08/10/2018

அட்டாங்க யோகம்...


உலகத்தின் கண் அறிவாளிகளாகிய ஞானிகளால் பிரித்துக் கூறப்பட்ட யோகா தந்திரங்கள் பக்தியோகம், கர்மயோகம், இராஜயோகம், ஞானயோகம் என்று ஒரு சாராராலும்,

கிரியா யோகம், மந்திர யோகம், அடயோகம், லயயோகம் என்று மற்றொரு சாராராலும்.

சாங்கியம், தாரகம், அமனஸ்கம் எனப் பிறிதொரு சாராராலும் வழங்கப்படுகின்றன.

இராஜ யோகத்தில் பதஞ்சலி முனிவர் யோகத்தின் எட்டு படிகளை விளக்கி உள்ளார்.

இந்த எட்டு நிலைகளும் வரிசைக்கிரமமாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. ஒரு நிலை முடிவடையும் தருணத்தில் மறுநிலை ஆரம்பமாகும். முதல் நிலை, இரண்டாம் நிலை என எட்டு நிலைகளையும் ஒவ்வொன்றாகக் கடக்க வேண்டும். ஒரு நிலை முடிந்தவுடன் அடுத்தது. ஒரு நிலையைப் பயிலாமல் அடுத்த நிலைக்குச் செல்லவியலாது.

எடுத்தவுடனேயே யோகாசனம் செய்தலோ அல்லது தியானத்தில் ஈடுபடுதலோ யோகத்தின் உரிய பலனைத் தராது. விடாமுயற்சியும், தொடர்பயிற்சி செய்வதன் மூலம் இந்த எட்டு யோக நிலைகளும் வசமாகும்.

எட்டு நிலைகளைக் கொண்டுள்ளதால் இது சமசுகிருதத்தில் அஷ்டாங்க யோகம் (அட்டாங்க யோகம்) என்று விளக்கப்படுகிறது.

அட்டாங்கத்தின் கருத்தினைத் திருவருட்பிரகாச வள்ளலார் "வருகைக் கண்ணி"யில் குறிப்பிடுவதாவது.

எட்டும் இரண்டும் என்றிட்டு வழங்குதல்
எட்டுபடி செய்தீர் வாரீர்
எட்டுரு வாயினீர் வாரீர்
எட்டுரு என்பது அகர உரு.  அகரமே ஜீவன்.   - வள்ளலார்

சாதியையும் ஒப்பற்ற சுடராயுள்ள ஆண்டவன் தேகத்துகுள்ளிருக்கும் ஜீவனுமாகும்.

எட்டு என்பது தமிழில் "அ" அத்துடன் "ரு" சேர்த்தால் "அரு" என்று ஆகும்.  அரு என்பது அணு.  அணு என்பது ஒளி.  இதனை அணுவில் அமைந்த பேரொளியே என்று வள்ளற்பெருமான் குறிப்பிட்டுருப்பதும் சிந்திக்கத்தக்கது.

எட்டுருவாகிய அணுவில் அமைந்த பேரொளியை உள்ளத்தில் அறிந்து, அதில் நினைவை ஒன்றுபடுத்தி தியானிப்பதுவே அட்டாங்க யோகமாகும்.

தகுந்த ஆசாரியன் மூலம் மெய்ஞானம் உபதேசம் பெற்று மெய்ப்பொருள் அறிந்து திருவடி தீட்சை பெற்று தவம் செய்கையில் இவை கைகூடும்.

அட்டாங்க யோகத்தை பற்றி நாம் பார்ப்போம்.

திருமந்திரம்...

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகுதாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே
 - திருமூலர்  (552)...

நன்மையைக் கொடுக்கும் அட்டாங்க யோகமாவது...

1. இயமம்.
2. நியமம்.
3. கணக்கற்ற ஆசனங்களும்.
4. ஊதியத்தைத் தரும் பிராணாயாமம்.
5. பிரத்தியாகாரம்.
6. வெற்றியைத் தரும் தாரணை.
7. தியானம்.
8. சமாதி  -  என எட்டு வகைப் படும்.

அடுத்தடுத்து ஒவ்வொன்றாக பார்ப்போம்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.