டு விடாதீர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.