23/12/2018

தமிழினமும் புத்தாண்டு குழப்பமும்...


நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்கு தமிழ்ப் புத்தாண்டு...

தமிழருக்கு தொடராண்டு இல்லை. தற்பொழுது நாம் கடைப்பிடிப்பது சித்திரை மாதம் முதல்நாள்.

அத்துடன் தை முதல் நாளைப் புத்தாண்டு பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

மற்றைய இனத்தவர் களுக்கு புத்தாண்டு ஒன்று தான். தமிழருக்கு மாத்திரம் ஏன் இரு ஆண்டுகள்?

ஆகவே தமிழராகிய நாம் புத்தாண்டு தை முதல் நாளா.. சித்திரை முதல் நாளா என்பதைத் திட்டவட்டமாக முடிவெடுத்து அதைப் பின்பற்ற வேண்டும்.

தற்பொழுது நாம் கொண்டாடும் புத்தாண்டு, சாலிவாகனன் எனும் வடநாட்டு மன்னரால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இவர் கி.பி.78இல் இம்முறையை ஏற்படுத்தினார்.

அவ்வாண்டுகள் பிரபவ விபவ பிரமோதூத என்ற 60 ஆண்டுகள்.

சித்திரை தொடக்கம் சுழற்சி முறையில் வருகின்றன.

இவைகளில் ஒரு ஆண்டு கூட தமிழ்ப் பெயரோ அல்லது தமிழினத்துடன் தொடர்புடைய தாகவே இல்லை.

ஆகவே தான் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுவது முறையல்ல என்று தீர்மானித்து, 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் புலவர்கள் கூடி தமிழர்க்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும் முடிவு செய்தனர்.

ஆனால் அக்காலத்தில் பார்ப்பனர் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந்தமையால், அவர்களின் கடும் எதிர்ப்பால் இம்முடிவை ஒத்திவைக்க நேரிட்டது..

புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை வலியுறுத்துகின்றன..

நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்கு
தமிழ்ப் புத்தாண்டு
தரணி ஆண்ட தமிழருக்குத்
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

தையே முதற்றிங்கள்;
தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று,
பல்லாயிரத்தாண்டாய்த்
தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்.

புதுவருடப்பிறப்பு என்பது மகிழ்வுடன் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள்.

சித்திரை மாதம் தமிழரின் தாயகங்களான தமிழ்நாடு, புதுவை, தமிழீழம் ஆகிய பிர தேசங்களில் சூரிய வெப்பம் அதிகரிக்கும் மாதமாக உள்ளது.
தை மாதம் சூடும் குளிரும் குறைந்த மாதம்.

அத்துடன் விவசாயிகள் அறுவடை முடித்து விட்டதால் தானியங்களைத் தங்களது வீட்டிற்குக் கொண்டு வந்து மனநிறைவுடன் குடும்பத்தினர் அனைவருடனும், நண்பர்களுடனும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று உலகத் தமிழினம் நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.