30/11/2018

சென்னை மாணவியின் வறுமை டாக்டர் கனவை தகர்த்தது பிலிப்பைன்சில் மருத்துவம் படித்தார் பிளாட்பாரத்தில் இட்லி விற்கிறார்...


ஆலந்தூர்: பிலிப்பைன்சில் மருத்துவம் படித்த மாணவி குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் முடித்து கொண்டு, சென்னையில்  பிளாட்பாரத்தில் இட்லி விற்று வருகிறார். பெற்றோரை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவியாக இருப்பதாக கண்ணீருடன்  தெரிவித்தார். சென்னை பழவந்தாங்கல், பக்தவச்சலம் நகர், பிரதான சாலையில் வசிப்பவர் பழனிசாமி (48). இவர் சைக்கிளில் தெரு தெருவாக சென்று  டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம், வெண்ணாந்தூர். அங்கு மளிகை கடை நடத்தி வந்த அவர் கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சொந்தமான ஒரு கிரவுண்டு நிலத்தை விற்றுவிட்டு சென்னைக்கு குடும்பத்துடன் பிழைப்பு தேடி வந்தார்.

இவருக்கு வனிதா (43) என்ற மனைவியும். கிருபா (21), கவுசல்யா (19), கவுரி (17) என்ற மூன்று மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகள் கிருபா  2015ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 980 மதிப்பெண்கள் பெற்றார். டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டு தனது விருப்பத்தை தந்தையிடம் கூறினார். மகளின்  ஆசையை நிறைவேற்ற விரும்பிய பழனிச்சாமி சொத்தை விற்று வைத்திருந்த பணத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில்  படிக்க 5 லட்சம் பணத்தை கட்டி கிருபாவை சேர்த்தனர். முதலாம் ஆண்டு படிப்பை புனேவில் முடித்த கிருபா 2ம் ஆண்டு படிப்பினை  பிலிப்பைன்ஸ்சில் தொடர்ந்தார்.

ஆண்டுக்கு 3 லட்சம் மருத்துவ கல்வி கட்டணமும், மாதம் 15 ஆயிரம் ஹாஸ்டல் கட்டணமும் செலுத்த வேண்டும். இவற்றை 2 ஆண்டுகள் மட்டும்  கிருபாவின் தந்தையால் கட்ட முடிந்தது. 3ம் ஆண்டு படிப்பை தொடர வேண்டும் என்றால் கண்டிப்பாக கட்டணம் செலுத்தவேண்டும் என்று கல்லூரி  நிர்வாகம் கூறிவிட்டது. இதனால், மனமுடைந்த கிருபா தனது தந்தைக்கு தொல்லை கொடுக்க விரும்பாமல் மருத்துவ படிப்பை பாதியிலேயே  நிறுத்திவிட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில், தற்போது கிருபா தனது தாயார் வனிதாவுக்கு துணையாக பழவந்தாங்கலில் ஒரு பள்ளக்கூடம்  எதிரில் உள்ள பிளாட்பாரத்தில் தள்ளுவண்டி கடையில் இட்லி தோசை விற்கும் தொழிலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவ மாணவி கிருபா கூறியதாவது: முதலில் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டது எனது மிகப்பெரிய தவறு. சேலத்தில் ஒழுங்காக  மளிகை கடை நடத்தி சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த எங்கள் பெற்றோர் எனது விருப்பத்திற்காக தொழிலை விட்டு, சொத்தை விற்று சென்னைக்கு  வந்தோம். இப்போது தனது தந்தை தெருதெருவாக சைக்கிளில் டீ விற்று வருகிறார். தாயார் தள்ளு வண்டியில் டிபன் விற்கிறார். என்னால் தான் இந்த  நிலைக்கு அவர்கள் வந்ததால் தற்போது அவர்களுக்கு உதவியாக தள்ளுவண்டிக்கடையில் வேலைசெய்து வருகிறேன்.

எனது முதல் தங்கை கவுசல்யா மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 4 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார். கடைசி தங்கை கவுரி  இங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். டாக்டர் படிப்பை தொடர வேண்டுமே என்ற ஆசை உள்மனதில் இருந்தாலும் எங்கள் குடும்ப நிலையை  நினைத்து அவர்களுக்கு உதவியாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். எனது தந்தை தாயாரும் நானும் என்னதான் உழைத்தாலும் வரும்  வருமானம் வாடகைக்கும் சாப்பாடு மற்றும் கரன்ட் பில்லுக்குமே சரியாக உள்ளது.இவ்வாறு அவர் கண்கலங்கியபடி கூறினார்.

கருணை காட்டினால் நன்றியோடு இருப்பேன்... பழனிச்சாமி கூறுகையில்...

எனது மகளை டாக்டராக ஆக்கி பார்க்க ஆசைப்பட்டேன் அது முடியவில்லை, எனது மகள் தள்ளுவண்டியில் தோசை  சுடுவதை பார்த்து பலரும் வருத்தப்படுகிறார்கள். தாராளம் மனம் கொண்டவர்கள் என் மகளின் மருத்துவ படிப்பு செலவினை ஏற்றால்  நன்றியுள்ளவர்களாக இருப்போம்  என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.