பண்டைத் தமிழ் இலக்கியங்ளில் தோற் கருவிகள் பல கூறப்படுகின்றன.
அவை: பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண் விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை முதலியன.
இவற்றின் பெயர்கள் யாவும் உருவத்தாலும், ஒலியாலும் அமைந்தவையாகும்.
இவற்றுள் மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, படகம், குடமுழா என்பவை இசைப்பாடலுக்குக் பக்க வாத்தியங்களாக உள்ளவை. இவை அகமுழவு எனப்படும்.
தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் என்பவை மத்திமமான கருவிகளாகும். இவை அகப்புற முழவு எனப்படும்.
சல்லிகை, கரடிகை என்பவை ஓசையினால் பெயர் பெற்றவை. மத்து என்னும் ஓசையினால் மத்தளம் என்ற பெயர் உண்டாயிற்று. சல் என்னும் ஓசையையுடையதால் சல்லிகை என்று பெயர். கரடி கத்தினாற்போல் ஓசையுடமையால் கரடிகை என்ற பெயர்.
இடக்கை, ஆவஞ்சி என்றும், குடுக்கை என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இடக்கையால் வாசிக்கபடுவதால் இடக்கை என்றபெயர் பெற்றது. ஆவின் தோலால் போர்த்தப்பட்டதால் ஆவஞ்சி என்ற பெயரையும், குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை என்றும் பெயர் உண்டாயின.
உறுமல் ஒலியை எழுப்புவது உறுமி. பம்பம் என்று ஒலிப்பது பம்பை. முர் முர் என்று ஒலிப்பது முருடு. மொகு மொகு என்று ஒலிப்பது தமருகம்.
தோற்கருவிகளுள் மிகவும் பெருமை வாய்ந்தது முரசு ஆகும். இது வீரமுரசு, கொடை முரசு, மண முரசு, என்று மூவகைப்படும். போரில் தோல்வியுற்ற பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டி, முரசாகச் செய்து வெற்றி முழக்கம் செய்வது வீர முரசாகும். புலியோடு போராடி, அதனை தன் கூர்ங்கோட்டால் குத்திக் கொன்று, கொம்பில் மண்ணுடன் பாய்ந்து சென்று உயிர் விட்ட இடபதத்தின் மயிர் சீவாத தோலைப் போர்த்திச் செய்யப்படுவது மயிர்கண் முரசம் என்று நூல்கள் கூறுகின்றன. பண்டைத் தமிழரசர் இம்முரசினைத் தெய்வத் தன்மையுடையதாகப் போற்றி வந்தனர். இதனை நாளும் இசை முழக்கத்துடன் நீர்த்துறைக்கு எடுத்துச் சென்று நீராட்டி, மாலை சூட்டி அலங்கரித்து வழிபாடு செய்வர்.
போர்களத்தில் வீரவெறியூட்டும் தோற்கருவிகள் பல இருந்தன. அவற்றுள் சில பறையும், பம்பையும், தடாரியும், முழவும், முருடும், கரடிகையும், திண்டியுமாம். இவ்விசைக்கருவிகள் யாவும் சேர்ந்து முழங்கும்போது வீரரது தலை சுழலும், நரம்புகள் முறுக்கேறும். போர் வெறிக்கொண்டு செருக்களம் நோக்குவர்.
சிலப்பதிகாரத்தில் 30 வகையான தோற்கருவிகள் கூறப்பெற்றுள்ளன. அவற்றுள் வல்லோசையுள்ள வன்மைக் கருவிகள் 14; வன்மையுமின்றி மென்மையுமின்றிச் சமமான ஓசையுள்ளவை நான்கு, மெல்லோசையுள்ளவை 12 என வகுத்து, அவற்றையே உத்தம கருவிகள், அதமக் கருவிகள் என்று வகுத்துக் கூறப் பெற்றுள்ளன.
இவ்வாறு வகுக்கப் பெற்றுள்ள பிரிவுகளில் மிக்க வன்மையும், மிக்க மென்மையுமின்றி, சமமான ஓசையுடைய நான்கில் ஒன்றாகவும்,உத்தமமான கருவியாகவும் கொள்ளப் பெற்றுள்ளது 'மத்தளம்' என்ற தோற்கருவியாகும்.
மத்தளம் என்னும் தோற்கருவியைச் செய்வதற்கு வேங்கை, கருங்காலி, பலா, சிலை, மலையாத்தி, வேம்பு, செம்மரம் என்ற 7 வகை மரங்களும் ஏற்றவை. இவற்றுள் ஒரே வகை மரத்தில் 48 விரல் நீளம், இடப்புறத்தில் 14 விரல் அகலம், வலப்புறத்தில் 13 விரல் அகலம், வட்டம் 1/2 விரல் கனமும் உடையதாக அமைத்து மத்தளம் செய்யப் பெற வேண்டும் என்றும், மரத்தினால் செய்யப்பெற்ற அதன் இருப்புறங்களும் தோலால் மூடப் பெறுதல் வேண்டும் இழுத்துக் கட்டுதல் வேண்டும் என்றும் கூறப்படும் செய்திகளைப் பின்வரும் பாடல்கள் விளக்கும்
"வேங்கை கருங்கா வீறாம் பலாவுசிலை
தாங்கும் மலையாத்தி தானாகும்- பாங்கு நிம்பம்
செம்மரமும் ஆமே சிறப்புடைய மத்தளத்துக்கு
இம்மரம் என்று இயல்பு"
"உண்மை திகழும் விதிவத்துற்ற மரத்தால் நாற்பத்
தெண்விரலின் நீளம் இடப்புறத்தில்- நண்ணும்
பதினால் விரல் வலம்பாற் பண்பு பதின்மூன்றாய்
மதியாரை விரற் பிண்டமாம்"
இம்மத்தளமும் இக்காலத்துள்ள மிருதங்கமும் பெரும்பாலும் ஒன்றே என்று கூறலாம். இரண்டும் உருவ அமைப்பில், கையாளும் முறையில் ஒத்துள்ளன. ஆனால் ஒலிப்பதில் மட்டும் வேறுபாடு உண்டு. மத்தளம் மிருதங்கத்தை விட ஓசை மிக்கது. மத்தளம் வெளியிடங்களில் வாசிக்க ஏற்றது. நுட்பமான சுருதி பேதங்களுக்கு அதில் இடமில்லை. மிருதங்கத்தின் ஓசை மென்பையானது. அடக்கமான இடங்களில் வாசிப்பதற்கு ஏற்றது. நுட்பமான சுருதி பேதங்களுக்கு இடமுண்டு. எனினும், வடிவத்திலும், உருவாக்கும் வகையிலும், கையாளும் முறையிலும் இரண்டும் ஒத்துள்ளன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.