29/11/2018

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழினத்துக்கு யாரும் செய்யாத துரோகத்தைச் செய்த தமிழக அரசு; வேல்முருகன் விமர்சனம்...


ஸ்டெர்லைட் ஆலையை மூடிடக் கொள்கை முடிவெடுத்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அதன் நிர்வாகம் தொடுத்த வழக்கில் ஒவ்வொரு நிலையிலும் தமிழக அரசு தோல்வியையே சந்தித்தது. முதலில் தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்குத் தடை கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது.

ஆனால் ஆலையின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன், ஆலையை ஆய்வு செய்யவும் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கைப்படியே அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது..

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு சீராய்வு மனு தொடுத்தது. அது விசாரணையில் இருந்துவரும் நிலையில் திங்கள்கிழமை தருண் அகர்வால் குழு தனது ஆய்வறிக்கையை 48 கவர்களில் வைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.

இந்நிலையில் தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்குத் தடை கோரி தொடக்கத்தில் தமிழக அரசு தொடுத்த மனுவையுமே தள்ளுபடி செய்தது.

இதன்மூலம் ஆலையை மீண்டும் திறக்கத் தடையில்லை என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இந்த சூழல் ஏற்பட்டதற்குக் காரணம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, தமிழக அரசாக, தமிழ் மக்களின் அரசாக இல்லாமல், பிரதமர் மோடியின் பாஜக அரசாக செயல்பட்டதே. அதனால்தான் தமிழினத்திற்கு இதுநாள் வரை எவராலும் செய்யப்படாத இரண்டகம் செய்யப்பட்டிருக்கிறது.

13 பேரைச் சுட்டுக் கொன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக சீல் வைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஆலையை மீண்டும் திறக்கக் கோரும் நிர்வாகத்தின் வழக்கை எதிர்கொள்வதாகப் போக்குக் காட்டி கடைசியில் சீராய்வு மனுவுக்கு வந்து, அதுவும் தள்ளுபடி என்பதை வேறு எப்படிச் சொல்ல முடியும்?

இப்போது, அடுத்து என்ன செய்யப்போகிறது அதிமுக அரசு என்பதைவிட, அது என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமானது. ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவெடுத்த அப்போதே, அமைச்சரவை கூடி கொள்கை முடிவெடுத்துதான் அதனை மூட ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாததுதான் இத்தனைக்கும் காரணம்.

எனவே இப்போதாவது உடனடியாக அமைச்சரவை கூடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடிடக் கொள்கை முடிவெடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும். அதுவே முன்னர் செய்த இரண்டகத்தைத் துடைப்பதாக இருக்கும்" என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.